கீரைகளில் தாதுப் பொருட்கள், வைட்டமின்கள், கரோட்டின் என்ற கண்களுக்குத் தேவைப்படும் இன்றியமையாத பொருள்கள் அதிகளவு உள்ளது. இதன் காரணமாகவே, கீரையை அதிகமாக நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் கண் சார்ந்த நோய்கள் வராமலும் தடுக்கலாம்.
வள்ளலார் மிகவும் சிறப்பித்து பரிந்துரை செய்த கீரைகளில் ஒவ்வொன்றும் பலவித நன்மைகள், சத்துக்கள் கொண்டிருக்கின்றன. அவை,
1. கரிசலாங்கண்ணி
2. தூதுவளை
3. பொன்னாங்கண்ணி
4. புளியாரை
5. முருங்கை
6. பசலை.
அவர் குறிப்பிட்டுள்ள கீரைகளில் ஒவ்வொரு கீரையையும் குறைந்தது 25 நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வர, உடலிலுள்ள சிறு, சிறு கோளாறுகள் நீங்கி விடும் என்று கூறுகிறார். இருமல், சளி, பித்தம் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம், வாயு பிரிதல், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளுக்கு மருந்துகள் எதுவும் சாப்பிடாமல் மேற்படி கீரைகளில் கரிசலாங்கண்ணி, தூதுவளை, புளியாரை இவற்றைச் சாப்பிட்டு வந்தாலே குணமாகி விடும்.
பசலைக் கீரை
பசலைக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு, உடலில் தேவையில்லாத சதையைக் கரைத்து விடும்.உடல் பருமன் நீங்கும்.சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர் ஒழுக்கு, ருசியின்மை, வாந்தியை நீக்கும்.
கரிசலாங்கண்ணியினால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
கரிசலாங்கண்ணி இலைகளை நீரில் கழுவி, வாயில் போட்டு மென்று சாறை விழுங்கச் சக்கையைப் பல் தேய்த்து நாக்கு, உள் நாக்கு உடப்ட வாயில் மேலும் கீழுமாக தேய்த்தோமானால், நரம்பு மண்டலத்தில் தேங்கியுள்ள கபால நீரும், தொண்டையில் உள்ள கோழையும் அந்த நேரமே வெளியேறி விடுகிறது. சுவாசப் பையில் உள்ள சளியும் வெளியேறுகிறது.பித்தப் பை கெட்டுப் போய், பித்தம் இருந்தால், அந்த நேரமே பித்தம் வாந்தியாக வெளியேறி விடும்.அல்லது மலத்துடன் வெளியேறி விடும்.
சிறு நீரும் நன்றாகப் பிரியும். இதன் முடிவு என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளும் பொழுது, கபால நீர் வெளியேறுவதால், நரம்பு மண்டலமும், கோழை கட்டப்படுவதால் தொண்டையும், கபம் வெளியேறுவதால் சுவாசப் பையும், பித்தம் வெளியேறுவதால் கல்லீரலும், பித்தப் பையும், மலம் வெளியேறுவதால் பெருங்குடலும், சிறு நீர் பிரிவதால் சிறு நீரகமும் சுத்தமடைகின்றன. நரம்பு மண்டலம் சுத்தமடைவதால், பிட்யூட்டரி சுரப்பியும், மூளையும் நன்றாக இயங்கும்.தொண்டையும், சுவாசப் பையும் சுத்தம் அடைவதால் சுவாசம் பலம் பெறும்.கல்லீரல் சுத்தமடைவதால் மற்ற சீரண உறுப்புகளான பித்தப் பையும், மண்ணீரலும் கணையமும் நன்றாக வேலை செய்யும்.பெருங்குடல் சுத்தமடைவதால் மலச்சிக்கலால் ஏற்படும் வியாதிகள் நமக்கு நேரிடாது.
நரம்பு மண்டலத்தில் கபால நீரும், தொண்டையில் கோழையும், சுவாசப் பையில் கபமும், கல்லீரலில் பித்தமும், பெருங்குடலில் மலமும், மூத்திரப் பையில் சிறு நீரும் தேங்கி அவ்வுறுப்புகள் கெட்டுப் போகின்றன. மேலே கூறப்பட்டுள்ள 6 உள்ளுறுப்புகளையும், ஒரே காலத்தில் சுத்தம் செய்யக் கூடிய ஒரே மூலிகை கரிசலாங்கண்ணி தான். ஒரு மருந்து உட்கொண்டால், அதன் பலன் தெரிய ஓரிரு நாட்களவது ஆகும்.ஆனால், கரிசலாங்கண்ணியின் பலன் அன்றைக்கே தெரிந்து விடும்.
