பழங்களில் பல்சுவைகளும் நிரம்ப இருப்பதோடு அவை தமக்குகென்று தனி இயல்புடனும் செயல்படுகின்றன. பழங்களிலுள்ள இனிப்பு தசைகளுக்கு வலுவூட்டி வளர்க்கிறது. காரச் சத்து இரத்தத்தைப் பெருக்கி வீரியத்தை உண்டாக்குகிறது. உப்பு எலும்பை வளர்க்கிறது. பழச்சாறுகளில் அதிக அளவில் இருக்கும் ஆல்கஹாலின் வகை (கார வகை) உப்புகள் இரத்தத்தைத் தூய நிலையில் வைத்து அதற்கு அமிலத்தன்மை உண்டாகாதவாறு பாதுகாக்கின்றன. பல நேரங்களில் பழச்சாறுகள் பல்வகை நோய்களையும் போக்கும் அருமருந்தாகச் செயல்படுகின்றன.
பச்சையாக அருந்தப்படும் சாறுகளில் பழச்சாறுகள் பெரிதும் விரும்பி உண்ணப்படுபவையாகும். பழச்சாறுகள் என்றதுமே நம்மில் பலர் அவை நோயுற்றிருப்பவர்க்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே ஏற்றவை என்று எண்ணுகின்றனர். ஆரோக்கியமான, வலுவான உடல் பெறுவதற்கு எல்லா வயதினருக்கும் ஏற்றவை பழச்சாறுகள்.
பழச்சாறுகளால் உடலுக்குப் புத்துணர்வும் புதுத் தெம்பும் கிடைப்பதுடன் ஈரல், சிறுநீரகங்கள், தோல் போன்ற கழிவு உறுப்புகளின் திறன் அதிகரிக்கப்படுகிறது. உடற்கழிவுகளும் நச்சுப் பொருள்களும் எளிதில் வெளியேறுகின்றன. செரிமான உறுப்புகள் ஒய்வு பெறுகின்றன.
காலங்காலமாக நோயுற்ற மனிதர்கள் பழச்சாறுகளையே உணவாகக் கொண்டு உடல் நலம் பேணி வந்துள்ளனர். அவை எளிதாகச் செரிக்கப்படுவதுடன் நோயுற்ற உடல் நலிவுறாத வண்ணம் காப்பதற்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் கொண்டவைகளாகவும் உள்ளன. தினமும் தவறாமல் பழச்சாறு பருகுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் உயிரணுக்களுக்கு புதிய திறனை அளிக்கின்றன. பழச்சாறு பருகுவதை பழக்கமாகக் கொண்டு வாழ்பவர்கள் நல வாழ்வு வாழ்வதை நாம் காணலாம். தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்பட்ட நோய்களைக் குறிப்பிட்ட வகைப் பழச்சாறுகள் கொண்டு குணமாக்கலாம். கருத்துடன் பின்பற்றப்பட்டால் பழச்சாறுகள் உணவு மட்டுமல்ல. மருந்தும் கூட.
உடலை நீரேற்றம் பெறச் செய்வதற்கு சிறந்த வழிகளில் ஒன்று பழச்சாறு பருகுவது. இம்முறையில் உடல் பெறுகின்ற நீர்மத்தில் பழச்சர்க்கரையும், கனிமச் சத்துக்களும், விட்டமின்களும் இருப்பதால் நோயுற்றவர்க்கு மட்டுமின்றி உடல் வலுக் குன்றியவ்£களுக்கும் இது சிறந்த நீர்ம உணவாகிறது. பழச்சாறுகளில் காணப்படும் பொட்டாஷியம், மக்னீஷியம், சோடியம் போன்ற கனிமச்சத்துக்கள் சிறுநீர்ப் பெருக்கிகளாகச் செயல்பட்டு சிறுநீரகத்தின் பணியை எளிதாக்குகின்றன.
பழச்சாறுகள் சிறுநீரின் அடர்த்தியைக் குறைப்பதுடன் நைட்ரஜனேற்றம் பெற்ற கழிவுகளையும் குளோரைடுகளையும் விரைந்து வெளியேறச் செய்கின்றன. மேலும பழச்சாறுகளில் சோடியம் மிகக் குறைவாக இருப்பதால் உப்புக் குறைவாக உண்ண வேண்டியவர்களுக்கு இவை ஏற்ற உணவாகும்.
