பழங்களைப் போற்றுவோம்

Spread the love

உலகெங்கும் பழங்கள் விரும்பி உண்ணப்படுகின்றன என்றாலும் மேலை நாட்டினர் பழங்களின் பயனும் திறனும் அறிந்து அவற்றைத் தங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்டுள்ளனர்.

“காலையில் பழ உணவு பொன் போன்றது

கடும்பகலில் அதுநல்ல வெள்ளி போன்றது

மாலையில் பழ உணவு மணி போன்றது”

என்று ஸ்பெயின் நாட்டில் ஒரு பழமொழி கூட உண்டு. ஆதிமனிதனின் உணவில் பெரும்பகுதி சமைக்கப்படாத கிழங்குகளும் பழங்களுமாக இருந்த காரணத்தால் தான் அவனால் நோய்கள் அதிகமின்றி வாழ முடிந்தது. பழங்கள் உடலுக்கு சக்தியளிப்பதுடன் உடலுக்கு நோய் எதிர்ப்புத் திறனையும் தருகிறது. பழங்களில் மிகுந்து காணப்படுகின்ற விட்டமின் ‘சி’ என்னும் உயிர்ச்சத்தே இதற்கு அடிப்படை, நெல்லிக்காயும், கொய்யாப்பழமும் நிறைந்த அளவு விட்டமின் ‘சி’ யைத் தருகின்றன. மஞ்சள் நிறமுள்ள மாம்பழம், பப்பாளி போன்றவைகளில் விட்டமினுடன் பீட்டா கரோட்டின் என்னும் பொருளும் உள்ளது. இது விட்டமின் ‘ஏ’ யின் முன்பொருளாகும். இந்த பீட்டா கரோட்டின் மூப்படைவதைத் தாமதப்படுகிறது. புற்றுநோயைத் தடுக்கிறது என்று கூறப்படுகிறது. சாறுள்ள பழங்களும், கிஸ்மிஸ், அத்தி, பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களும் உடலுக்கு வலு தருவதுடன் மலம் எளிதாகக் கழியவும் உதவுகின்றன.

“உணவு வகைகளில் எளிதாகச் செரிக்கப்படுவதும், உடனடி சக்தியளிப்பனவுமான பழங்கள் தான் சிறந்தவை. நமது தினசரி உணவில் பெரும்பங்கு பழங்களாக இருப்பது நல்லது” என்று பழங்கள் குறித்து தமது ‘உணவு’ என்னும் புத்தகத்தில் ராபர்ட் மக்காரிசன் கூறியுள்ளார். மனித உடலுறுப்புகள் இடையூறு ஏதுமின்றிச் செயல்பட உதவுவதிலும், உடல் வனப்பைப் பாதுகாப்பதிலும் பழங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

மனிதரது செரிவுறுப்புக்கள் எளிதில் செரிக்க வல்ல வடிவில் கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சோடியம் போன்ற கனிமப் பொருட்களும், பல விட்டமின் வகைகளும், புரதமும், மாவுச்சத்தும், நொதிப் பொருட்களும் பழங்களில் அடங்கியுள்ளதால் பழ உணவு ஒரு மேலான உணவாகக் கருதப்படுகிறது. பழங்களில் நிரம்பியிருக்கும் சுவைகள் ஒவ்வொன்றும் தனித்தனி இயல்புடன் செயல்படுகின்றன.

இனிப்பு தசைக்கு வலுவூட்டுகிறது. புளிப்பு கொழுப்பைப் பராமரிக்கிறது. கார்ப்பு (காரம்) இரத்தத்தைப் பெருக்கி வீரியத்தை உண்டாக்குகிறது. உவர்ப்பு எலும்பை வளர்க்கிறது. துவர்ப்பு வயிற்றிலும் குடலிலும் நோய் வராது தடுக்கிறது. கைப்பு (கசப்பு) குடலைத் தூய்மைப்படுத்தி, நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. ஆல்கலைன் வகை உப்புக்கள் பழங்களில் அதிகம் உள்ளதால் அவை இரத்தத்தைத் தூய்மையாக வைத்திருப்பதுடன், திரவ நிலையிலும் இருக்க உதவுகின்றன. பழங்கள் செரிவுறுப்புகளைத் திறம்படச் செயல்பட வைக்கின்றன.

பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துத் தானிய வகைகளைக் குறைத்து உண்பது உடலுக்கு நன்மை பயக்கும். நமக்கு ஏற்படுகின்ற நோய்களிலும், நோவுகளிலும் பெரும்பான்மையானவை உடலின் அமிலத் தன்மை காரணமாகவே ஏற்படுகின்றன. பழ வகைகளில் காணப்படுகின்ற ஆல்கலைன் கனிமப் பொருள்கள் இந்நோய்கள் வராமல் தடுக்கும் குணமுடையவை. இதனால் நோய் தவிர்த்து வாழ இயலும். இவை மட்டுமன்றி தவறான உணவு மற்றும் நடைமுறைப் பழக்கங்களால் ஏற்படுகின்ற நோய்களான செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், ஏப்பம், அதிக அமிலம், நெஞ்செரிச்சல், வாந்தி, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பல நோய்களுக்கும் பிணி தீர்க்கும் அருமருந்துகளாகப் பழங்கள் பயன்படுகின்றன.

மேலை நாடுகளில் சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் பல நாட்களுக்குப் பழங்களே உணவாகக் கொடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பழத்தையே சில வகை மாறுதல்களோடு தொடர்ந்து உட்கொள்ளச் செய்து வரும் போது நோயின் தன்மை மாறுபடத் தொடங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொண்டைப் புற்றுநோயினால் துயருற்ற ஒருவருக்கு ஒன்றரை ஆண்டுகள் தனி ஆரஞ்சுப் பழச்சாற்றை மட்டும் சிறுகச் சிறுகச் கொடுத்து வந்த போது வேறெந்த மருத்துவமும் இன்றி அவரது நோய் குணமானது என்று டாக்டர் ஹெலன் ஜீன்ஸ் என்பவர் தம்முடைய About Tropical Fruits என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பழங்கள் சிறந்த ஓளஷதமாக மாறிய பல செய்திகளை இவர் தெரிவித்துள்ளார்.

உணவின் ஒரு பகுதியாகப் பழங்களை உட்கொள்ளலாம் என்ற நிலை மாறிப் ‘பழங்களே உணவு’ என்ற நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஒரு சூழலில் இந்தியர்கள் தமது மூன்று வேளை உணவில் ஒரு வேளையாகிலும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள முயல வேண்டும். அவ்வாறு செய்வார்களானால் இயற்கை தரும் சக்திகளை எளிதாகப் பெற முடியும். இந்தியர்களுக்குப் பழங்கள் அரிதாகவே கிடைப்பதும் அவர்கள் அதைக் குறைவாக உண்பதும் நாம் அறிந்த ஒரு செய்தி தான்.

இந்தியர்களது உணவில் கனிமச் சத்துக்கள் மிகக் குறைவாக இருப்பதால் அவர்கள் பழங்கள் உண்ண வேண்டியது கட்டாயமாகிறது. இருப்பினும் இங்கு பழங்களின் விலை ஏறுமாறாக இருப்பதால் எல்லோராலும் அவற்றை வாங்கி உண்ண முடியவில்லை என்பது நிதர்சனமான ஒரு உண்மையாகும். இதற்கு நம் மக்களின் மனோபாவமும் ஒரு வகையில் காரணமாகிறது.

பழங்கள் என்று குறிப்பிடப்படும் போது பெரும்பான்மையான மக்கள் மனதில் தோன்றுவது ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, சப்போட்டா, திராட்சை போன்ற பழங்கள் தான். மா, பலா, வாழை, கொய்யா, நாவல், இலந்தை, நெல்லி போன்று எளிதில் கிடைக்கக் கூடிய பழங்களை நாம் மறந்து விடுகிறோம். பப்பாளியும், நாரத்தையும், வெள்ளரியும், விளாம்பழமும் பழங்கள் இல்லையா? ஒவ்வொரு பழமும் அதனதன் பருவத்தில் குறைந்த விலையில் கிடைக்கத்தானே செய்கிறது. காலத்திற்கேற்ப பழ வகைகளைத் தெரிவு செய்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாமே.

வாழைப்பழமும் (நாட்டுப் பழமும், பூவன் பழமும், பச்சை நாடன் பழமும்) கொய்யாப்பழமுமு வாங்க முடியாத நிலையில் இங்கு யாரிருக்கிறார்கள்? இயற்கையாக இறைவன் அளித்துள்ள கனி வகைகள் நோய் நீக்கும் இனிய உணவுகளாக இருக்கும் போது அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தாது / போவோமானால் அது யார் குற்றம்? இனியாகிலும் இயற்கை தரும் இனிய கனிகளில் இயன்றவற்றை வாங்கி உண்ணப் பழகுவோம். உடல் ஆரோக்கியம் பேணிக் காப்போம்.


Spread the love