சர்க்கரைக்கு சரியான பூ!

Spread the love

இது பயமுறுத்தும் காய்கறி அல்ல. இது குறுக்குவெட்டு தோற்றம் உடைய காய் (பூ) வகை. இதில் பல விதமான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கியுள்ளது. காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை. இதில் கொழுப்புச் சத்து கிடையாது. ஆகையால், இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நீங்கி விடும் என்பதால், இதை ஐந்து நிமிடத்திற்கு மேல் சமைக்க வேண்டாம். சுவை அதிகம் உள்ள காலிஃப்ளவரை பலவிதங்களிலும் சமைக்க முடியும். மேலும் காலிஃப்ளவர் சந்தையிலே கிடைக்கக் கூடியவை.

காலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் C -யும், மெக்னீசியமும் அதிக அளவில் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பலவிதமான தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

இதில் ஒமேகா கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் ‏“கே” சத்தும் நிறைந்துள்ளது, இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகிறது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ் (ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்கலாம்.

காலிஃப்ளவரில் நச்சுத் தன்மை நீக்கும். சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பாதுகாக்கிறது.

இதய நோய்களுக்கு எதிரான ஆன்டி -ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது. இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும்.

செரிமானத்தை அதிகரிக்கும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவரில், சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. எனவே காலிஃப்ளவரை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலின் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலைக்காக்க உதவுகின்றது.

குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகள் உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.

காலிஃப்ளவரில் இருக்கும் மற்றொரு ஆரோக்கியமான சக்தி, இதில் இருக்கும் ஃபோலேட் (folate) மற்றும் வைட்டமின் H சத்துக்கள், வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது.

காலிஃப்ளவரில் புற்றுநோயை எதிர்க்கும் சல்ஃபோராபேன் மற்றும் இண்டோல்- 3-காஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால், இது இயற்கையிலேயே புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை, வாய், பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.

அன்றாட உணவில் காலிஃப்ளவர் சேர்ப்பதன் அவசியம்

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், நம் உடலுக்குத் தேவையான கொழுப்பு சிறிதளவு ஆகியவை காணப்படுகின்றன.

இதில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதில் ஆண்டி ஆக்ஸிடேஷன் அதிகம் உள்ளது. வைட்டமின் C, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும், பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ளது.

இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய கட்டுப்படும்.

இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது.

இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது, மூலத்தை கட்டுப்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்கும். உடல் இளைத்தவர்களுக்கு இது சத்தானது. தினம் காலிஃப்ளவரை சமையலில் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பாக குண்டாகலாம்.

இதில் H1, 2, 3, 5, 6 மற்றும் H9 ஆகிய வைட்டமின்கள் காணப்படுகின்றன. மேலும் புரதச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் இதில் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் உள்ள காலிஃப்ளவரை வாரம் இருமுறை உட்கொண்டால் உடல் நலம் பெறும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

காலிஃப்ளவர் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று தெரியுமா?

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே அனைத்து சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. உடல் நலத்திற்கு அனைத்து விதமான சத்துக்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏதோ சில அற்ப காரணங்களை கூறி அவற்றை தவிர்ப்பது முட்டாள்தனமானது. தற்போது இந்தியா, சீனா, இத்தாலி, ப்ரான்ஸ் மற்று அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிகளவில் காலிஃப்ளவரை உற்பத்தி செய்கின்றன.

காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு இரசாயனங்களை சேர்த்து, சுவையேற்றி, நிறமாற்றி எண்ணெயில் பொறிக்கும் பொழுதுதான் அது உடல் நலத்திற்கு தீங்காகிறது.

சத்துக்கள் :

காலிஃப்ளவரில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறையவே இருக்கிறது. அதோடு ஃபோலேட், ரிபோஃபோளேவின், நியாசின், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்து இருக்கின்றன. குறிப்பாக இதில் கலோரிகள் மிகவும் குறைவு. எளிதில் கரையக்கூடிய ஃபைபரும் இருக்கிறது. இதைத்தவிர ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ம் காணப்படுகிறது. இதனை நாம் எடுத்துக்கொள்வதால் நம் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன அதே நேரத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

சோர்வு :

இன்றைக்கு பலரும் உச்சரிக்கும் பிரச்சனை காரணமே தெரியாமல் சோர்வாக இருக்கிறேன் என்பது தான் அது. காலிஃப்ளவரில் உள்ள இன்டோல்ஸ் மற்றும் க்ளூகோசினேட்ஸ் ஆகியவை நமது  உடலில் உள்ள செல்களை உற்சாகப்படுத்துகிறது. இதனால் சோர்வு நீக்கப்படுகிறது.

இதயம்:

நம்முடைய இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் காலிஃப்ளவர் முக்கிய பங்காற்றுகிறது. இதிலிருக்கும் க்ளூகோரஃபனின் மற்றும் வைட்டமின் கே இதை செய்கின்றது. க்ளூகோரஃபனின் நம் ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராக இயங்குகிறது.

