நீரிழிவால் ஏற்படும் 10 நன்மைகள்

Spread the love

ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார்.

என்ன? நீரிழிவால் நன்மைகள் ஏற்படுமா? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. தீமைகளிலும் சில நன்மைகள் உண்டு. நீரிழிவு போன்ற ஒரு நாள்பட்ட வியாதி ஏற்பட்டால் தினசரி கவனிக்க வேண்டும். இந்த கவனிப்பால் ஆயுள் அதிகமாகும். “நித்திய கண்டம் – பூரணாயுசு” என்பார்கள்!
நீரிழிவின் நன்மைகள்
1. தன்னைத்தானே அறிந்து கொள்ள உதவும். நீரிழிவு வந்துவிட்டால் அதை சவாலாக ஏற்று சமாளிக்கும் திறனை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் ஏற்படுகிறது.
2. நீரிழிவு நோய்க்காகவும், அது ஏற்படுத்தும் சிக்கல்களுக்காகவும், அடிக்கடி டாக்டரிடம் செல்ல வேண்டும். தவிர இதயம், கண், டயடிசியன் போன்ற மருத்துவ நிபுணர்களிடமும் போக வேண்டிவரும். இந்த தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பால், உங்கள் உடல் நிலை நன்கு பராமரிக்கப்படுகிறது.
3. நீரிழிவு உங்களை உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள, உடற்பயிற்சி செய்ய, உடல் எடையை குறைக்க உசுப்பிவிடுகிறது. இதனால் ஆரோக்கியம் நிலைக்கிறது.
4. வாழ்க்கை முறையில் மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். க்ளுக்கோஸ் மீட்டர் போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்துவதால், உணவு, உடற்பயிற்சி, உடல் எடை இவற்றின் மாறுதல்களை க்ளுகோஸ் மீட்டர் காட்டி விடும்.
5. உடற்பயிற்சி நீரிழிவை மட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல், இதர ஆரோக்கிய பயன்களையும் தரும்.
6. உங்களை சுற்றி ஒரு பெரிய பட்டாளமே துணை நிற்கிறது. அதாவது நீரிழிவு நோயாளிகளின் சங்கம்! உங்களுக்கு உதவ, ஆதரவளிக்க, லட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகளின் கூட்டமே நிற்கிறது!
7. உணவு, சத்துணவு, உடலைப்பற்றிய அறிவியல் விவரங்கள் எல்லாம் உங்களுக்கு அத்துப்படியாகின்றன. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களை விட அதிக மருத்துவ அறிவை, தெளிவை அடைகிறார்கள்.
8. பல கருவிகளை (க்ளுகோ மீட்டர், இன்சுலீன் பம்புகள்) இயக்குவதால், பொறியியல் அறிவு வளர்கிறது.
9. உங்களின் படைக்கும் திறன், கற்பனைத்திறன் அதிகமாகிறது. நீரிழிவு வியாதி உங்களை சிந்திக்க வைக்கிறது. உணவு, உடற்பயிற்சி, க்ளுகோஸ் பரிசோதனைகள் போன்ற திறமையை அமைக்கும் சிந்தனைகள்/ செயல்பாடுகள் புது வழிகளை உண்டாக்கும்.
10. உங்களின் கணிதத்திறமை கூர்மையாகிறது. நீங்கள் பல எண்களை – தினசரி க்ளுக்கோஸ் அளவு, உணவுகளின் கலோரி, அளவுகள், கார்போஹைடிரேட் கொழுப்பு, புரத அளவுகள் – ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கணித மேதை ஆகலாம்!

குழந்தைகளும், நீரிழிவு நோயும்
‘ஒரு குழந்தை கூட நீரிழிவால் இறக்கக் கூடாது.’
ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார்.

