வெள்ளரி பழச்சாறு
வெள்ளரிப் பழத்தில் குறிப்பிடத்தக்க அளவு விட்டமின் ‘ஏ’-யும் ‘பி’யும் உள்ளன. அதிக அளவு கனிமச்சத்துக் கொண்ட இப்பழத்தில் பொட்டாசியம், சோடியம், மக்னிஷியம், சல்பர், சிலிகன் போன்ற பல கனிமங்கள் உள்ளன. இதைச் சர்க்கரையோ, தண்ணீரோ சேர்க்காது பருக வேண்டும். குளுமை தரும் வெள்ளரிப்பழச்சாறு காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட நன்மை உண்டாகும்.
பப்பாளிச் சாறு
அநேக உயிர்ச்சத்துகளும் நொதிப் பொருள்களும் கொண்ட பப்பாளிச் சாறு அருஞ்சுவை கொண்டது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி கிழக்கு ஆசிய நாடுகளிலும் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்ற இப்பழத்தைப் பற்றி நமது மக்கள் மனதில் சில தவறான எண்ணங்கள் இருப்பது துரதிஷ்டமே. பப்பாளிப் பழம் சாப்பிட்டால் கருக்கலைந்து விடும் என்னும் அடிப்படியைற்ற ஒரு நம்பிக்கை இங்கு நிலவி வருகிறது. இதற்கு ஆதாரம் எதுவுமில்லை.
அன்னாசிச்சாறு
அன்னாசிச் பழத்தைச் சாறு பிழியும் போது நன்கு முதிர்ந்த பழங்களை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். அவற்றில் தான் நல்ல சாறும் இனிமையும் இருக்கும். இதில் 4-5 சதவிகிதம் சர்க்கரைச் சத்து உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. அன்னாசிச் சாற்றில் செரிமானத்தைத் தூண்டக் கூடிய புரோமெலெய்ன் என்னும் ஒரு நொதி காணப்படுகிறது. அது பெப்சின் போன்றது. புரதம் செறிந்த உணவு உண்டதன் பின்னர் இச்சாறு பருகினால் எளிதில் செரிமானமாகும். குடல் புண்ணுக்கு நல்ல மருந்தாகும். புதிதாக எடுத்த அன்னாசிச் சாறு தொண்டைக்கு இதம் தரும். பாடகர்களுக்கு அன்னாசிச் சாறு ஒரு அருமருந்தாகும்.
திராட்சைச் சாறு
திராட்சையிலுள்ள நீர்மச் சத்தும், பொட்டாஷியமும் அதை ஒரு சிறுநீர் பெருக்கியாகச் செயல்படச் செய்கின்றன. திராட்சைச்சாறு சிறுநீரகம் மற்றும் சிறுநீர்த்தாரையில் உள்ள கற்கள், அடைப்புகளைக் கரைக்க வல்லன என்றும் கருதப்படுகிறது. ஆஸ்த்துமாவால் துயரப்படுவோர்களைத் திராட்சைத் தோட்டத்தில் இருக்கச் செய்தால் அவர்கள் உடனே குணம் பெறுவார்களென்று டாக்டர் ஓல்டு பீல்ட் என்பவர் எழுதுகிறார்.
மாம்பழச்சாறு
எச்சரிக்கை
சுவைமிக்க மாம்பழச்சாறில் சர்க்கரைச்சத்து மிகுந்து காணப்படுவதால் நீரிழிவு நோயினர் இதைத் தவிர்த்தல் வேண்டும்.
100 கிராம் மாம்பழச் சாறில் 4800 (மி.ஹி.) அளவு விட்டமின் ‘ஏ’ உள்ளது. கண்பார்வையை அதிகரிக்க மாம்பழச்சாறு உதவுமென்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. மாம்பழச்சாறில் ஆக்ஸாலிக் ஆசிட், சிட்ரிக் ஆசிட், மாலிக் ஆசிட், சக்ஸினிக் ஆசிட் என்று பல அமிலங்களும் பெக்டின் என்ற நொதிப்பொருளும் காணப்படுகின்றன. ஒரு ஆப்பிளில் உள்ளது போன்று 4 பங்கு விட்டமின் ‘சி’ ஒரு மாம்பழத்தில் உள்ளது. தவிர ‘பி1’ ‘பி2’ போன்ற விட்டமின்களும் காணப்படுகின்றன. பழுத்த மாம்பழத்தில் காணப்படும் டார்டாரிக், மாலிக் அமிலங்கள் உடலின் தேவைக்கேற்ற வகையில் பயன்படுவதுடன் உடலின் காரவைப்பையும் சரியான நிலையில் வைக்க உதவுகிறது. கண் உலர்தல், கண் எரிச்சல், கார்னியா மெலிதல் போன்றவற்றையும் மாம்பழச்சாறு சீராக்குகிறது.
தக்காளிச் சாறு
தக்காளிச் சாற்றில் சிட்ரிக் அமிலமும் மாலிக் அமிலமும் இருப்பதால் இரத்தத்தின் காரத் தன்மை அதிகரிக்கிறது. இப்பழத்தில் ஆக்ஸாலிக் ஆசிட் இருக்கிறதென்ற கருத்து அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்படவில்லை. எனவே தக்காளிச்சாறு குடித்தால் சிறுநீரகக் கற்கள் உண்டாகின்றன என்பதற்கு அடிப்படை எதுவுமில்லை. எனவே தக்காளிச் சாறு அருந்துவதற்குத் தடையேதுமில்லை.