வயிறு :

காலிஃப்ளவரில் உள்ள அதிகப்படியான டயட்டரி ஃபைபர், உணவு செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. அதோடு நம் உடலில் சேர்ந்திருக்கும் டாக்ஸின்களையும் வெளியேற்றி வைக்கிறது. மேலும், காலிஃப்ளவரில் இருக்கும் ஐசோதியோசைனேட்ஸ் வயிற்றில் வரக்கூடிய பல்வேறு உபாதைகளை தடுக்கிறது

எலும்பு வளர்ச்சி :

காலிஃப்ளவரில் அதிகப்படியாக இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் கோலோஜென் உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிப்பதோடு இதில் உள்ள வைட்டமின் கே-யானது எலும்புகள் தொடர்பான நோய்களை வராமல் தடுக்கிறது,

வயதான தோற்றம் :

காலிஃப்ளவரில் உள்ள வைட்டமின் சி மற்றும் பலவிதமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நம்முடைய உள்ளுறுப்புகளுக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுத்து வயதான தோற்றத்தை தவிர்க்க உதவுகிறது. குறிப்பாக வயதானவர்கள் இதனை அதிகம் சாப்பிடுவதால் பார்வைக்குறைப்பாடுகள் தவிர்க்கப்படுகிறது.

நச்சுக்கள் :

உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்வதைப் போன்றே, உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இதில் இருக்கும் இண்டோல் 3 கார்பினால் நச்சுக்களை வெளியேற்ற உதவும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

சருமம் :

காலிஃப்ளவரில் உள்ள “சல்ஃபோரபேன்” புற ஊதாக் கதிர்களிடம் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாப்பதோடு சரும செல்களின் வளர்சியிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதன் காரணமாக சரும ஆரோக்கியம் பராமரிக்க வேண்டுபவர்கள் இதனை சற்று அதிக அளவில் உண்ணலாம்.

நரம்புப் பிரச்சனைகள் :

காலிஃப்ளவரில் இருக்கும் சல்ஃபோரபேன் நமது உடலில் உள்ள நரம்புகளின் செயல்களுக்கு முக்கியப்பங்காற்றுகிறது. இவை உடலில் க்ளூடதைன் சுரப்பினை அதிகரித்து நரம்புகள் தொடர்பான பிரச்சனைகளை வராமல் காத்திடும்.

ஹைப்பர் டென்சன் :

காலிஃப்ளவரில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களான குளூகோரஃபனின் மற்றும் சல்ஃபோரபேன் ஆகியவை மன அமுத்தத்தை குறைக்க கூடியவை. இது இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை தவிர்க்கலாம். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் போன்றவை உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடுப்பதால், கொழுப்பு சேர்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த பயம் தேவையில்லை.

எலக்ட்ரோலைட் :

நம் உடலில் உள்ள தண்ணீர்ச்சத்து செல்கள் துரிதமாக வேலை செய்ய மிகவும் அவசியமானதாகும். காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் நம் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட் சுரப்பை உறுதி செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

உடலில் தோன்றிடும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆரம்ப புள்ளியாக இருப்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான். காலிஃப்ளவரில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. இதிலிருக்கும் வைட்டமின் சி பல்வேறு பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

கர்ப்பம் :

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதனை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில், இதிலிருக்கும் ஃபோலேட் கருவிலுள்ள சிசுவின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாகிறது. அத்துடன் இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் கர்பிணிப்பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மூளை வளர்ச்சி :

காலிஃப்ளவரில் உள்ள கோலின் மற்றும் பாஸ்பரஸ் உடலில் உள்ள செல்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகும். மேலும், நமது மூளையின் செயல்பாடுகளிலும் இவை முக்கிய பங்காற்றுகிறது.  இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் H6 மூளையின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோய் :

காலிஃப்ளவரில் உள்ள வைட்டமின் C மற்றும் பொட்டாசியம் ஆகியவை சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்கின்றன. பொட்டாசியம் உடலில் உள்ள குளுக்கோஸை செரிக்க உதவுவதோடு கணையத்தில் இன்ஸுலின் சுரப்பையும் அதிகப்படுத்துவதால் உடலில் அதிகப்படியான சர்க்கரை சேர்வது தவிர்க்கப்படும்.

பக்கவாதம் :

இதிலிருக்கும் “அலிசின்” நுரையிரலை சுத்தமாக்குவதோடு ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதனால் பக்கவாதம் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.

தவிர்க்க :

காலிஃப்ளவரினால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புகளுண்டு. இவை மிகவும் அதிகமாக உண்ணும் போது மட்டுமே சாத்தியம். காலிஃப்ளவரில் இருக்கும் கார்போஹைட்ரேட் செரிமானம் ஆகாமல் உடலிலேயே தங்கிவிடும். பின்னர் பாக்டீரியா தொற்று ஏற்ப்பட்டு வயிற்றில் வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும். இதிலுள்ள “ரின்ஸ்” அளவுக்கு மீறி நாம் அதிகமாக சாப்பிடும் போது, நமது உடலில் யூரிக் அமிலமாக மாறுகிறது இவை அதிகமாக சேர்ந்தால் சிறுநீரகத்தில் கற்கல் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதில் அதிகப்படியாக உள்ள வைட்டமின் “கே” ரத்தம் உறைதல் சீராக இருப்பவர்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ரத்தம் உறைதலுக்கு தனியாக மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் இதனை தவிர்ப்பது நலம். அல்லது காலிஃப்ளவரை சாப்பிடுவதற்கு முன்னார் மருத்துவ ஆலோசனையை நாடலாம்.

