இதயம் காக்கும் கொத்தவரங்காய்

Spread the love

கொத்தவரங்காய் என்றவுடன் பழையசோறும், கொத்தவரை வற்றலும்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். கொத்தவரை தமிழ்நாட்டில் சீனி அவரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்காயானது கொத்து கொத்தாகக் காணப்படுவதால் கொத்தவரை என்ற பெயரினைக் கொண்டுள்ளது.

கொத்தவரை என்று தமிழிலும்., சைமப்சஸ் டெட்ரகோலாபா என்ற அறிவியல் பெயராலும், அழைக்கப்படும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் நன்கு வளரும்.  கொத்தவரையின் தாயகம் இது என்று எதனையும் குறிப்பிட முடியாது. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பாலைவனப்பகுதிகளில் இது தோன்றியிருக்கலாம். அரேபியர்கள் தங்கள் குதிரைகளுக்கு தீவனமாக இதை பயன்படுத்தினர். பட்டு வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வந்த  அரேபியர்கள் மூலமாக இக்காய் இந்தியாவிற்கு வந்தது. இந்தியா மற்றும் இந்தோனேசியப் பகுதிகளில் முறையாக முதலில் கொத்தவரை பயிர் செய்யப்பட்டது. 1903-ல் இந்தியாவால் இது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.  கொத்தவரையின் உலக உற்பத்தியில் 80 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. இப்பயிரானது பாகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. இது ஆண்டு முழுவதும் கிடைத்தாலும் ஜூலை முதல் அக்டோபர் வரை அதிகளவு கிடைக்கிறது.

இக்காயானது பிஞ்சாக இருக்கும்போது உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. முதிர்ந்த நிலையில் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கப்படுகிறது. முதிர்ந்த இதன்  விதைகளிலிருந்து கோந்து (பிசின்) தயார் செய்யப்படுகிறது. கொத்தவரையின் விதையிலிருந்து கிடைக்கக்கூடிய கோந்தின் (பிசினின்) காரணமாக இது காய்கறிப்பயிர் என்ற நிலையிலிருந்து வணிகப்பயிர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.

கொத்தவரங்காயின் அமைப்பு மற்றும் வளரியல்பு

வெள்ளை முதல் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்களைப் கொண்டது. இச்செடியின் வேரில், வேர்முடிச்சுக்கள் அதிகமாகக் காணப்படும். அந்த முடிச்சுகளில் காற்று (வளி) மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை நிலைநிறுத்தும் “ரைசோபியம்” எனப்படும் பாக்டீரியாக்கள் உள்ளன, இதன் காரணமாக இத்தாவரம் உள்ள மண்ணானது வளமையாக மாறுகிறது. இது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் லெக்குமி வகையைச் சேர்ந்தது.  கொத்தவரை ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் செடியாகும். நல்ல சூரிய ஒளியும், நல்ல வடிகால் அமைப்பினையுடைய மண்ணும் இப்பயிருக்குத் தேவை.  பயிர் நடவின்போதும், காய்க்கும் பருவத்திலும், இப்பயிருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

கொத்தவரங்காயில் உள்ள சத்துக்கள்

இக்காயில் வைட்டமின்- ஏ, சி, கே மற்றும் H தொகுப்பு வைட்டமின்கள் உள்ளன. இக்காயில் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை காணப்படுகின்றன. குறைந்த எரிசக்தி,  அதிக நார்ச்சத்து,  புரோட்டின்,  கார்போஹைட்ரேட் முதலியவையும் இதில் உள்ளது.

கொத்தவரங்காயின் மருத்துவப் பண்புகள்

சர்க்கரை நோய்க்கு

கொத்தவரையில் உள்ள கிளைக்கோ நியூட்ரியன்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றன.  இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டினைப் பெற்றுள்ளது. அதனால் இதனை உண்ணும்போது இரத்தத்தில் சர்க்கரையின் ஏற்ற இறக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை உணவில் எடுத்தக் கொண்டு பலன் பெறலாம்.