பழச்சாறுகளில் காணப்படும் பல்வகை உப்புகளின் கரிமக் காடிகள் உண்டாக்குகின்ற கார கார்பனேட்டுகள் உடல் நீர்மத்தைக் காரப்பதமடையச் செய்கின்றன. இதனால் இரத்தத்தின் தகவு நிலை நிறுத்தப்படுகிறது.
இது குடலில் எளிதாகச் செரிக்கப்பட்டு முழுமையாக உட்சுவரப்படுகிறது. பழங்களில் காணப்படும் செல்லுலோஸ் என்னும் செரிவுறாப் பொருள் குடலில் உணவுகள் தடையின்றிப் பயணிக்கவும், பெருங்குடலிருந்து மலம் எளிதாகக் கழியவும் உதவுகிறது.
பழங்களில் மிகுதியும் உள்ள கரிம அமிலங்கள் நோய்கள் காரணமாக இரைப்பையில் சுரப்புக் குறையும் ஹைட்ரோகுளோரிக் அமில அளவை ஈடு செய்கின்றன. பழச்சாறுகளில் இருக்கின்ற பொட்டாஷியமும் பிற கனிமப் பொருள்களும் உடலில் உள்ள அதிகப்படியான நீரின் அளவைக் குறைத்துச் சிறுநீரகங்களைப் பாதுகாக்கின்றன.
பழச்சாறுகள் மூலம் நல்ல பயனைப் பெற அவற்றைச் சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும். பொதுவாக வயிறு நிறைய உணவு கொண்ட பிறகு பழச்சாறு அருந்துவது நல்லதல்ல. எளிதாகச் செரிக்கக் கூடிய பழச்சாறும் மற்ற உணவுப் பொருள்களோடு சேர்ந்து நெடுநேரம் வயிற்றில் இருக்க வேண்டி நேரிடும். இதனால் வயிற்றிலுள்ள உணவு புளிப்படைந்து தீமை உண்டாக்கும் அமிலங்களும் வாயுக்களும் தோன்றக் காரணமாகும்.
உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னதாகப் பழச்சாறு அருந்தலாம். சரியான முறையில் அருந்தப்படும் பழச்சாறுகளும், பச்ச¬க் காய்கறிச் சாறுகளும் உடலுக்கு வலிவும் பொலிவும் தரவல்லவை.
பழச்சாறு அருந்தினால் சளி பிடிக்கும் என்று சிலர் கூறுவதற்கு அறிவியல் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லை. விட்டமின் ‘சி’, பீட்டா கரோட்டின் மற்றும் பெக்டின் போன்ற பொருள்கள் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் கூடுமே தவிர சளி பிடிக்கவோ வயிற்றோட்டம் ஏற்படவோ வழி இல்லை. ஒரு வேளை பழச்சாற்றுடன் ஐஸ்கட்டிகள் சேர்ந்து அருந்தினால் சளி பிடிக்க வாய்ப்புண்டு.
ஆப்பிள் சாறு
ஆப்பிள் சாறில் விட்டமின்கள் குறைவாக இருந்த போதிலும் பொட்டாஷியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலுவூட்டி இரத்தத்தை தூய்மைப்படுத்த வல்லவை. ஆப்பிளில் மாலிக் அமிலமும் டேனிக் அமிலமும் இருப்பதால் செரிவுறுப்புக்களைத் திறம்படச் செயல்பட வைத்து செரிமானத்தை அதிகரிக்கிறது. வயிற்றுப் போக்கினால் அவதியுறுபவர்கள் ஆப்பிள் சாறு குடித்துக் குணம் பெறலாம்.
ஆப்பிளில் சோடியம் குறைவாக இருப்பதால் இது இதயநோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. இதிலுள்ள மிகுதியான பொட்டாசியத்தினால் ஆப்பிள் சாறு அடிக்கடி பருகினால் இதயத்தாக்கு நோயினின்றும் தப்பிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டதாக டாக்டர். எலிசபெத் பார்டர் என்பவர் தெரிவிக்கின்றார். திசுக்களில் உள்ள சோடியத்தைப் பொட்டாஷியம் வெளியேற்றி விடுவதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்றது.