காலிஃப்ளவர் சில்லி :

தேவையான பொருள்கள் –

காலிஃப்ளவர் – 1/4 கிலோ                                                                    சோளமாவு   –   1 மேஜைக்கரண்டி                                                                    அரிசி மாவு  –   1 மேஜைக்கரண்டி                                                                  கடலை மாவு –  1 மேஜைக்கரண்டி                                                               மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி                                                                                       இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி                                                              கலர் பொடி –  1/2 தேக்கரண்டி                                                                        உப்பு         தேவையான அளவு                                                  பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை –

காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாக உதிர்த்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க   வைத்து நன்றாக கழுவிக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காலிஃப்ளவருடன் சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கலர் பொடி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி பதினைந்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காலிபிளவர் துண்டுகளை போடவும்.

இரு புறமும் திருப்பி விட்டு காலி பிளவர் வேகும் வரை பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். (இது அதிலுள்ள எண்ணையை உறிங்சி எடுத்துவிடும்)     

மீதமுள்ள எல்லா காலிபிளவர் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான காலி பிளவர் சில்லி ரெடி.

மொறு மொறு காலிஃப்ளவர் 65

காலிஃப்ளவர் ஊட்டச்சத்துள்ள ஒரு உணவுப் பொருள். இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் உள்ளது. சத்தான உணவு என்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரலாம். அதுவும் மொறு மொறுப்பான கோபி 65 செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உட்கொள்வர்.

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் –    1                                                                                 சோள மாவு –      4 தேக்கரண்டி                                                                                   அரிசி மாவு –       2 தேக்கரண்டி                                                                            மிளகாய் தூள் –     1 தேக்கரண்டி                                                                     கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி                                                          சமையல் சோடா –   1 சிட்டிகை                                                                      இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி                                                                  உப்பு               தேவையான அளவு                                             எண்ணெய் –          பொரிக்க                                                                 மைதா மாவு –         2 தேக்கரண்டி.

செய்முறை

காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு இரண்டு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இதனால் அதிலுள்ள கண்ணிற்கு தெரியாத பூச்சிகள் இறந்துவிடும். பின்னர் அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரை கொட்டி அதன் மீது சோள மாவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தூவி கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் வாணலியில் எண்ணையை காயவைத்து அதில் ஊறவைத்த காலிஃப்ளவரை போட்டு பொரித்தெடுக்கவும். மொறு மொறுப்பான கோபி 65 தயார். கொத்துமல்லி தூவி பரிமாறவும்

காலிஃப்ளவர் ரைஸ்

தேவையான பொருட்கள் :

அரிசி – ஒன்றரை கப்,                                                                      காலிஃப்ளவர் – சிறிய பூ 1                                                                           சீரகம் – ஒரு தேக்கரண்டி,                                                                                              கிராம்பு – 2,                                                                                   பச்சைமிளகாய் – 2,                                                                                     தக்காளி கெட்சப் – 2 தேக்கரண்டி,                                                                          மல்லித்தழை – சிறிது,                                                                                                                    எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து உப்பு நீரில் போட்டு வைக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு வறுக்கவும். உதிர்த்து வைத்துள்ள காளிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். பிறகு உப்பு, தக்காளி கெட்சப், மல்லித்தழை சேர்த்து கிளறி வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

கோபி மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் –      1                                                                                 பெரிய வெங்காயம் – 2                                                                              பச்சை மிளகாய் –    2                                                                          முட்டை –           1                                                               அஜினோமோட்டோ – 2 சிட்டிகை                                                                  மிளகுத்தூள் –       அரைத் தேக்கரண்டி                                                       எண்ணெய் –        அரை லிட்டர்                                                           சோள மாவு –      25 கிராம்                                                             மைதா மாவு –       50 கிராம்                                                                   தக்காளி சாஸ் –      கால் கப்                                                                     சோயா சாஸ் –       ஒரு மேசைக்கரண்டி                                                         கொத்தமல்லி –       ஒரு கொத்து

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து முழு காலிஃபிளவரை அதில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து எடுத்து சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, அஜினோமோட்டோ, உப்பு, கால் தேக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரை முதலில் அடித்து வைத்துள்ள முட்டை கருவில் தோய்த்து எடுத்து, பிறகு கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போட வேண்டும்.

காலிபிளவர் இளஞ்சிவப்பு நிறத்துக்கு வந்ததும் எடுத்து விட வேண்டும். பின்னர் வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து கிளற வேண்டும்.

அதன் பிறகு தக்காளி சாஸ் ஊற்றி உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளற வேண்டும். பிறகு பொரித்து வைத்திருக்கும் காலிஃபிளவர் துண்டங்களை ஒவ்வொன்றாய் வாணலியில் போட வேண்டும். மசாலாவுடன் நன்கு கலக்குமாறு துண்டங்களை போட்டு இரண்டு  நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.


Spread the love