இஞ்சி

Spread the love

பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் உபயோகப்படுத்தப்பட்ட மூலிகை இஞ்சி ஆகும். இஞ்சி என்பது ஜிஞ்சிபியர் அஃபினாலிஸ் என்ற தாவரத்தின் நிலத்தின் அடியில் இருக்கும் ஒரு வகைத் தண்டு. இது பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கிரேக்கர்கள் பெரிய விருந்துகளில் உண்ணும் உணவை ஜீரணிக்க இஞ்சியை உண்டு வந்தனர். இஞ்சி ஜமாய்க்கா நாட்டிலும் சீனாவிலும் முதன் முதலாகத் தோன்றியதாக பண்டைய வரலாறு கூறுகிறது. சீன மாலுமிகள் கடல் பிரயாணத்தின் போது ஏற்படும் தலைசுற்றல், வாந்தி போன்றவற்றை தவிர்க்க முதன் முதலில், கடல் பயணத்தின் போது இஞ்சி சாப்பிட்டதாகவும் வரலாறு தெரிவிக்கின்றது.

இஞ்சி பிரயாணத்தின் போது ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, பித்தத் தலைவலி போன்றவற்றை போக்கக் கூடியது. பிரயாணத்திற்கு 11/2 மணி நேரம் முன்னதாக இஞ்சி சாறு குடித்தால் அது பிரயாணத்தின் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்திடும், தினசரி 2-4 கிராம் இஞ்சியின் சாறைக் குடித்து வந்தால் அது எளிதாக மலம் கழிய வழி செய்யும். ஜீரண சக்தியை சீராக்கும். இஞ்சியை உணவிற்கு முன்போ பின்போ எப்பொழுது உண்டாலும் ஜீரண சக்தியை சீராக்கும் தன்மை கொண்டது.

இஞ்சி சிறந்த பசியைத் தூண்டும் மூலிகையாகும். இஞ்சி வாய்வை வெளியேற்றும், வயிற்று உப்புசத்தை போக்கும். தேன் கலந்த இஞ்சிச் சாறு பல தரப்பட்ட நோய்களை கண்டிக்கக் கூடியது. இஞ்சி ரத்த ஒட்டத்தை சீராக்கக் கூடியது. அது கொழுப்பு அளவையும் குறைக்கக் கூடியது. இஞ்சியும், தேனும் வறட்டு இருமலை போக்கக் கூடியது. மேலும் இஞ்சி புற்றுநோய் வருவதை தவிர்க்கக் கூடியது. அளவோடு உட்கொண்டால் இஞ்சி ஆண்மை மற்றும் பெண்மையையும் பெருக்கும் தன்மை கொண்டது. இஞ்சிச் சாறு கிருமியை எதிர்க்கும் தன்மை கொண்டது. இஞ்சி கண்டிக்கும் கிருமிகளில் முக்கியமானவை. இ.கோலி, ஸ்டப்டோகோகி மற்றும் சால்மொனெல்லா. இஞ்சி, எளிதாகக் கிடைக்கும் சமையல் அறை பொருள். ஆனால் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் எண்ணற்றவை. பல மருத்துவ குணங்களை இஞ்சி தன்னகத்தே கொண்டிருப்பதால் அதனை சமஸ்கிருதத்தில் மஹா ஓஃக்ஷதி‘ – பல நோய்களை போக்கும் தன்மை கொண்டது என அழைக்கப்படுகின்றது.

இஞ்சியை அளவோடு உட்கொள்ள வேண்டும். தேவைக்கு மேலாக உபயோகிக்கும் பொழுது இஞ்சி – இரத்தத்தில் உறையும் நேரத்தை அதிகப்படுத்தி விடும். அதாவது, அடிபட்டாலோ, கையில் கத்தி ஏதாவது வெட்டி விட்டாலோ இரத்தம் உறைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே அளவுடன் இஞ்சியை உபயோகிக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக உபயோகிக்க கூடாது. இஞ்சியை அடிக்கடி உபயோகிக்க இதோ சில எளிய வழிகள்.

