ரசாயனம்

Spread the love

உலகில் நீண்ட நாள் ஆரோக்கியமாக, இளமையாக வாழ யாருக்குத் தான் ஆசையிருக்காது! இதற்கான வழிமுறைகள், காய கல்பம், சிகிச்சை முறைகள் இவற்றை தொன்று தொட்டாக மனிதர்கள் தேடி வருகின்றனர். அதிக நாள் வாழ்வது மட்டுமல்ல, கடைசி வரை இளமை துடிப்புடன், தணியாத காதல் உணர்வுகளுடன் வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் உண்டு.

சமச்சீர் உணவை உண்டு, சுயகட்டுப்பாட்டுடன் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவன் 100 வயது வரை, 36000 இரவுகள் வரை, நோய் நொடியின்றி வாழ முடியும் என்கிறது ஆயுர்வேதம். சரகஸம்ஹிதை, பிரத்யேக இளமை மீட்கும் சிகிச்சையை 6 மாதங்கள் மேற்கொண்டால் வயோதிகம் போய் வாலிபம் திரும்ப வரும் என்கிறது.

ஆயுர்வேத அஷ்டாங்களில் ரசாயன சிகிச்சை முக்கியமானது. ‘ரஸம் என்றால் ஆஹாரத்தின் சாராம்சம். அயனம் என்றால் பாதை. ஆஹாரத்தின் சாராமான சத்து உடலெங்கும் சென்றடைந்து, எல்லா உறுப்புக்களையும் போஷிப்பது என்று அர்த்தம்.

சமவெளிகளில் எளிமையான வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த பிருகு, ஆங்கிரஸ, அத்ரி, வசிஷ்டர், காச்யபர், அகத்தியர், புலஸ்தியர், வாமதேவர், கௌதமர் – இந்த மகரிஷிகள் நாடி தளர்ந்து, நரை மூப்புடன் தள்ளாமையால் பீடிக்கப்பட்டனர். இமய மலை சென்று, இம்முனிவர்கள் இந்திரனை அணுக, இந்திரன் ஆயுர்வேதத்தை இவர்களுக்கு உபதேசித்து, ரசாயன முறைகளையும் கற்பித்து தானே இரண்டு வகை ரசாயன முறைகளை பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த கதை மாறுபட்டும் கூறப்படுகிறது.

ரசாயனம் நோய்கள் வந்த பின் மட்டுமல்ல நோய்கள் வருமுன்னேயே காக்கும்.

ஆயுர்வேதம், மனித வாழ்வை மூன்று முறையாக பிரிக்கிறது.

1.         குழந்தை பருவம்         –         16 வயது வரை

2.         இளஞர், நடுவயது பருவம் –            16 – 60 வயது வரை

3.         வயோதிக பருவம்       –         60 – 70 வயது.

மூப்பின் விளைவுகள்

உடலுறுப்புக்கள், வீரியம், இவை பலவீனமாகும். தலைமுடி, நரைத்துவிடும். சருமம் உலர்ந்து, சுருங்கி காய்ந்து விடும். தலைமுடி உதிர்ந்து, வழுக்கை ஏற்படும்.மூளைக்கு சரிவர ரத்தம் போகாததால், அதன் செயல்பாடுகள் குறைந்து, ஞாபக மறதி, குழப்பம் ஏற்படும்.

கண்பார்வை மங்கும். காதுகள் மந்தமாகி செவிடாகும். வாசனையும் நுகரும் சக்தி குறையும். நாக்கு ருசி அறியும் தன்மையை இழக்கும்.வயதினால் நுரையீரல், இதயம் சிறுநீரகம் தவிர எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படும்.நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

ப்ராஸ்டேட் (Prostate) வீக்கத்தால், சிறுநீர் பிரச்சனைகள் உண்டாகும்.

ஆண்மைக்குறை ஏற்படும்.உடலின் எல்லா செயல்பாடுகளும் மந்தமடையும்.

ரஸாயனம், நோய் வாய்ப்பட்ட ஒருவர், அந்த நோயிலிருந்து விடுபட்ட பின்னர், திரும்ப இழந்த ஆரோக்கியத்தை அடையவும், மீண்டும் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. நோயில்லாதவர்க்கும் நோய் வரமால், நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது.

இந்திரனே பரிந்துரைத்த இரு ரசாயனங்கள் பின்வருமாறு:

மூலிகைகள்   செயல்பாடு    குறிப்புகள்    

ரசாயனம் 1

நீர்ப்பிரம்மி, வல்லாரை முதலியவை. பலம் பெருக, உற்சாகம் அடைய, வயதாவதை தடுத்து நிறுத்த            ஆயுள் அதிகரிக்கும் வியாதிகளிலிருந்து விடுதலை. குரல், அறிவு மேம்படும். ஞாபகசக்தி பெருகும்.            இமயமலை மூலிகைகளை பாலுடன் 6 மாதம் எடுத்துக் கொள்ளலாம்.           

