“நன்கு உலர்ந்த உயிரற்ற மரக்கட்டையும் எண்ணை தடவப்பட்டு ஒத்தடம் கொடுக்கப்பட்டால், வளையும். என்றால் உயிருள்ள மனிதர்களை பற்றி கூற வேண்டியது என்ன இருக்கிறது”
– சரகஸம்ஹிதை
ஆயுர்வேதத்தில் ஒத்தடம் “ஸ்வேதனம்” எனப்படுகிறது. ஸ்வேதனத்தின் நோக்கம் சூட்டால் வியர்வையை உண்டாக்கி கழிவு / நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது. அதிக கொழுப்புச்சத்தினால் ஏற்படும் உடலின் உள்ளே உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும். உடலில் உள்ள ரோமக்கால்களின் மூலம் வியர்வை வெளிவர, தோலின் நுண்ணிய துவாரங்கள் விரிவடையும்.
ஒத்தட சிகிச்சையின் நன்மைகள்
முதலில் எண்ணை சிகிச்சை (மசாஜ்) செய்துவிட்டு பிறகு ஒத்தட சிகிச்சை செய்தால் உடலில் வாயுவின் தாக்கம் குறைந்து மலஜலம், விந்து இவை தொல்லையின்றி வெளியேறும்.
வியாதியினால், உடலின் சூடு ரோமக்கால்களின் மூலம் வெளியேறாத போது, ஒத்தடம் அவசியமாகிறது.
த்ரிதோஷ கோளாறுகளால் உண்டாகும் விஷப்பொருட்கள் உடலின் புற எல்லைகளில் உள்ள திசுக்களில் தேங்கி விடும். இவற்றை ஒத்தடம் வெளியேற்றும்.
தசைகளை தளர்விக்கும், பாதிக்கப்பட்ட இடத்தில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும்.
உடலையும், உள்ளத்தையும் சமனப்படுத்துகிறது. குறிப்பாக முதுகெலும்பில் செய்யப்படும் ஒத்தடம் அமைதிப்படுத்துகிறது.
வலியை குறைக்கிறது.
ஒத்தடத்தை தாங்காத உறுப்புகள்
மனிதனின் விதைகள், இதயம், கண்கள் இவற்றில் ஒத்தடம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அப்படி கொடுக்க நேர்ந்தால் மென்மையான ஒத்தடமே தர வேண்டும். கண்களை தூய்மையான ஆடை, கோதுமை மாவு, தாமரை இலை, போன்ற மென்மையான இலைகளால், கண்களை மூடிவிட்டு, தலையிலும், பக்கங்களிலும் ஒத்தடத்தை கொடுக்கலாம்.
இதயத்திற்கு, தண்ணீரில் நனைத்த தாமரையின் இலைகளை இதயத்தின் மீது வைத்து மறைத்து விட்டு, பிறகு இதயத்தின் பக்கங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
ஒத்தடம் தரவேண்டிய கால அளவு
உடலின் குளிர்ச்சி, வலி, அசைய முடியாத நிலை, உடற்பளு இவை மாறி, ‘வியர்த்துக் கொட்டினால் ஒத்தடம் கொடுப்பதை நிறுத்தவும்.
அளவுக்கு மீறிய ஒத்தடம் உண்டாக்கும் தீமைகள்
நினைவிழத்தல் (Coma), நீர்வேட்கை, நீர்மச்சத்துகள் இழப்பு (dehydration) அதிக தாகம், தலைசுற்றல், எரிச்சல், கொப்புளங்கள் ஏற்படுதல், பலவீனம் இவை ஏற்படும்.
ஒத்தட சிகிச்சைக்கு ஏற்றவர்
ஜலதோஷம், ஆஸ்துமா, இருமல், விக்கல், காது வலி, தலை வலி, தொண்டைப்பிடிப்பு, முகவாதம், பக்கவாதம், வாதம், ஸியாடிகா, கணுக்கால் பிடிப்பு, முதுகு வலி, மூட்டு வலிகள், மலச்சிக்கல், வயிற்று இழுப்பு, நடக்க முடியாமல் கால்களில் வலி, பின்புற வலி, சிறுநீர் அடைப்பு, அஜீரணம், உடற்பளு, உடல் மரத்துப் போதல் – ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒத்தடம் ஏற்றது.
ஒத்தட சிகிச்சை கொடுக்க தகாதவர்கள்
குடிப்பழக்கம் உள்ளவர்கள், கர்ப்பிணி கள், உடல் வறட்சி உடையவர், பலவீனமானவர்கள், நீரிழிவு நோயாளிகள், இரத்த போக்கு வியாதியுள்ளவர்கள், கல்லீரல் நோயுள்ளவர்கள், சோகை, பேதி, ஜுரம், கண் நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முற்றிய முதியோர்கள் இவர்களுக்கு ஒத்தட சிகிச்சை கொடுக்க கூடாது.
ஒத்தட சிகிச்சை வகைகள்
நெருப்பை பயன்படுத்துவது (சாக்கினி), நெருப்பின்றி செய்வது (நிராக்னி)
உடல் முழுவதும் செய்வது (சர்வாங்க ஸ்வேதா), குறிப்பிட்ட பாகங்களில் செய்வது (ஏகஸ்வேதா)
ஈரமான (திரவ) ஒத்தடம் அல்லது உலர்ந்த ஒத்தடம்
மிருதுவானது (மிருது), நடுத்தரம் (மத்யம்) மற்றும் தீவிரமானது (திக்ஷன்)
திரி தோஷங்களின் படி சிகிச்சை வகைகள்
வாத தோஷங்களுக்கு பற்று போடுதல்
கபதோஷங்களுக்கு உலர்ந்த அல்லது நீராவி (உஷ்ண) ஒத்தட சிகிச்சை
பித்த தோஷங்களுக்கு திரவ (ஈர) ஒத்தடம்.
ஒத்தட சிகிச்சைகளை மேற்கொண்ட பின் நோயாளிகள் சில நாட்களுக்கு உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவர் சொல்லும் உணவையே உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள், குழந்தைகள், முதியோர்கள், இவர்களுக்கு சூடான ஒத்தடம் வேண்டாம். வெது வெதுப்பான ஒத்தடம் போதுமானது.