பழங்கள்சாப்பிடும்முன்

Spread the love

பழங்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழலாம் என்பது சித்தர்கள் கண்ட உண்மை. நார்ச்சத்து, வைட்டமின், தாதுபொருட்கள், இனிப்பு ஆகியவை பழங்களில் அடங்கியுள்ளன. பழங்களில் காணப்படும் பெரிய சிறப்புத் தன்மை என்னவென்றால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடலின் எடையை கூட்டாது. பழங்களில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. கார்போ-ஹைட்ரேட், சிறிது புரோட்டின் ஆகியவை காணப்பட்டாலும், உடல் எடையை அதிகமாக்கி விடாது.

ஒரு வகை பேரிக்காயில் மட்டுமே கொழுப்பு நிறைந்து காணப்படும் மற்ற பழங்களில் கொழுப்புச்சத்து அதிகம் கிடையாது. பழங்களை பழரசமாகவோ, வேகவைத்தோ சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிடுவதுதான் மிகவும் நல்லது.

பழம் சாப்பிடும்போது திருப்தி ஏற்படும் வகையில் சாப்பிட வேண்டியது அவசியம். ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வயிறு நிறையவில்லை எனில் இன்னொரு ஆப்பிள் சாப்பிடலாம். வயிறு நிரம்பினால் பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அடுத்த 90 நிமிடங்கள் வேறு ஒன்றும் சாப்பிட வேண்டாம்.

பழத்தை நறுக்கி சாப்பிடுவதைவிட கடித்து சாப்பிடுவது நல்லது. நறுக்கி சாப்பிடும்போது வைட்டமின் ‘சி’ மற்றும் ‘ஏ’ சத்துக்கள் குறைந்து விடுகின்றன. நறுக்கிய பழத்தை பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடுவதால் பழங்களின் சத்தைக் குறைத்து விடுகின்றன.

மூன்று வேளையும் சாதம் சாப்பிடுபவர்கள் ஒரு வேளை சாதத்திற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் தென்படத் துவங்கும்.

உடலில் இரத்தம் அதிகரிக்கும். வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, பப்பாளி ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம். காலை 6 மணி முதல் 9 மணி வரை சாத்துக்குடியில் செய்த பழச்சாற்றை சாப்பிடலாம். 9 மணி முதல் 12 மணி வரை ஆரஞ்சு, பப்பாளி, பேரிக்காய் போன்றவை சாப்பிடலாம்.

மாலை நேரங்களில் மாம்பழம், மாதுளம் பழம், செர்ரி, திராட்சை, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவு உணவில் சேர்த்தால், இரத்தக் கொதிப்பு முதல் பலவகையான நோய்களை தடுக்கலாம்.

இதை படித்துவிட்டு பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழப்போகிறேன் என்று சவால் விடாதீர்கள். அரிசி உணவையே சாப்பிட்டு பழகியதால் என்னவோ பழங்களை மட்டும் சாப்பிட்டால் வயிறு நிறைவு ஏற்படாது பசிப்பது போலவே எண்ணம் தோன்றும்.

                     முரளிதரன். 


Spread the love