எலும்புகள் வலுப்பெற

கொத்தவரங்காயானது கால்சியத்தையும், பாஸ்பரஸையும் பெற்றுள்ளது..  கால்சியமானது எலும்புகளை பலப்படுத்தி அவைகள் உடையாமல் பாதுகாக்கிறது.  மெக்னீசியமானது எலும்புகளுக்கு வலுவூட்டி அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

இதய நலத்திற்கு

கொத்தவரங்காயில் காணப்படும் நார்ச்சத்தானது இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் தடுக்கப்படுகின்றன. இக்காயில் காணப்படும் ஃபோலேட்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை இதய சம்பந்தமான நோய்களைத் தடுக்கிறது.  ஆகவே இதய நலத்தை காக்க விரும்புபவர்கள் இதை அடிக்கடி தங்கள் சமையலில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

சீரான இரத்த ஓட்டத்திற்கு

இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் திறன் அதிகரித்து ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் உடலின் உள் உறுப்புகளுக்கு நன்கு செலுத்தப்படுகின்றன. ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் உடல் உறுப்புக்களுக்கு சீராக செலுத்தப்படுவதால் அவை திறன்பட செயல்படுகின்றன.

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு

இதில் காணப்படும் ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகள் இன்றி வளர உதவுகின்றன.  இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.  இக்காயில் உள்ள வைட்டமின் கே கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

செரிமானத்திற்கு

இது இரைப்பை மற்றும் குடல்களை சீராக இயங்கத்தூண்டி நல்ல செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது, மலமிளக்கியாக செயல்படுவதோடு செரிமான பாதையில் உள்ள நச்சினை வெளியேற்றவும் உதவுகிறது.

மனஅமைதிக்கு

கொத்தவரங்காயானது மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. இதை உண்ணும்போது மூளை மற்றும் நரம்புகள் அமைதிபடுத்தப்படுகின்றன.இதனால் மனஅமைதி உண்டாகிறது.

கொத்தவரை பற்றிய எச்சரிக்கை

இக்காயானது அளவுக்கு அதிகமாக உண்ணும்போது வயிற்றுப் பொருமலை உண்டாக்கி வயிற்று வலியை ஏற்படுத்திவிடும். எனவே இதனை அளவோடு உண்பது நலம்.

கொத்தவரங்காயினை தேர்வு செய்யும் முறை

கொத்தவரங்காயினை வாங்கும்போது மென்மையாக, இளமையாக, ஒரே சீரான நிறத்துடன் உள்ளவற்றை வாங்க வேண்டும்.  இதன்  மேற்பரப்பில் காயங்கள், கரும்புள்ளிகள் உள்ளவற்றை தவிர்க்க வேண்டும். இக்காயினை வாங்கி அறை வெப்பநிலையில்  வைத்திருந்தால் ஓரிரு நாட்களில் பயன்படுத்திவிட வேண்டும்.  குளிர்பதனப் பெட்டியில் பையினுள் வைத்து காற்றுப் புகாதவாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும். இக்காயினை பயன்படுத்தும்போது காயின் இருஓரங்களில் உள்ள நாரையும், மேலுள்ள காம்பையும் நீக்கவேண்டும்.

கொத்தவரங்காயின் பயன்கள்

கொத்தவரை செடியின் இலையானது கீரையாக பயன்படுத்தப்படுகிறது. இளங்கொத்தவரங்காய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. கொத்தவரை விதைகள் சாலட்,  ஐஸ்கிரீம்,  தயிர்,  பாலேடு, பேக்கரி உணவுகள் போன்றவற்றை கெட்டிபடுத்தவும், நிலைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இதை நன்றாகச் சுத்தம் செய்து சிறிது உப்பு சேர்த்து வேகவைத்த பின் அது உலர்த்தப்பட்டு வற்றலாகவும் பயன்படுத்தப்படுகிறது.  கொத்தவரையின் விதைகளிலிருந்து தயார் செய்யப்படும் பொடியானது தண்ணீருடன் சேர்க்கப்பட்டு பிசின் உருவாக்கப்படுகிறது. கோந்து தன்மைக்கு கேலாக்டோமேனன் என்ற பொருள்தான் காரணமாகிறது. இக்கோந்து பேப்பர் தொழிற்சாலை, துணி தயார் செய்யும் தொழிற்சாலை, டூத்பேஸ்ட், பீட்சா, லிப்ஸ்டிக் போன்ற பல பொருட்கள் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இக்காயானது திரவ மருந்துப் பொருட்களை கெட்டியான சிரப்பாக மாற்றவும், தூள்வடிவ மாத்திரைகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.


Spread the love