மரவள்ளிக் கிழங்கு, “ யூஃபோர்பியேசியே ” என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் “ மோனிகாட் எஸ்குலண்டா ” என்பதாகும். இதன் தாயகம் தென் அமெரிக்காவைச் சார்ந்த பிரேசில் ஆகும். இது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் மூலம் தெரிய வருகின்றன.
மரவள்ளி கிழங்கு, தமிழ்நாட்டில் குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரசீனிக் கிழங்கு, கப்பங் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து தயார் செய்யப்படும் ஜவ்வரிசி, மரவள்ளி மாவு, சிப்ஸ் ஆகியவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். சோளம், அரிசி ஆகியவற்றை அடுத்து அதிகளவு கார்போஹைட்ரேட்டை கொண்டுள்ள உலகின் மூன்றாவது பெரிய உணவுப் பொருளாகவும். இது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கு உணவாக, பயன்படுத்தப்படுகிறது. இக்கிழங்கு பல்வேறு தொழில்துறைகளிலும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இக்கிழங்கிற்கு உலகளவில் மிகவும் பொருளாதார முக்கியத்துவம் இருக்கிறது.
உலகில் சுமார் 15.7 மில்லியன் பரப்பளவில் இது பயிர் செய்யப்படுகிறது. மழைவளம் குறைந்த சாதாரண மண்ணிலும் செழித்து வளர்வதால் இது வளரும் நாடுகளின் வேளாண்மையில் இது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
மரவள்ளி கிழங்கின் வளரியல்பு மற்றும் அமைப்பு
மரவள்ளி செடியின் பருத்த தண்டினை வெட்டி நடவு செய்து, இது பயிர் செய்யப்படுகிறது. இதன் மேல்தோல் தடித்து சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். உட்பகுதியானது வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் கெட்டியாக இருக்கும். இது வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வளரும். இது வளர ஈரப்பதம் மற்றும் நீர்தேங்காத, வளமான மணற்பரப்பு தேவை. இது இலேசான இனிப்புடன் கூடிய தனிப்பட்ட சுவையினை உடையது. இக்கிழங்கினை சமைத்தே உண்ண வேண்டும்.
மரவள்ளியின் வரலாறு
தென்அமெரிக்கப் பகுதியிலிருந்து போர்த்துகீசியர்கள் மற்றும் ஸ்பானியர்களால் உலகெங்கும் இது பரவியது. 1558-ல் போர்த்துகீசியர்களால் இது ஆப்பிரிக்காவின் காங்கோவில் அறிமுகம் செய்யப்பட்டது 17 – ஆம் நூற்றாண்டில் கேரளாவில், போர்த்துக்கீசியர்களால் இது இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது . உலகில் அதிகளவு மரவள்ளியை நைஜீரியா தான் உற்பத்தி செய்கிறது.
மரவள்ளி கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
இக்கிழங்கில் வைட்டமின்கள் சி, கே, இ, H1 (தையமின்), H2 (ரிபோஃப்ளோவின்), H3 (நியாசின்), H6 (பைரிடாக்ஸின்), மற்றும் ஃபோலேட்டுகளும், தாது உப்புகளான கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, பொட்டாசியம் முதலியவையும் புரோடீன், நார்ச்சத்து, உடலுக்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரால், எரிசக்தி, மற்றும் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
மரவள்ளியின் மருத்துவ பண்புகள்
உணவு செரிமானத்திற்கு
இக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி உடலைப் பாதுகாக்கிறது. இக்கிழங்கின் நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. உணவு செரிமானத்தைப் சமப்படுத்துகிறது.
பிறப்பு குறைபாடுகளைக் களைய
இதில் உள்ள ஃபோலேட்டுகள், பி தொகுப்பு வைட்டமின்கள் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கும், கருவில் இருக்கும் சிசுக்களுக்கும் நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஏற்றது.
ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு
மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்புச் சத்து, இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துகிறது. அதிக இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு அளிக்கப்படுகிறது. இது தவிர, செல்களின் மறுவளர்ச்சி, பராமரிப்பு மற்றும் காயங்களை சரி செய்தல் ஆகிய பணிகள் சீரான இரத்த ஓட்டத்தின் காரணமாக மேம்படுத்தப்படுகின்றன.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு
பொதுவாக, மனிதர்களுக்கு வயதாகும்போது உடலில் உள்ள எலும்புகள் நெகிழ்தன்மை , உறுதி, அடர்த்தி ஆகியவற்றை இழந்து விடுகின்றன. இதனால் ஆஸ்டியோபோரேஸிஸ் மற்றும் எலும்பு சம்பந்தமான பல நோய்கள் வருகின்றது. மரவள்ளியில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் கே ஆகியவை எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரவள்ளியில் உள்ள வைட்டமின் கே-வானது மூளைக்கு செல்லும் நரம்புகளைப் பலப்படுத்துகிறது. இதனால் அல்சீமர் உள்ளிட்ட மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
சீரான இரத்த அழுத்தத்தைப் பெற
மரவள்ளியில் உள்ள பொட்டாசியம் நம் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. பொட்டாசியம் இதயத்திலிருந்து இரத்ததை எடுத்துச்செல்லும் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடலின் அனைத்து பகுதிகளிலும் இரத்தம் ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. மரவள்ளியில் உள்ள நார்ச்சத்து நரம்புகளில் உள்ள தேவைய”ற்ற கொழுப்பினை கழிவுகளாக வெளியேற்றுகிறது. இதனால் இரத்த குழாய்களில் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படாது தவிர்க்கப்படுகிறது.
உடலின் எடையை அதிகரிக்க
மரவள்ளியானது அதிகளவு கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளதால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இக்கிழங்கினை பக்குவமாக சமைத்து இதில் உள்ள முழு பயன்களையும் பெறலாம்.
மரவள்ளி கிழங்கினை வாங்கும் முறை
மரவள்ளிக்கிழங்கு எல்லா காலங்களிலும் சாதாரணமாக கிடைக்கும் இக் கிழங்கினை வாங்கும்போது புதிதான, விறைப்பான, சதைப்பற்று மிக்க கிழங்கினை தேர்வு செய்ய வேண்டும். கிழங்குத் தோலில் காயங்கள், கீறல்கள் உள்ளவற்றை தவிர்க்க வேண்டும். அறையின் வெப்பநிலையில் நான்கு, ஐந்து நாட்கள் இக்கிழங்கினை வைத்து பயன்படுத்தலாம். இக் கிழங்கின் தோலினை உரித்து தண்ணீரில் போட்டு குளிர்பதனப் பெட்டியில் மூன்று நாட்கள்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். சூப்புகள், சாலட்டுகள், சிப்ஸ்கள், பிரட், கேக், இனிப்புகள் தயாரிக்க இக்கிழங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
மரவள்ளி கிழங்கினைப் பற்றிய எச்சரிக்கை
இக்கிழங்கின் தோலில் “சயனோஜெனிக் கிளைகோசைட்” என்ற நச்சு வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது எனவே இக்கிழங்கினை முறையாக சமைத்து தோல் நீக்கி உண்ண வேண்டும். கிழங்கில் உள்ள நச்சு வேதிப்பொருளின் பாதிப்பால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு சில நேரங்களில் மரணம் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மிகவும் முக்கியமாக இக் கிழங்குடன் இஞ்சி சேர்த்து சமைக்கக்கூடாது. இக்கிழங்குடன் இஞ்சி சேர்த்த உணவுப்பொருட்களை உண்ண நேரிட்டால் மரணம் நேரிடலாம். எனவே இதனுடன் இஞ்சி சேர்ப்பதைத் தவிர்த்து விடவும்.