கொய்யாச் சாறு
நிறைந்த அளவில் நார்ச்சத்துக் கொண்ட கொய்யாப் பழச்சாறு ஒரு சக்தி தரும் பானமாகும். கால்சியமும், பாஸ்பரசும் பிற கனிமச் சத்துகளும் கொண்ட கொய்யாப்பழத்தில் விட்டமின் ‘சி’ மிக அதிகமான அளவில் உள்ளது. 100 கிராம் எடையுள்ள கொய்யாப்பழத்தில் 212 மி.கி. விட்டமின் ‘சி’ உள்ளது. நெல்லிக்காய்க்கு அடுத்த படியாக விட்டமின் ‘ச’ அதிகம் கொண்டது கொய்யாப்பழம் தான். பசியைக் கூட்டும். மலம் எளிதாகக் கழியச் செய்யும். குடற்புழுக்களை அகற்றும்.
ஆரஞ்சுச் சாறு
நாரத்தை வகை சார்ந்த பழங்களுள் ஆரஞ்சு ஒன்று. இப்பழத்தின் சாறு பற்றிப் பல நூல்கள் விரிவாக கூறுகின்றன. பசியுணர்வை உண்டாக்கி, இரத்தத்தைத் தூய்மைப்படுத்தி, பித்தப்பையை திறம்பட இயங்கச் செய்கிறது ஆரஞ்சுச்சாறு. வாய்நாற்றம் போக்கி வாயைத் தூய்மைப்படுத்துகிறது. ஆரஞ்சுச் சாற்றில் ‘சி’ விட்டமின் தவிர ‘பி’ என்ற விட்டமின் உள்ளது. இந்த விட்டமின் ‘பி’ இரத்த நாளங்களை ஆரோக்கியத்துடன் வைப்பதோடு விட்டமின் ‘சி’ உட்சுவரப்பட உதவுகிறது. இந்த ‘பி’ விட்டமின் பெருமளவு பொட்டாஷியத்தால் ஆனது. அதனால் ஆரஞ்சு சாறில் சிட்ரிக் அமிலம் இருந்தாலும் அதன் சாறு காரத்தன்மை கொண்டதாக உள்ளது.
தண்ணீர் கலவாத தனி ஆரஞ்சு சாறு குழந்தைகளுக்கும் நோயுற்றுத் தளர்ந்து இருப்பவர்களுக்கும் ஒரு அரிய உணவாகும். இதில் உள்ள கால்சியமும் மக்னிஷியமும் எலும்பு வளர்ச்சிக்கு தேவைகளாதலால் இது வளரும் குழந்தைகளுக்கும், மூப்படைந்த பெண்களுக்கும் மிக அவசியமான ஒன்றாகும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறில் நிறைந்த அளவில் சிட்ரிக் அமிலமும் விட்டமின் சி, கால்ஷியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் உள்ளன. நன்கு பழுத்த எலுமிச்சைச் சாறு நல்ல பசியூட்டி வாயில் உமிழ்நீரை அதிக அளவில் சுரக்கச் செய்வதுடன் வயிற்றிலும் செரிமான நீர்களைச் சுரக்கச் செய்கிறது. வயிற்றுப்பொருமல், ஏப்பம் போன்றவற்றிற்கு இது ஒரு நல்ல மருந்து.
கொழுப்புச் சேர்ந்த உணவு உண்டவர்கள் ஒரு குவளை எலுமிச்சை நீர் குடித்தால் உடனே ஜீரணமாகும். இது ஈரலைத் தூண்டிப் பித்த நீரைச் சுரக்கச் செய்கிறது. டான்சில் அழற்சிக்கு எலுமிச்சைச் சாறு நல்ல மருந்தாகும். வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து இரண்டு தேக்கரண்டி தேனும் கால் தேக்கரண்டி உப்பும் சேர்த்து கலக்கிக் குடித்தால் டான்சில் அழற்சி கட்டுப்படும். எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் மிகுந்திருந்த போதிலும் இரைப்பையினுள் சென்ற செரிமானமாகின்ற போது காரத்தன்மையே பெறுகிறது. எனவே இது வயிற்றில் தோன்றும் அதிக அமிலக் குறைபாடுகளை நிவர்த்திக்கும்.
தொடரும்…