மூட்டு வலியா? குணப்படுத்தும் கண்வலிக்கிழங்கு

Spread the love

கலப்பைக் கிழங்கு, செங்காந்தள் மலர், கார்த்திகைக் கிழங்கு, நாபிக் கொடி, சூப்பர் லில்லி என்று பலவிதப் பெயர்களில் அழைக்கப்படும் கண்வலிக் கிழங்கானது இந்தியாவை தாயகமாகக் கொண்டது. தமிழ் நாட்டில் திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இதன் மருத்துவப் பயன் காரணமாக, நல்ல விற்பனை விலை கிடைப்பதால் இதன் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தாவரப்பெயர்-குலோரியோசாசூப்பர்ப்பா                                                                                                                                                  

தாவரக்குடும்பப்பெயர்- Colchicaceae

எங்கு வளர்க்கலாம்? எப்படி வளர்க்கலாம்?

நல்ல வடிகால் வசதி நீர்ப்பிடிப்புத் தன்மை கொண்ட முறுமணற்பாங்கான செம்மண், கரிசல் மண் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை அளவு 6 முதல் 7 வரை இருக்க பயிர் செழிப்பாக வளரும். சிறிதளவு வறட்சியைத் தாங்கும். ஆடிப் பட்டத்தில் நடுவார்கள். கிழங்கு நட்ட 180 நாட்களில் பலன் தர ஆரம்பிக்கும். இதன் கிழங்கு க்ஷி வடிவத்தில் காணப்படும். கொடி வகையைச் சார்ந்தது என்பதால் மூங்கில் கம்பு, இரும்பு கம்பிகளைக் கொண்டு ஒரு மீட்டர் அகலத்திற்கு 2 மீட்டர் உயரம் என்ற அளவில் பந்தல் தயாரித்து, அதன் மேல் கொடியை படரச் செய்வது அவசியமாகும்.

நட்ட 30, 60 மற்றும் 90 வது நாட்கள் என களை எடுத்துக் கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் கொடிகள் பூத்துக் காய்க்கும். பூக்கள் ஆரஞ்சு, மஞ்சள் நிறம் கொண்டதாக இருக்கும். கிழங்குகளை நடவு செய்து 55 நாட்களில் பூக்க ஆரம்பித்து விடுவதுடன் 100 முதல் 110 நாட்களில் காய்கள் தோன்றும். 160 முதல் 180 நாட்களில் முற்றிய காய்களை பறித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு காயிலும் 70 முதல் 100 விதைகள் இருக்கும். மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாக விதைகள் மாறும் பொழுது, விதைகளை பிரித்து, 15 நாட்கள் வரை நிழலில் உலர்த்திய பின்பு சுத்தம் செய்து விற்பனைக்கு கொண்டு செல்லலாம்.

மருத்துவத்தில் கண் வலிக்கிழங்கு

‘கோல்ச்சின்’ என்ற வேதிப்பொருளானது கண்வலிக் கிழங்கிலும், விதைகளிலும் உள்ளது. விதைகளில் அதிக அளவு கோச்சின் காணப்படுவதால் அதிகளவு ஏற்றுமதி மூலம் வருமானம் பெற இயலுகிறது. கோல்ச்சின் வேதிப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியம் கொண்ட ‘கோல்ச்சி கோஸைடு’ வேதிப்பொருள் தயாரிக்கப்பட்டு மூட்டு வலிக்கு மிகச் சிறந்த மருந்தாக தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ மதிப்புக் கூட்டப்பட்ட கோலச்சின் இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய் மேல் உலகச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

கவுட் என்னும் மூட்டு வலியில், மிக நுண்ணிய படிகங்களாக யூரிக்அமிலம் மூட்டுக்களில் தேங்கி விடுகிறது. இதன் காரணமாகத்தான் ‘கவுட்’ என்னும் மூட்டு வலி அதிகரிக்கிறது. கண் வலிக் கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் ‘கோல்ச்சி கோஸைடு’ மருந்தானது, யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாக, தங்காத வண்ணம் செயல்பட்டு பாதுகாக்கிறது. இதன் மூலம் மூட்டு வலி ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.

கண்வலிக் கிழங்கு, கருஞ்சீரகம், காட்டுச் சீரகம், கஸ்தூரி மஞ்சள், கார்போக அரிசி, சந்தனத் தூள், கிளியாம்பட்டை, கௌலா அனைத்தையும் சமஅளவு எடுத்து, சிறிதளவு நீர் விட்டு மை போல அரைத்து சொறி, சிரங்கு, ஊறல், படை போன்றவற்றில் தேய்த்துக் குளித்து வர குணம் பெறலாம்.பிரசவ நேரத்தில் சிரமப்படும் கர்ப்பிணி பெண்களுக்கும், நஞ்சுக்கொடி கீழ் நோக்காமல் வேதனைப்படும் நேரத்திலும் பச்சை கிழங்கை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால், தொப்புள், அடிவயிறு முதலிய இடங்களில் தடவி வைக்க உடன் வெளியாகும்.

நஞ்சுக் கொடிக்காக சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது, கருஞ்சீரகம், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, நீர் விட்டு அரைத்து சிறு சுண்டைக்காய் அளவு எடுத்து ஒயின் மதுவில் கலக்கி உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

கண்வலிக்கிழங்கு பச்சைகிழங்காக சுமார் 15 கிராம் அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு, 150 மி.லி. வேப்பெண்ணெய் சேர்த்து சிறு தீயில் எரிக்க வேண்டும். கிழங்குத் துண்டுகள் மிதக்கும் சமயம் பார்த்து அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, வடிகட்டி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை பக்க வாதம், தலைவலி, கழுத்து நரம்புகளில் இசிவு, கணுச்சூலை போன்றவற்றிற்குத் தேய்த்து வர குணம் பெறலாம்.

வயிற்றுப்புண், மூலம், வீக்கம் போன்றவை குணமாகிறது. கண் வலிக்கிழங்கின் இலைகளை எடுத்துச் சுத்தம் செய்த பின்பு நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், கழுத்திலும் பற்று வைத்துக் கட்ட சிறுவர்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா குணமாகிறது. இலைச் சாறை தலையில் தேய்த்துக் குளித்துவர பேன், பொடுகு நீங்கும்.

கா. ராகவேந்திரன்


Spread the love