ரோஜா – குல்கந்த்தின் குண நலன்கள்

Spread the love

பூக்களின் ராணி ரோஜா தான். அதன் அழகும் நறுமணமும் எல்லோரையும் கவரும். காதலர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வதும் ஒற்றை ரோஜா தான். ரோஜா மலர் மருத்துவ குணங்களும் நிறைந்தது.

பல வித வண்ணங்களில் கிடைக்கும் ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கி. கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது. ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்க என்று நீளும் ரோஜாவின் மருத்துவ பயன்களைப்பற்றி தனியாகவே எழுதலாம். இங்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் “குல்கந்து” டானிக்கைப் பற்றி பார்ப்போம். குல்கந்து கடைகளில் கிடைத்தாலும், நாமாகவே வீட்டில் தயார் செய்து கொள்வது உத்தமம். பல கலப்படங்கள் செய்யப்படுவதால், தரமான குல்கந்து கிடைப்பது கடினம்.

வீட்டிலேயே தயாரிக்கும் முறை:-

முதல் முறை

· சிவப்பு ரோஜா இதழ்களை சேகரித்துக் கொள்ள வேண்டும். பல ரக ரோஜாப் பூக்கள் கிடைத்தாலும், குல்கந்து செய்ய சாதாரண ஒரிஜினல் ரோஜா விதை Rosa Centifolia என்ற ரகப் பூக்கள் தான் பொதுவாக பயன்படுகின்றன. நல்ல, தரமான, நிறமுடைய நன்கு பூத்த, பெரிய பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும்.

· இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

· சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும்.

· இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

· நன்றாக லேஹிய பக்குவம் வரும் வரை இடிக்கவும்.

· இந்த லேகியத்தை ஒரு வாயகன்ற பீங்கான் / கண்ணாடி ஜாடியில் போடவும்.

· ஜாடியில் போட்ட லேகியத்தின் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும்.

· குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.

இரண்டாவது முறை

· இந்த முறையில், சுத்தம் செய்யப்பட்ட இதழ்களுடன், அதே அளவு சர்க்கரை சேர்த்து, வாயகன்ற ஜாடியில் வைக்கவும்.

· இந்த ஜாடியை தினமும் வெயிலில் 6-7 மணி நேரம் வரை 3 அல்லது 4 வாரங்கள் வைத்து வரவும்.

· ஒரு நாள் விட்டு ஒரு நாள், மரக்கரண்டியால், ஜாடியில் உள்ள சர்க்கரை + இதழ்களை நன்கு கிளறி விட வேண்டும்.

· மூன்று / நான்கு வாரங்கள் கழிந்த பின், எடுத்துக் கொண்ட ரோஜா இதழ்களில் எடையில் 8 ல் 1 பாகம் எடை அளவில் பவழம் அல்லது முத்தின் களிம்பை சேர்க்க வேண்டும். இந்த களிம்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

· கூடவே 8 ல் 1 பங்கு எடையில், ஏலக்காய் பொடி, வெள்ளி ரேக்கு (Silver foil) சேர்க்கலாம்.

· இவற்றை சேர்த்த பிறகு ஜாடியை வெயிலில் வைக்க வேண்டாம். நன்றாக கிளறி, குல்கந்தை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

அளவு:- சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை மாலை சாப்பிட்டு வரலாம்.

குல்கந்தின் பயன்கள்:

1. உடலின் அதிக பித்த அளவை குறைத்து சீராக்குகிறது.

2. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

3. வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.

4. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி). தவிர குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை காதலர்கள் பயன்படுத்துகிறார்கள் போலும்!

5. மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

6. பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான டானிக் – மருந்து

7. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

குல்கந்தை உபயோகித்து தயாரிக்கும் சர்பத்:-

தேவையான பொருட்கள்:-

குல்கந்து                      – 3 மேஜைக் கரண்டி

பால்                             – 3 கப்

சர்க்கரை                     – 8 தேக்கரண்டி

பாலேடு                       – 3 தேக்கரண்டி

பாதாம் துண்டுகள்      – 1/2 மேஜைக் கரண்டி

செய்முறை:-

குல்கந்து, பால், சர்க்கரை இவற்றை மிக்ஸியில் இட்டு கலக்கவும்.

பாலேடை சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அடிக்கவும்.

கட்டிகளில் ஊற்றி குளிர்வித்து, பாதாம் பருப்பை சேர்த்து, பரிமாறவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love