ரசாயனம் 2   

பலமூட்ட, உற்சாகமளிக்க வயதாவதை தடுக்க கதீரா, பீஜகம் முதலிய 10 மூலிகைகள்                              

ரசாயனம் “சுக்ரதாது” வை (பாலியல் செயல்பாடுகளுக்கும் விந்துவை தயாரிப்பதற்கும் உதவும் திசுக்கள்) சீராக செயல்பட உதவுகிறது. ஆனாலும் சரியான பாலியல் செயல்பாடுகளுக்கு, தனியே பிரத்யேக சிகிச்சையான “வாஜீகர்ணம்” உள்ளது.

மூலிகை மருந்துகளுடன், ரசாயன சிகிச்சை முடிவதில்லை. கோபதாபங்களை விலக்க, கெட்ட பழக்கங்களை விட்டு விலகி, மறுபடியும் இளமையின் புத்துணர்ச்சியை மீண்டும் பெற ரசாயனம் உதவுகிறது. உடலின் நோய்தடுக்கும் சக்தியை அதிகரிக்கிறது. சர்மம் பிரகாசமைடைகிறது. குரல் வளமடைகிறது.

ஆயுர்வேதம் இரண்டு வகை ரசாயன சிகிச்சை முறைகளை சொல்கிறது. ஒன்று குடிப்பிரவேசிகம், மற்றொன்று வாதாதபிகம்

  1. குடிப்பிரவேசிகம்:- இந்த முறையில், சிகிச்சை பெற வேண்டியரை ஒருதனி குடிலில் தங்க வைத்து, அதில் ரசாயன மருந்துகளை உண்டு, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சிகிச்சை பெற வேண்டும். சில ஆயுர்வேத நூல்கள் 4லிருந்து 12 வாரம் வரை சிகிச்சையில் இருக்க வேண்டும் என்கின்றன. சிகிச்சை பெறுபவரின் வயது, நோயின் தன்மை கருத்தில் கொண்டு சிகிச்சை நாட்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். இந்த ‘ஸ்பெஷல்’ சிகிச்சையை, அரசர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், சரகர் பரிந்துரைக்கிறார். இந்த “குடிலை” அமைப்பதற்கும் பல விதிமுறைகள் கடைப்பிடிக்கபடுகின்றன. நல்ல, புனிதமான இடத்தில், கிழக்கு நோக்கி, குடில் அமைய வேண்டும். நல்ல வசதிகளுடன் இருக்க வேண்டும். மருந்துகள் உபகரணங்கள் அனைத்தும் குடிலிலேயே இருக்க வேண்டும். ஒரு வைத்தியர் எப்போதும் இருக்க வேண்டும். சிகிச்சை நல்ல நாளில், உத்தராயன பருவத்தில் தொடங்க வேண்டும். சிகிச்சை பெறுபவர் தலை “மொட்டை” அடிக்கப்பட்டு பல மருந்துகளால் வயிறு சுத்தம் செய்யப்பட்டு, குடிலில் நுழைய வேண்டும்.. உடல் கழிவுகள் பூர்த்தியாக வெளியேற்றப்படாமல், ராசயன சிகிச்சை ஆரம்பிக்கப்படமாட்டாது. முதலில் நீர்த்த அரிசிக் கஞ்சியுடன் நோயாளிக்கு பத்தியம் தொடங்கும். பிறகு கெட்டியான அரிசிக் கஞ்சி. பின்பு பருப்பு “சூப்புகள்” (அ) மட்டன் சூப்புகள் கொடுக்கப்படும். 12 ம் நாளில் முழு உணவு தரப்படும். 15 ம் நாள் உணவுடன் பார்லி, பசும்நெய் சேர்க்கப்படும். சிகிச்சை பெறுபவர் “தியானம்” செய்யவும் ஊக்குவிக்கப்படுவார்.
  • வாதாதிபீகம்:- இந்த கால ஆஸ்பத்திரிகளில் உள்ள ‘புறநோயாளி’ (out – patient) கள் போல, இந்த முறையில் நோயாளி தன் வீட்டில் இருந்து கொண்டு, தனது தினசரி வேலைகளை செய்து கொண்டு சிகிச்சை பெறுவார். திறந்த வெளியில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

ரசாயன மூலிகைகள்

ரசாயன சிகிச்சைக்கு ஆயுர்வேதத்தில் 60 க்கும் மேற்பட்ட மூலிகைகளை ஆயுர்வேதம் சொல்கிறது. கடுக்காய், நெல்லிக்காய், இவை முக்கியமான பொருட்கள். கடுக்காய் கழிவுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. நெல்லிக்காய் இளமையை பாதுகாக்கும். மற்றும் பால், நெய், வெண்ணை, நல்லெண்ணை, பூண்டு, மணத்தக்காளி முதலியவைகளும், ரசாயன குணங்கள் உடையவை. ச்யவன பிராச லேஹியமும் முக்கிமான ரசாயன “டானிக்”.

