அறுகம்புல்லின் அற்புத மருத்துவ குணங்கள்

Spread the love

அறுகம்புல் தாவர வர்க்கத்தில் மிகவும் பழமையான வகையைச் சேர்ந்தது. காலம் காலமாக அது பல்வேறு வளர்ச்சிப் படிகளைக் கடக்கின்றது என்றும் கூறலாம். அறுகம்புல் கடும் வறட்சியைத் தாங்கக் கூடியது. இதன் அமோக வளர்ச்சிக்கு புல்லின் வேர்களில் சிறிதளவு ஈரலிப்பு இருந்தால் போதும். ஆடு, மாடு, குதிரை, முயல், மான் போன்றவற்றிற்கு இது உகந்த உணவாகும்.

வரிக்குதிரைகள் புல்மேயும் சந்தர்ப்பங்களில் அறுகம்புல்லை தேடி மேயும் இயல்புடையது. குதிரைகள் மின்னல் வேகத்தில் விரைவாக ஓடுவதற்கும் அவற்றின் வலிமை, ஆற்றல் எனபனவற்றை அளிப்பது அறுகம்புல் தான்.

அறுகம்புல்லின் முக்கியத்துவம் விலங்குகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.

வீட்டு விலங்குகளான பூனை, நாய் போன்றவை கூட சில நேரங்களில் அறுகம்புல்லை பெரும் சிரமத்தின் மத்தியில் தெரிவு செய்தபின் அதனை மென்று தின்றபின் அதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாஷ் என்பன குருதியில் கலந்ததும் விடுகின்றன.  இதனை நாம் சாதாரணமாக அவதானிக்கக் கூடியதாகவுமுள்ளது. பிராணிகளுக்கு துரதிஷ்டவசமாக அருகம்புல் கிடைக்காத பட்சத்தில் அறுகம்புல் வகையைச் சேர்ந்த பிற புற்கள் கைகொடுத்து உதவுகின்றன.

இந்து மதத்தவர்களின் புராணங்களில் அறுகம்புல் கணபதிக்குப் பிடித்தமான புல் என்று கூறப்பட்டுள்ளது. இதனாவன்றோ இந்து மத சம குரவர்கள், ஆன்மீகவாதி கள் பூஜை ஆரம்பமாவதற்கு சற்றுமுன் பசுவின் சாணத்தால் செருகி விடுகின்றனர். இவ்வழக்கம் கோயிலில் மட்டுமல்ல இல்லங்கள் தோறும் நடைபெறுகின்ற ஆன்மீக சடங்கின்போது இது பின்பற்றப்படுகின்றது. இதற்கான காரணத்தை இந்து சமய நூல்கள் இவ்வாறு கூறுகின்றன. அதாவது தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த அசுரணை பிள்ளையார் அவனைத் தப்பியோடி விடாது தும்பிக்கையினால் வளைத்துப் பிடித்து விழுங்கி விட்டாராம். இதனால் அவருக்கு வயிறு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது. வயிற்றினுள் கடுமையான எரிப்பு உணர்வு உண்டாக்கியதும் பிள்ளையார் பலவித சிகிச்சையை மேற்கொண்டும் எதுவும் பலனளிக்கவிலலை. இறுதியில் அறுகம்புல்லை உண்டதும் அது பூரண குணமாகி விட்டது. எனவேதான் இந்து மதத்தவர்கள் அறுகம்புல்லுடன் தான் கணபதியை வழிபடுகின்றனர்.

மிலேனியம் ஆண்டாக திகழுகின்ற இன்றைய காலக் கட்டத்தில் கூட அறிவியலறிஞர்கள் அறுகம்புல்லின் மீது வெறுங்காலுடன் நடந்து சென்றால் உடல் நலம் பெற முடியும் என்று கண்டறிந்துள்ளனர். எனவே, அப்படி நடப்பவர்களின் கால்களுக்கும், நுரையீரல்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்கின்றனர். அதேவேளை, அறுகம்புல் மீது வெறுங்காலுடன் மெதுவாக நடந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி தன்னிச்சையாகவே அதிகரித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

அறுகம்புல் சாறு தயாரிக்கும் வழிமுறை :

ஒரு கிளாஸ் அறுகம்புல் சாற்றிற்கு சுமார் நூறு கிராம் அறுகம்புல்லைப் பிடுங்கி, அதன் வேர்களை நீக்க வேண்டும். புல்லைத் தூய நீரில் நன்கு கழுவ வேண்டும். சிறு துண்டுகளாக்கிய பின் அம்மியில் அல்லது ஆட்டு உரலில் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த புல்லைப் பிழிந்து சாறு எடுத்து ஐந்து முதல் ஆறு மடங்கு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீருக்குப் பதிலாக இளநீரையும் சேர்த்துக் கொள்ளலாம். அறுகம்புல் சாறு அருந்திய பின்னர் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு வேறு எதையும் உண்ணவோ அருந்தவோ கூடாது.

நாம் உண்ணும் பெரும்பாலான உணவு அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை, அறுகம்புல் சாறு காரத் தன்மை உடையது. இது நமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய கால கட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.

அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பனவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும்.

இனி அறுகம்புல்லின் அற்புதத் தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத் தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டானிக் ஆகச் செயற்படுகின்றது. உடலிலிருந்த நச்சுப் பொருட்களை அகற்றி இரத்த ஓட்ட மண்டலத்தை தூய்மை செய்கின்றது. அறுகம்புல்லில் பச்சயம் வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம், கனிம உப்புக்கள் பலவும் உண்டு.

அறுகம்புல் சாறு பற்களுக்கு உறுதி அளித்து வாய்நாற்றத்தை போக்குகிறது. ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதையும் நிறுத்துகிறது.

உணவே மருந்து, மருந்தே உணவு என்ற மருத்துவ உலகின் தந்தை ஒருவரின் கூற்றுக்கு அறுகம்புல் சாறு நமது உணவாகட்டும்.


Spread the love