உலக நீரிழிவு தினம் நவம்பர் 14 ந் தேதி, 2008 ல், உலகெங்கும் கொண்டாடப்பட போகிறது. அகில உலக நீரிழிவு ஸ்தாபனம், இந்த நாளில், வளரும் தேசங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு பலியாவதை தடுக்க எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளது.
அகில உலக நீரிழிவு ஸ்தாபனம், வளரும் தேசங்களின் சுகாதாரத் துறை மந்திரிகள், மருந்து கம்பெனி அதிபர்கள், கொடையாளிகள், நீரிழிவு சங்கங்கள், மருத்துவ நிபுணர்கள் இவர்கள் எல்லாம் நிறைந்துள்ள அமைப்பு.
இதன் அதிபர் டாக்டர் மார்ட்டின் சிலிங்க், “நாங்கள் நீரிழிவு வியாதியுள்ள குழந்தைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்ச்சிகளை எடுக்க எல்லா தரப்பு மக்களையும், குழுமங்களையும் ஈடுபடுத்தப் போகிறோம்” என்கிறார்.


உலகில் தினந்தோறும் 200 குழந்தைகள் டைப் – 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு தினசரி இன்சுலின் ஊசி மூலம் செலுத்துவதும் இரத்த குளுகோஸ் அளவை கண்காணிப்பதும் கட்டாயமாகிறது. இந்த எண்ணிக்கை வருடா வருடம் 3% அதிகமாகிறது. பள்ளி செல்லும் வயது வராத குழந்தைகளிடையே இந்த எண்ணிக்கை இன்றும் அதிகமாக, 5% ஆக இருக்கிறது. தற்போது 5,00,000 க்கு மேல், 15 வயதுக்கு குறைவான சிறுவர்கள் / சிறுமிகள், நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர்.


வளரும் தேசங்களில், டைப் – 1 நீரிழிவு உள்ள சிறுபிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு காணப்படுகிறது. குறைந்த வருமானம் மற்றும் மத்திய தரவர்க்க மக்களிடையே 75,000 குழந்தைகள் நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டு, கஷ்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உயிர் காக்கும் இன்சுலீன் தேவை. வைத்திய வசதிகள் தேவை. இந்த அடிப்படை தேவைகள் இந்த குழந்தைகளின் அடிப்படை உரிமை. சலுகையல்ல.


அகில உலக நீரிழிவு ஸ்தாபனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் டாக்டர் ஜான் க்ளாட் எம்பண்யா “நிதரிசன உண்மை என்னவென்றால், வளரும் தேசங்களில் பல சிறு பிள்ளைகள், நீரிழிவு நோய் வந்து விட்டது என்று தெரிந்த பின் இறந்து விடுகின்றனர். இன்சுலீன் கண்டுபிடிக்கப்பட்டு 87 வருடங்கள் ஆகியும், உலகின் எளிய, சுலபமாக பாதிக்கப்படக் கூடிய மக்கள், (சிறார்களையும் சேர்த்து) இன்சுலீன் கிடைக்காமல் இறக்கிறார்கள். இது உலகுக்கே அவமானம். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார்.
பல வளரும் தேசங்களில், குறிப்பாக ஆப்ரிக்காவிலும், சில ஆசிய தேசங்களும், உயிர்காக்கும் மருந்துகளும், கண்டறியும் உபகரணங்களும் இல்லாமல், குறைந்த வாழ்கைத் தரம், ஏழ்மையால் பல குழந்தைகள் நீரிழிவு நோயால் உயிரிழக்கின்றனர்.
இதனால் 2001 லிருந்து, அகில உலக நீரிழிவு ஸ்தாபனம், பல பின் தங்கிய தேசங்களின் 1000 சிறு பிள்ளைகளை, நீரிழிவு உள்ள குழந்தைகளை ‘தத்து’ எடுத்து பராமரித்து வருகிறது. “இது போதாது. ஏன், மிகக் குறைவு என்றே சொல்லலாம்” என்கிறார் டாக்டர் சிலிங்க்.
இந்த வருடம் நவம்பர் 14-ந் தேதி நடைபெறவிருக்கும் உலக நீரிழிவு தினத்தின், “நீரிழிவுள்ள குழந்தைகளும், இளம் பருவத்தினரும்” என்பது தான் “தீம்” – விவாதிக்கப்பட இருக்கும் விஷயம். இதில் பல நல்ல முடிவுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று நம்புவோம். 


Spread the love