பசுமையான பட்டாணி

Spread the love

பட்டாணியை பச்சையாக, அதுவும் பிஞ்சு பட்டாணியை, சாப்பிட்டாலே சுவை தான். பல உணவுப் பொருட்களின் சுவையை பட்டாணி கூட்டுகிறது. குருமா, புலாவ், பிரியாணி, உருளைக்கிழங்கு கறி போன்ற பல உணவுகள் பட்டாணியால் சுவை அதிகமாகின்றன.

பட்டாணி ஒரு பழங்காலப் பயிர். கிழக்கு அல்லது மத்திய ஆசியாவில் தோன்றியிருக்கலாம். தென் ஐரோப்பாவிற்கு ரோமர்களால் கொண்டு வரப்பட்டு பிறகு இங்கிலாந்தை அடைந்தது. காடுகளில் தானாகவே விளையும் பட்டாணி தற்போது அதன் பல பயன்களால், தோட்டங்களில் பயிரிடப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் – Pisum sativum

குடும்பம் – Leguminosae

இதர மொழிப் பெயர்கள் – ஆங்கிலம் – Peas (அ) Garden peas.சமஸ்கிருதம் – சஹீலா, இந்தி – மட்டர்.

பட்டாணி ஒராண்டு தாவரம். அதிக ஆழமாக வேர்கள் போகாத இந்த தாவரத்தில் பல ரகங்கள் உள்ளன. சிலவற்றின் தண்டு நிமிர்ந்து வளரும். உயரமாக வளர கொடி போல் படர, சுருள் நுனிகளை கொண்டிருக்கும் சில வகைகள் தரையிலேயே பரவலாக கொடி போல் தவழ்ந்து வளரும். இதன் இலைகள், வேம்பு, புளியமரங்களில் இலைகள் போல, இடையே நரம்பும் அதன் இருபுறங்களிலும் இருக்கும். சிறு இலை அல்லது செதில் போன்ற அமைப்பு இலை அடிவாரத்தில் இருக்கும். பூக்கள் தனியாக அல்லது சிறு கூட்டமாக இருக்கும். பட்டாணி ஒரு “இரு புற வெடிகனி” (Legume) தாவரம். அதாவது இதன் “பழங்கள்” விதைப் பைகள். சிறிது வளைந்திருக்கும். விதைப் பைகளில் வட்டமான, பச்சை பட்டாணிகள்ஒரே வரிசையில் மூன்றோ, நான்கோ அடுக்கி வைத்தால் போல் இருக்கும்.

பட்டாணி செழித்து வளர நல்ல நீர் வசதியுள்ள நிலம் தேவை.

100 கிராம் பட்டாணியில் உள்ளவை

ஈரம், புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், அயச்சத்து, விட்டமின் C‘.

இவை தவிர கேரோடின், விட்டமின்கள் முதலியவை சிறிய அளவில் இருக்கின்றன.

இராசயன பொருட்கள்

பட்டாணியில், புரதங்கள், லெசித்தின் (Lecithins) செல்களில் உள்ள பாஸ்பேட்டுகள்), கார்போஹைடிரேட், கொழுப்புகள், உப்புகள், ட்ரீகேனைலின் (Trigonelline) என்ற ஆல்கலாய்டும் உள்ளன.

பொதுவான குணங்கள்

பட்டாணி சத்து நிறைந்தது. தோல் நோய்களுக்கு எதிரி.

உபயோகப்படும் விதம் – உணவில் பச்சையாகவும் சமைத்தும் பயனாகும். வீக்கங்களுக்கு வைத்து கட்டப்படும் மாவாக, ‘ஆயின்ட்மென்டக (Ointment) பயன்படும்.

பயன்கள்

பட்டாணி சுவையானது மட்டுமல்ல. உடலை வலுவாக்கும். நல்ல எலும்பு வளர்ச்சியை உண்டாக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி தருவது நல்லது. ரத்தம் விருத்தி அடைய பட்டாணி உதவும். பட்டாணி மூளைக்கும் நல்லது.

உணவில் பயன்படுவது போல் பட்டாணி மருத்துவத்திலும் பயன்படுகிறது. சர்ம நோய்கள், புண்களுக்கு நல்ல மருந்து. முகப் பருக்களுக்கும், வறண்ட, சுருக்கமடைந்த சர்மங்களுக்கு, பட்டாணியை அரைத்து தடவிக் கொண்டால் குணம் தெரியும். பல அழகு கீரிம்களில் பட்டாணி சாறு சேர்க்கப்படுகிறது.


Spread the love