பழம் தரும் பலம்

Spread the love

உணவே மருந்து; மருந்தே உணவு என்கின்ற பழமொழிக்கேற்ப நமது உடலை உணவு வகைகளால் முறையாக உண்டு வந்தால் 75 சதவிகிதம் நோய் நம்மை நெருங்காது. இதில் பழ வகைகளும் கீரை வகைகளும் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, இயற்கையாகவே கிடைக்கும். நரை, திரை, மூப்பு இல்லாமல் நெடுங்காலம் வாழலாம். இங்கே ஒவ்வொரு பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன, அதனுடைய மருத்துவப் பயன்கள் என்ன என்பதை பார்ப்போம்.

வாழைப்பழம் :

உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் சத்துக்கள் இதில் நிறைய இருக்கின்றன. எளிதில் ஜீரணமாகும், மலச்சிக்கலைப் போக்கும், செவ்வாழை குழந்தை இல்லாத குறையை நீக்கவும், பேயன் வாழை குடல் கிருமிகளை அகற்றிடவும், நேந்திர வாழைகள் உடலில் உள்ள கோளாறுகளை நீக்கவும், ரஸ்தாளி மிகுந்த ஊட்டச் சத்தும் கொடுக்கும்.

மாம்பழம், பலாப்பழம் :

இந்த இரு பழங்களும் உடலுக்கு சூட்டை கொடுக்கின்ற பழமாகும். பல்வேறு வகையான சத்துக்கள் இதில் இருக்கின்றன. பொதுவாக மாம்பழம் சாப்பிடும்போது தேன் கலந்து சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது இதில் இரும்புச் சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து இருக்கின்றன.

பப்பாளி :

இதுவும் உடலுக்கு சூட்டை கொடுக்கின்ற பழமாகும். அதனால் பால் சேர்த்து சாப்பிடலாம். இதிலும் அதிகமான சத்துக்கள் இருப்பதால் எல்லோருமே சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.

மாதுளை :

உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். அதிக சத்துக்கள் இருக்கின்றன. குடலுறிஞ்சிகளின் தன்மையை பாதுகாக்கவும், குடல் கிருமிகளை வெளியேற்றவும், இதயத்திற்கு உறுதியையும் கொடுக்கும். இரத்தத்தை சுத்தம் செய்யும்.

அன்னாசி :

இந்தப் பழமும் உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும். குடல், இரைப்பை, இரத்தத்தை சுத்தம் செய்யவும், இரத்த விருத்தி ஏற்படுத்தும்.

திராட்சை :

இந்தப் பழம் சாப்பிட்டால் உடலுக்கு உடனே சக்தி கிடைத்து விடும். இரத்த விருத்திக்கும், அறிவு வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

ஆப்பிள் :

பழங்களில் இது விலை அதிகமாக இருந்தாலும் மனிதனுக்கு நோய் வராமல் பாதுகாக்கும். குடலுறிஞ்சிகளை மிகவும் பாதுகாக்கவும், உண்ட உணவை செரிக்க செய்யவும், உணவுப் பாதையை சுத்தம் செய்யவும் கூடியது.

கொய்யா :

வைட்டமின் ‘சி’ சத்தும், சுண்ணாம்புச் சத்து ( கால்சியம்), புரதச் சத்து உள்ளது. மலச்சிக்கலையும், வயிற்றிலுள்ள துர்நாற்றத்தையும் போக்கும்.

சப்போட்டா :

இதில் அதிகமாக குளுக்கோடின் சக்தி உள்ளது. வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு போகும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

ஆரஞ்சு :

உடலுக்கு மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கும். உடல் சத்துக்குறைவு உள்ளவர்கள் இதன் சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

பேரிக்காய் :

இதைச் சாப்பிட சிறுநீரக அடைப்பு, சிறுநீரக கற்களை அகற்றும்.

சீத்தாப்பழம் :

சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

எலுமிச்சை :

இதில் சிட்ரிக் அமிலமும், கந்தகமும், மக்னீசியமும் இருக்கின்றது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இரத்த சுத்தி க்கும், குடலில் உள்ள அழுகல் தன்மையைப் போக்கவும், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், வயிற்றுப் போக்கை நீக்கவும் சாப்பிடலாம்.

முலாம் பழம் :

குடலிலுள்ள கொடிய விஷங்களைப் போக்கும்.

தர்பூசணி, வெள்ளரி :

உடலுக்கு தேவையான நீர்ச் சத்தினை கொடுக்கும். உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

பழ வகைகளையும், கீரை வகைகளையும் அதிகமாக உண்டு வந்தால் 100 ஆண்டுகள் நோய் நொடி இன்றி உயிர் வாழலாம்.

பழங்களின் தன்மைகள்

பழங்கள் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் பயன்கள்

ஆப்பிள் விட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், கால்சியம், சல்பர் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும். குடல் தொற்றுகளை தடுக்கும். அதிக அமிலத்தன்மையை குறைக்கும்.

ஆரஞ்சு விட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், சோடியம், சிட்ரிக் அமிலம், இரும்பு, மேங்கனீஸ், கால்சியம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். நோய் தடுப்பு சக்தியை மேம்படுத்தும்.

திராட்சை இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், குளுகோஸ், விட்டமின் பி, உடலுக்கு சக்தியைத் தரும் இரத்தத்தை சுத்திகரிக்கும். சோகை, காமாலை இவற்றுக்கு நல்லது.

அன்னாசி பழம் விட்டமின் பி, சி & இ பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, ஃபோலேட், சுக்ரோஸ், சிறுநீர் பிரிய உதவும். உடலின் நச்சுகளை நீக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த ஒட்டத்தை சீராக்கும்.

மாதுளம் பழம் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், விட்டமின் சி வயிற்றுப் பூச்சிகளை ஒழிக்கும். ஜீரணத்திற்கு உதவும்.

வாழைப்பழம் பொட்டாசியம், ஃபோலேட், சோடியம், குளோரின், இரும்பு, குளுகோஸ், அமினோஅமிலங்கள். உடலின் நச்சுகளை நீக்கும். மலச்சிக்கல், அல்சர் இவற்றை குணப்படுத்தும். உடலில் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.

பப்பாளி பழம் விட்டமின் எ,இ, சிலிகன், பொட்டாசியம், கால்சியம், செம்பு, ஃபோலேட், ஃப்ரூக்டோஸ். ஜீரணத்தை ஊக்குவிக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்கும். மலச்சிக்கலுக்கு நல்லது.

உணவுநலம் பிப்ரவரி 2014


Spread the love
error: Content is protected !!