திராட்சை எனும் ரத்த ஊக்கி

Spread the love

மனிதன் உயிர் வாழ்வதற்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் மண்ணிலே உண்டு. அந்த மண்ணைத்தின்ன முடியாது. அதனால் தான், அந்த மண்ணின் சக்தியைப் பழம் காய், பூ, இலை போன்ற வடிவங்களில் இறைவன் நமக்காக படைத்தருளியுள்ளார். அவ்வகையில் பழங்கள் தரும் சக்தி அளவிடற்கரியது.

பாரத மக்களைப் போன்று இயற்கை வாழ்வு நடத்தியவர்கள் வேறு யாருமில்லை. பண்டைய உணவு முறையில் இயற்கை உணவுக்குத்தான் முதலிடம் கொடுத்தார்கள். நூறாண்டு காலம் வாழ்ந்த பெரியோர்களின் முத்தான உணவு, கீரைகளும் பழங்களுமே ஆகும்.

உணவு விஷயத்தில் மனிதன் போதுமான கவனத்தைச் செலுத்திப் பழ வகைகளைச் சாப்பிட்டு உடல் நலனைக் காத்து, அதன் மூலம் ஆண்டவனின் அருள் பெறலாம், என்று கூறுகின்றனர் ஆயுர்வேத முனிவர் பரத்வாஜர்.

எனவே, இயற்கையின் இனிய கனிகளே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வகையில் திராட்சைப் பழம் நோய்களைப் போக்குவதிலும் சரி, ஊட்டமான உடல் சக்திக்கும் சரி, நிகரற்ற வகையில் பலனளிக்கிறது.

உலகெங்கும் பரவலாகக் காணப்படும் திராட்சை, பல நூறு ஆண்டுகளாக மக்களின் அன்றாட உணவில் இடம் பெற்றுள்ளது. கிரீஸில் கி.மு. 1000 ஆண்டிலேயே திராட்சை மது உணவுப் பொருளாக விற்கப்பட்டது. தமிழ்நாட்டில் யவனர் வருகையின்போது திராட்சை வந்ததாகக் கருதப்படுகிறது. யவனர் அளித்த மது திராட்சை மதுவெனக் கருதப்படுகிறது. சரளமாகக் கிடைக்கக் கூடியவை கருப்பு, பச்சை, விதையில்லா திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை என பல வகைகளில் அழைக்கின்றனர்.

திராட்சைக் கொடியில் பெரிதும் மருத்துவப் பயன் அளிப்பது கனியேயாகும். திராட்சைக் கனியில் பெருமளவு நீரும், மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துக்களும் உண்டு. இந்தப் பழம் உடலுக்கு மிக்க குளிர்ச்சி தருவது. ரத்தமும் தாதுவும் அபிவிருத்தி அடையும். பித்தத்தை தணிக்க வல்லது. இலை, பழம், வித்து ஆகியன மருத்துவ குணமுடையன. மலத்தை இளக்கும். சிறுநீரைப் பெருக்கிடும். உலர்ந்த திராட்சை உள்ளுறுப்புகளின் அழலைத் தணிக்கும். கோழையை அகற்றும்.

திராட்சைக் கனியை இருவகைகளில் பயன்படுத்தலாம். பசுமையாக இருக்கும் பழங்களைப் பயன்படுத்துவது ஒருவகை. காய்ந்த, உலர்ந்த பழங்களைப் பயன்படுத்துவது மற்றொரு பசுமையான திராட்சைப் பழங்கள் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலின் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சித் தரும்.

ஒரு வயது முடிந்த குழந்தைக்குப் பல்முளைக்கும் போது கழிச்சல் உண்டாகும். ஜலதோஷம், காய்ச்சல் ஆகியனவும் உண்டாகும். அப்போது திராட்சைப் பழத்தைப் பிழிந்து சாறு தினம் இருவேளை, 1 டீஸ்பூன் அளவு கொடுத்து வர, மேற்கண்ட நோய்கள் காணாமல் போகும்.

திராட்சை இலையை மிளகு 6, சீரகம் 2 சிட்டிகை ஆகியவற்றுடன் கஷாயம் வைத்துக் குடித்து வர, அஜீரணத்தால் வரும் பேதி நிற்கும்.

குடல் புண், உள்ளவர்கள் பன்னீர் திராட்சைப் பழச் சாற்றை காலை, பகல், மாலை என மூன்று வேளைக்கு (1 வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் ) சாப்பிட்டு வரவும். குடல்புண் குணமடைவதுடன் வலிமையும் பெறும்.

கீல்வாதம் ரத்த அழுத்தம் உடையவர்கள் கூட இப்பழச் சாற்றைத் தினம் 1 வேளை சாப்பிடுவது நல்லது. கல்லீரல், மண்ணீரல் ஆகிய ஜீரண உறுப்புகளுக்கு திராட்சை வலிமை தருவதுடன், அவை பழுதுபட்டால் அதனை தீர்க்கும் சக்தியும் கொண்டது திராட்சை.

ஈரல் நோய், காசம் மற்றும் காமாலை, பித்த நோய்களால் தாக்குண்ட நாள்பட்ட நோயாளிகள், காபூல் அல்லது பச்சைத் திராட்சையைத் தினம் 100 கிராம் அளவு சாப்பிட்டு வர உடல் வலிமை பெற்றுச் சீக்கிரம் தேறும்.

தினம் உலர்ந்த திராட்சையே அல்லது பச்சை திராட்சையோ சாப்பிட்டு வர ரத்தம் தூய்மை பெறும். மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் தோலின் நிறம் பாதுகாப்புக்குரியதாகும். கபத்துடன் கூடிய வறட்டு இருமல் வந்தால் அதைப் போக்க 20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய்யில் பொரித்து உள்ளுக்குச் சாப்பிட இருமல் குணமாகும்.

இதயப் படபடப்பு, பலவீனம ஆகியவற்றுக்குத் திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊற வைத்து அதன் சாற்றைப் பருகிவர இதயம் வலிமை பெறும். பன்னீர் திராட்சையை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவைத்துப் பின் பிழிந்து அதே அளவு பசும்பால் கலந்து இரவில் பருகிடத் தாது பலம் பெறும்.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வரும் மாதவிடாய்த் தொல்லை தீர, திராட்சை ரசம் தினமும் 3 அவுன்ஸ் வீதம் இருவேளை சாப்பிட்டு வர குணம் பெறலாம். பித்த ஆதிக்கம் உடைய உடம்பினர் இப்பழத்தை தினம் சாப்பிட்டு வர கைகால் எரிச்சல் தலைச் சுற்றல் ஆகியன நீங்கும்.

இவ்வளவு அரிய மருத்துவப் பயன்தரும் “திராட்சை”யின் மகிமையைத் தெரியாத காரணத்தால் தான். இந்தப் பழம் புளிக்கும் என்று குள்ளநரி வெறுத்து ஓடிவிட்டது போலும். குள்ளநரிக்குத் தெரியாவிட்டால் போகிறது, நம்மவர் தெரிந்து கொண்டு அன்றாட உணவுப் பழக்கத்தில் திராட்சையைப் பழக்கிக் கொண்டால் நோய் வராது தடுக்கலாம். வந்த நோயையும் போக்கலாம்.


Spread the love