கடந்த பத்தாண்டு காலமாக மருத்துவ அறிவியலாரால் கடுமையாக விவாதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்கு அமெரிக்க அறிவியலார்கள் ஒரு முடிவான விடையை அளித்துள்ளனர். காப்பி (coffee) மூத்திரப்பைப் புற்றுநோயை (Bladder Cancer) உண்டு பண்ணுகின்றதென்ற விவாதம் சென்ற பல ஆண்டுகளாக நடந்து வந்தது. அண்மையில் யேல் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் செய்த ஆய்வு ஒன்றின் அடிப்படையில் காப்பி பற்றிய இந்தக் குற்றச்சாட்டிற்கு குறிப்பிடத்தக்க ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
காப்பி பற்றிய குற்றச் சாட்டில் உண்மையுள்ளதா என கண்டறிவதற்கென்றே பேராசிரியர் ரால்ப் ஹோவிட்ஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, காப்பி தொடர்பாக பல நாடுகளில் நடத்தப்பட்ட 35 ஆய்வுகளின் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து “காப்பியினால் புற்றுநோய் ஏற்படவில்லை என்பதுடன் மிக அதிகமாகக் காப்பி அருந்திய போதும் கூட புற்றுநோய் ஏற்படுகின்ற வாய்ப்பு உயரவில்லை” என்றும் இக்குழு லான்செட் என்ற புகழ்மிக்க மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டில் ஹார்வேர்டு பல்கலை பொதுநலத் துறை பேராசிரியர் டாக்டர்.பிலிப் கோல் என்பவர் மூத்திரப்பை புற்றுநோய்க்கும் புகைப் பழக்கத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தத் தொடங்கிய போது காப்பி குடிப்பதற்கும் மூத்திரப்பை புற்றிற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற ஐயத்தை முதன் முதலில் எழுப்பினார். இதன் விளைவாகச் சென்ற இருபது ஆண்டுகளில் 35 குழுக்கள் இந்த ஆய்வில் இறங்கின.
உலகப் புற்றுநோய் ஆய்வு நிறுவனமான International Agency for Research on Cancer (IARC) இந்த ஆய்வில் முனைப்புடன் செயல்பட்டு ஆய்வை முடித்த போது “காப்பியில் கபீன் தவிர 700 பிறவகை வேதிப் பொருட்கள் உள்ளன. அத்துடன் நாட்டுக்கு நாடு காப்பி தயாரிக்கும் முறை மாறுபடுகிறது. எவ்வளவு காப்பி எத்தனை வருடம் குடித்தால் புற்றுநோய் ஏற்படும் என்று அறிவிக்கின்ற வகையில் திட்ட வட்டமான விவரங்கள் எதுவும் இல்லை. மேலும் மூத்திரப்பை புற்றுநோய் பெண்களைவிட ஆண்களிடையே 3 மடங்கு அதிகமாக உள்ளது. அதோடு வயது உயர உயர இந்த வாப்பு உயருகிறது. அத்துடனன்றி தோல், பெயிண்டு, ரப்பர், டை தொழிற்சாலைகளில் பணிபுரிவோரிடையே இவ்வகைப்புற்று மிகுதியும் காணப்படுவதால் இதைப் பணிச்சார்புடைய நோயெனவும் கூறலாம்.” என்று குறிப்பிட்டதுடன் காப்பிக்கும் மூத்திரப்பை புற்று நோய்க்கும் தொடர்பில்லை என்று அறிவித்துள்ளது.