சீதாப்பழச் சாறு
சீதாப்பழத்தின் பெரும் பகுதி நீரால் ஆனது. இதில் கொழுப்பும் புரதமும் குறைவாக இருந்தாலும் கனிமச்சத்துக்கள் நிறைய உள்ளன. 100 கிராம் சாறு 94 கலோரி சக்தி தரக்கூடியது. பற்களுக்குப் பலமளித்து, உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் ‘சி’ சீதாப்பழத்தில் அதிகமாக உள்ளது. ஒரு குழந்தையின் ஒரு நாள் தேவையான 40 மி.கி. விட்டமின் ‘சி’ யை ஒரு சீதாப்பழம் தருகிறது. இரும்புச்சத்து அதிகமாக கொண்ட சீதாப்பழத்தில் 3.1 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. செரிமானத்தை அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரைச்சத்து அதிகமாக உள்ள பழமாதலால் சர்க்கரை நோயுள்ளவர்கள் சீதாப்பழச்சாறு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மாதுளைச் சாறு
நன்கு பழுத்த மாதுளம் பழங்கள் தான் சாறு எடுக்க ஏற்றவை. மாதுளையின் மதிப்பீடு அதன் சர்க்கரை மற்றும் அமிலச்சத்தைப் பொருத்தே அமைகிறது. இதிலுள்ள ஃப்ரூக்டோஸ் என்னும் பழச்சர்க்கரை மிக எளிதாகச் செரிக்கக் கூடியது. மாதுளம் பழச்சாறு உடலுக்கு வலுவும் புத்துணர்ச்சியும் ஊட்ட வல்லது. இதய நோயினருக்கு ஏற்ற இயற்கை மருந்தாகவும், இலேசான உணவாகவும் இது செயல்படுகிறது.
இரைப்பை அழற்சிக்கும், வீக்கத்திற்கும் மாதுளை ஒரு சிறந்த மருந்தாகும். செரிமானம் குறைவானவர்களுக்கும், காய்ச்சல் உள்ளவர்களுக்கும் மாதுளைச் சாறு ஏற்றது. தாகத்தைத் தணிக்க வல்லது. இதன் தோலின் டானின் என்ற ஒரு பொருள் இருப்பதால் துவர்ப்புச் சுவையும் சேர்ந்தே இருக்கும். எனவே சாறு நிரம்பிய விதைகளைத் தனியே பிரித்தெடுத்து நல்ல வெள்ளைத் துணியில் வைத்து அழுத்திப் பிசைந்து சாறு பிழிந்தெடுக்க வேண்டும். மாதுளைச் சாறு தேக உஷ்ணத்தைக் குறைக்கும். வாந்தி, விக்கல் போன்றவற்றை கட்டுப்படுத்தும். மாதவிலக்குக் கோளாறு, சோகை போன்றவற்றிற்கு மாதுளைச் சாறு நல்ல மருந்தாகும்.
வாழைப்பழக் கலவை
எல்லாக் கனிகளையும் பற்றிக் கூறிவிட்டு வாழைப்பழத்தைப் பற்றிக் கூறாவிட்டால் இப்பகுதி நிறைவு பெறாது. உலகத்திலுள்ள எல்லாப் பழங்களிலும் சிறந்ததும் உயர்வானதும் வாழைப்பழமா எக்காலத்தும் கிடைப்பதும் எல்லோராலும் வாங்கப்படுவதும் இதன் சிறப்பு. சக்திமிக்க வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின், கனிமப் பொருள்கள் எல்லாம் கலந்து காணப்படுகின்றன. மற்றெல்லாப் பழங்களையும் விட இதில் நீர்ச்சத்து குறைவு. அதனால் வாழைப்பழத்தை நன்றாக கரண்டியினால் மசித்துப் பாலுடன் சேர்த்துக் கலந்தால் நல்லதொரு பானமாகும்.
எச்சரிக்கை
சர்க்கரை நோய் உள்ளவர்களோ, அது வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்களோ வாழைப்பழப்பால் அருந்துவது கூடாது.
விளாம்பழச்சாறு
வுட் ஆப்பிள் எனப்படும் விளாம்பழம் சத்து நிறைந்த ஒரு பழமாகும். இனிப்பும், புளிப்பும் கொண்ட விளாம்பழம் இனிய உணவாகும் என்றாலும் செரிப்பதற்குச் சிறிது நேரம் பிடிக்கும். நன்கு பழுத்த விளாம்பழம் தான் சாறு தயாரிக்க ஏற்றது. விளாம்பழத்தைக் கதுப்புடன் சுரண்டி எடுத்து கரண்டியினால் நன்கு மசித்து வெண்ணெய் போல் -ஆக்கவும், இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துத் திரும்பவும் மசித்து விடவும். இத்துடன் இரண்டு கரண்டி தேன் அல்லது 2 கரண்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலக்கி பஞ்சாமிர்தம் போல் செய்து கரண்டியால் எடுத்து உண்ணலாம்.
விளாம்பழம் சாப்பிட நாவறட்சி, விக்கல் போன்றவை கட்டுப்படும். ஏப்பம், வயிற்றுப் பொருமல் குணமாகும். பித்த நீரின் கோளாறால் ஏற்படும் வாயில் அதிகமாக எச்சில் ஊறுதல், வாந்தி ஆகியவற்றைப் போக்கும்.