கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.
வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது. ஓடு போன்று கனமான செதில் செதிலாகவுள்ள மேல் தோலை நீக்கி விட்டால் அடியிலுள்ள பழம் அழகிய ஐஸ்கிரீம் போல் வெண்மையாகக் காட்சி தரும்.
சீதாப்பழம் பாயசமும், ஐஸ்கிரீமும், சீதா மில்க் தித்திக்கும் சுவையுடையது என்பதை அதை உண்டவர்கள் மட்டுமே அறிவார்கள். சுவை மட்டுமல்லாது நிறைந்த சத்துக்களையும் கொண்டது சீதாப்பழம். பழத்தில் பெரும்பகுதி 70% நீரால் ஆனது. இதில் கொழுப்பும், புரதமும் குறைந்திருந்தாலும் மணிச்சதது மிகுந்திருக்கிறது.
பற்களுக்கும், எலும்புகளுக்கும் பயன் மிகவும் தருகின்ற அஸ்கார்பிக் அமிலம் எனப்படும் வைட்டமின் ‘சி‘ சீதாப்பழத்தில் நிறையவே இருக்கிறது. ஒரு குழந்தையின் ஒரு நாள் தேவையான 40 மி.கிராம் வைட்டமின் ‘சி‘ யை ஒரு சீதாப்பழம் கொடுக்க வல்லது.
வைட்டமின் ‘C‘ யைப் போன்று இரும்புச்சத்தும் சீதாப்பழத்தில் மிகுந்திருக்கிறது. 100 கிராம் சீதாப்பழம் 4.3 மி.கி. இரும்புச்சத்தை எளிதாக அளிக்க வல்லது. செயற்கையான இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ளும் போது ஏற்படும் வயிற்று வலியும், வயிற்றை பிசைகின்ற உணர்வும் சீதாப்பழத்தை உண்ணும் போது ஏற்படுவதில்லை. இவற்றிற்கும் மேலாக இதிலுள்ள நார்ச்சத்து (3.1 கிராம்) நீரை இழுத்துக் கொள்ளும் ஸ்பாஞ்சைப் போல் செயல்பட்டு செரிமானத்தை எளிதாக்குவதுடன் மலச்சிக்கலையும் போக்குகிறது.
100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு
ஈரப்பதம்-70.5%, புரதம்-1.6%, கொழுப்பு-0.4%, மணிச்சத்து-0.9%, நார்ச்சத்து-3.1%, கால்சியம்-17மி.கி., பாஸ்பரஸ்-47மி.கி., இரும்புச்சத்து-4.31மி.கி., வைட்டமின் ‘சி‘-37மி.கி., வைட்டமின்‘பி‘ காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து-23.5%.,கலோரி அளவு-10.4%
பேன் தொல்லைக்கு
சீதாப்பழத்தின் விதைகளை சிறிதளவு சீயக்காய் அறைக்கும் பொழுது சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர பேன்கள் நீங்கும்.
குடல் பூச்சிக்கு
மூன்று நாட்களுக்கு ஒரு முறை சீதாப்பழம் சாப்பிட்டு வர குடலில் உள்ள பூச்சி மறையும்.