சில ரசாயன மூலிகைகளின் பட்டியல்:-

மூலிகைபலன்கள்

1. சேராங்கொட்டை Semecarpus anacardium          நோய் தடுப்பு சக்தியை அதிகப்படுத்தும். கபத்தை கண்டிக்கும்.

2. கீழ்க்கண்ட மூலிகைகளின் கலவை (i) வாகை  (ii) ஆடாதொடை  (iii) மணத்தக்காளி,     (i) Albizzia lebbeck (ii) Adhatoda vasica (iii) Solanum Nigram     அலர்ஜிக்கு எதிரிகள்.         

3. கீழ்க்கண்ட மூலிகைகளின் கலவை (i) நீர்பிரம்மி (ii) வசம்பு (iii) சங்க புஷ்பி (iv) வல்லாரை         (i) Bacopa Monnieri (ii) Acorus Calamus (iii) Convolvulus Pluricaulis (iv) Centella Asiatica     அறிவு, ஞாபக சக்தி அதிகரிக்க           

4. மூக்கிரட்டை         Boerhaavia diffusa      சிறு நீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.        

5. (i) திப்பிலி (ii) பூண்டு   Piper Longum Allium Sativum திசுக்களை காக்கும். கல்லீரல், வாத, கப நோய்களுக்கு நல்லது.

6. குக்குலு      Commiphora Mukul    ஜீரணசக்தியை அதிகரிக்கும்.

7. சீமை சதவாரி        Asparagus racemosus  ரத்த சுழற்சியை சீர் செய்கிறது.

8. பூனைக்காளி         Mucuna Pruriens         திசுக்களை புதிப்பிக்கிறது நரம்புகளை வலுப்படுத்தும். வயோதிக பாலியல் குறைபாடுகளை போக்கும்.       

9. நெல்லிக்காய்        Phyllanthus Emblica   இளமையை பாதுகாக்கும். 

ரசாயன சிகிச்சையில் மூன்று வகைகள் உள்ளன.

  1. ஆரோக்கியத்தை முன்னேற்றுவது
  • உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது
  • பத்திய உணவு மற்றும் தாதுக்களை வலுப்படுத்துவது
  1. ஆரோக்கியத்தை முன்னேற்றுவது

இதிலும் சில உட்பிரிவுகள் உள்ளன.

அ. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தல் – இதற்காக பயன்படுத்தும்  மூலிகைகள் – நெல்லிக்காய், சேராங்கொட்டை,

ஆ. மன வலிவுக்கு – பிரம்மி, வல்லாரை, வசம்பு, சங்கபுஷ்பி.

  •    உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது

த்வாரக் (Hydnocarpus Laurifolia) சேராங்கொட்டை, கோஷ்டம் (Saussurea lappa), சிலாஜித், மஞ்சள், நெல்லிக்காய், ரஸ்னா (Pluchea lanceolata), நிலத்துத்தி, குக்குலு, திப்பிலி,

  •       பத்திய உணவு மற்றும் தாதுக்களை வலுப்படுத்துவது

க்ரிதா, பால்,

ரசாயனத்தின் நன்மைகள்

ரசாயன சிகிச்சை நோய்கள் வராமல் தடுக்கிறது. அப்படி வந்துவிட்டாலும் நோயின் தீவிரத்தை குறைக்கும். குணமாவதை துரிதப்படுத்தும்.

நல்ல திசுக்களை மேலும் பலப்படுத்தும். நோய்கள் வராமல் திசுக்களை பாதுகாக்கும்.

ரசாயனம் ஜீரண அக்னியை தூண்டிவிடும். பசி இன்மையை போக்கும். இதனால் நோய்கள் சீக்கிரம் குணமாகும்.

ரசாயனம், வெண்குஷ்டம், கிருமி பாதிப்புகள், இளநரை, மூலம், ஜீரணக்கோளாறுகள், யானைக்கால், சுவாச மண்டல கோளாறுகள், சோகை, ருமாடிஸம், ஆஸ்துமா, கல்லீரல் நோய் முதலிய பல நோய்களுக்கும் நல்ல நிவாரணம் அளிக்கும்.


Spread the love