பித்த நீர் பெருக்கி, பித்தகாரி, உரமாக்கி, பலகாரி, உடல் தேற்றி, வாந்தி உண்டாக்கி, நீர், மலம் போக்கி, வீக்கம் உருக்கி, ஈரல் தேற்றி, யகிருத பலகாரி என்று கரிசலாங்கண்ணியை பதார்த்த குண சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.குடல் உறுப்பு நோய், காமாலை, குஷ்டம்.வீக்கம், பாண்டு முதலிய பல நோய்களை போக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.பல் இல்லாதவர்கள் 60 மி.லி.கரிசலைச்சாறு எடுத்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.அல்லது இலைகளை வெண்ணெய் போல நைசாக அரைத்துவிழுங்கி விட வேண்டும்.மதியம் கீரையாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இக்கீரையைப் பருப்புடன் கீரை குழம்பாக வைத்து சாப்பிடலாம்.இதனை சூரணமாக்கி பசுவின் பாலைக் கலந்து காய்ச்சி, காலை உணவாக உட்கொள்ள வேண்டும்.எலும்புகள், பற்கள் சுண்ணாம்புச் சத்து உப்புகளால் உருவாக்கப்பட்டு இருப்பதால், எலும்பு, பற்கள் உறுதி பெறச் சுண்ணாம்புச் சத்து மிகவும் அவசியமாகிறது.சுண்ணாம்புச் சத்து இருந்தால் தான் இதயத்தின் சுருங்கி, விரியும் வேலை ஒழுங்காக நடைபெறும்.கை, கால்களை அசைக்க முடியும்.தசை நார்கள் சரியாகச் சுருங்கி, விரியும் இரத்தம் உறையும்.
முக்கியமாக நரம்புகளுக்கும், இரத்தக் குழாய்களுக்கும், இதயத்திற்கும், சுருங்கி விரியும் தன்மை ஒழுங்காக இருக்க, சுண்ணாம்புச் சத்து உயிர் நாடியாக உள்ளது.சுண்ணாம்புச் சத்துக் குறைவின் காரணமாக இருதய நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. நமது உடம்பின் உள்ளுறுப்புகள் அனைத்தும் எலும்பு தவிர, மற்ற சுவாசப் பை, இரைப்பை, கல்லீரல், பித்தப் பை, மண்ணீரல், கணையம், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம், தசை நார்கள், நரம்புகள், தோல் இவையெல்லாமே சுருங்கி விரியும் தன்மை உள்ளவை. ஆகவே, இவை அனைத்தும் நன்றாக இயங்க வேண்டுமானால், சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை என தெளிவாகிறது.கரிசலாங்கண்ணியைப் போல சுண்ணாம்புச் சத்தும், பாஸ்பரஸூம் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய உணவுப் பொருள் இல்லை எனக் கூறலாம்.இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு வரப்பிரசாதம்.சஞ்சீவி மருந்தும் கூட. கரிசலாங்கண்ணி பித்தத்தை நீக்கும்.காபி, தேனீர் பித்தத்தை உண்டாக்கும்.எனவே, கரிசலாங்கண்ணியை உட்கொள்பவர்கள் காபி, தேனீர் அருந்தக் கூடாது.அருந்தினால் கரிசலையின் பலன்கள் கிட்டாது.காபி, தேனீருக்கு பதிலாக கொத்த மல்லிக் குடி நீரை அருந்தலாம். இதற்கு கொத்த மல்லி விதை அரைக் கிலோ, சுக்குப் பொடி 100 கிராம், ஏலரிசி 25 கிராம் எடுத்து தூசி, கல், மண் நீக்கி வெயில் உலர்த்திப் பொடி செய்து ஓரிரு தேக்கரண்டி அளவு பொடி எடுத்துக் கொண்டு 200 மி.லி. தண்ணீர் விட்டு காய்ச்சிக் கருப்பட்டி சேர்த்துக் கொண்டு அருந்தலாம்.
புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட கரிசாலைச் செடியின் அனைத்துப் பாகங்களையும் (வேர், தண்டு, இலை, பூ) சுத்தமன நீர் விட்டு அலசி, சிறு சிறு துண்டுகளாகி, சற்றே நீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய கலவையை, சுத்தமான மெல்லிய பருத்தித் துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.மேற்கூறிய சாறில் சுமார் 30 முதல் 50 மி.லி.அளவு எடுத்துக் கொண்டு, தினசரி காலை வெறும் வயிற்றில் அருந்தி வர, மஞ்சள் காமலை, இரைப்பை, அலர்ஜி, நீண்ட நாள் இருமல், சருமம் மற்றும் தலை முடிப் பிரச்சனைகள் குணமாகும்.