ஜிஞ்சர் பீர்1

தேவையான பொருட்கள்

இஞ்சி-50கி

எலுமிச்சம்பழம்-2

சர்க்கரை-1கப்

பட்டை-1சிறுதுண்டு

கிராம்பு-4

செய்முறை

இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியதை லேசான சுடு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைத்ததை சிறிது நேரம் வைத்து பின்னர் வடிகட்டவும். எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து ஜுஸ் எடுத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பை தூளாக்கிக் கொள்ளவும். சர்க்கரை, பட்டை, கிராம்புத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி 1 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி ஆற விடவும். சிறிது ஆறியதும் இஞ்சிச் ஜுஸ், எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து நன்கு ஆறியவுடன் பாட்டில்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும் போது எடுத்து தேவையான அளவு நீர் கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பருகவும். இஞ்சி அஜீரணக் கோளாறுகளை சரிப்படுத்தும் பசியை அதிகரிக்கும். வாய்வுத் தொல்லைகளை நீக்கும். வாந்தி, குமட்டல் போன்றவற்றைக் குறைக்கும்.

ஜிஞ்சர் பீர்2

தேவையான பொருட்கள்

இஞ்சி-100கி

சீனி-1கிலோ

தண்ணீர்-500மிலி

சிட்ரிக் ஆஸிட்-2டீஸ்பூன்

எஸ்.பி.-11/2 டீஸ்பூன்

செய்முறை

இஞ்சியை தோல் சீவி அரைத்துக் கொள்ளவும். சீனி, தண்ணீர், சிட்ரிக் ஆஸிட் எல்லாம் சேர்த்து சிரப் செய்யவும். சிரப் கொதிக்கும் பொழுது இஞ்சி அரைத்ததை ஊற்றி ஒரு நிமிடம் கழித்து இறக்கவும். சிரப் ஆறியதும் எஸ்.பி. – யை வெது வெதுப்பான நீரில் கரைத்து ஊற்றி பாட்டில்களில் ஊற்றவும். 1:3 என்ற விகிதத்தில் தண்ணீருடனோ, சோடாவுடனோ கலந்து பருகவும்.

இஞ்சி முரபா

தேவையான பொருட்கள்

இஞ்சி-1கிலோ

சீனி-11/2கிலோ

தண்ணீர்-1லிட்டர்

சிட்ரிக் ஆஸிட்-11/2டீஸ்பூன்

செய்முறை

இஞ்சியை நன்றாகக் கழுவி தோல் சீவி வைக்கவும். ஒரு குக்கரில் இஞ்சி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்த பிறகு இஞ்சியை ஆற வைத்து வட்ட வட்டமாக நறுக்கவும். சீனி, தண்ணீர், சிட்ரிக் ஆஸிட் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து சீனி சிரப் செய்யவும். சீனி சிரப்பில் இஞ்சித் துண்டுகளை சேர்த்து முதல் நாள் அரைமணி நேரம் கொதிக்க விடவும். இரண்டவாது நாள் 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும். (ஒரு நூல் பதம் வரும் வரை). மூன்றாவது நாள் சிறிது நேரம் கொதிக்க வைத்து கம்பிப் பதம் வரும் வரை இருக்க வேண்டும்.

ஜிஞ்சர் டீ

தேவையான பொருட்கள்

டீத்தூள்-11/2டே.ஸ்பூன்

தண்ணீர்-3கப்

பால்-3கப்

சீனி-3டே.ஸ்பூன்

துருவிய இஞ்சி-3டே.ஸ்பூன்

டீ மசாலா-11/2டீஸ்பூன்

புதினாஇலை-3(தேவையென்றால்)

செய்முறை

எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, அடுப்பைக் குறைத்து 2 நிமிடங்கள் வைத்திருந்து வடிகட்டி பருகவும்.

இஞ்சித் தொக்கு

தேவையான பொருட்கள்

இஞ்சி-100கிராம்

புளி-சிறிய நெல்லிக்காய் அளவு

மிளகாய்பொடி-3டீஸ்பூன்

வெல்லம்-சிறிய நெல்லிக்காய் அளவு

பெருங்காயம்-2சிட்டிகை

மஞ்சள்பொடி-1டீஸ்பூன்

கடுகு-1டீஸ்பூன்

நல்லெண்ணெய்-3டே.ஸ்பூன்

உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை

நார் இல்லாத இளசான இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். இஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு, புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து, அரைத்த விழுதை ஊற்றி வதக்கவும். அதனுடன் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கி பச்சை வாசனை போனவுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி மேலே எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.


Spread the love