இலைக்கள்ளி

Spread the love

இலைக்கள்ளி என்பது ஒரு கள்ளி வகை. இது எல்லாவித மண்ணிலும் வளரும் தன்மையுடையது. இது வெப்பத்தைத் தாங்கி, சுமார் ஆறு அடி முதல் பன்னிரண்டு அடி உயரம் வளரக் கூடிய சிறு மர வகை இனம். இதன் தண்டுகள் பச்சையாக இருக்கும். இலைகள் முயல் காதுகள் போல் பச்சையாக எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை தடிப்பாக இருக்கும். பூ சிகப்பாக மலர்ந்து முக்கோண வடிவில் சிறிய காய்களாகும். இதை விதை மூலம் இன விருத்தி செய்வதை விட கிளையை வெட்டி நடுவதன் மூலம் விரைவில் வளர்கிறது.

தாவரப்பெயர் :- EUPHORBIBA LIGULARIA.                                     தாவரக்குடும்பம் :- EUPHORBIACEAE.

மருத்துவப் பயன்கள் :-

மற்ற வகைக் கள்ளிகளுக்குள்ள எல்லா குணங்களும் இதற்குண்டு. இலைக்கள்ளி சிறந்த மருத்துவ குணமுடையது. மலம் போக்குதல், கோழையகற்றுதல், தடிப்புண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது.

இது காது சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும். பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன் படுகிறது. ஆஸ்த்மா, இருமல், காதுவலி, மூலம், மூட்டுவலி, காய்ச்சல்,  இரத்தசோகை, குடல் புண், தோல் நோய்கள், மலச்சிக்கல், மஞ்சள்காமாலை, வாதம், கட்டி, சிறுநீர் தடைகள் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

இலையை வாட்டிச் சாறு பிழிந்து இளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும். இதன் இலைச்சாறு அல்லது இதன் பாலை வேப்பெண்ணை சேர்த்து நன்கு கலந்து மேற்பூச்சாக தேய்த்து வர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை தீரும்.

இலையை வாட்டிப் பிழிந்து ஏழெட்டு துளிகள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க மலக்கட்டு நீங்கும். பிழிந்த சாற்றுடன் சம அளவு தேன் கலந்து காய்ச்சி ஒரு தேக்கரண்டியை முப்பது மி. லி. நீரில் கலந்து மூன்று வேளையும் கொடுத்து வந்தால் ஈளை, இரைப்பிருமல் ஆகியவை தீரும்.

இதன் இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சி அரை அல்லது ஒரு தேக்கரண்டி காலை, மாலை கொடுத்து வரக் கக்குவான், சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலை நோய் ஆகியவை தீரும். இதன் வேருடன் வெங்காயத்தை அரைத்து அதை குழந்தைகளின் அடிவயிற்றில் பூசினால் குடல் புழுக்கள் நீங்கும்.

இதன் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து நன்றாகச் சூடு செய்து பதம் வந்த பின் இறக்கி ஆற வைத்து வாதம் உள்ள இடத்தில் பூசினால் குணமடையும் இலைக்கள்ளிப் பாலுடன் மஞ்சள் பொடி சேர்த்து மூலத்திற்குப் பயன் படுத்தலாம்.

இலைச் சாற்றை அல்லது பாலை பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.

இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச்சுற்றுக்குக் கட்டிவர குணமாகும். இலையை வதக்கி அடிவயிற்றில் கட்ட தேங்கிய சிறுநீர் வெளிப்படும்

பத்து கிராம் கடுக்காய்த் தோலில் எண்பது கிராம் இதன் பாலை சேர்த்து நாற்பது நாட்கள் உலர்த்திப் பொடி செய்து இரண்டு சிட்டிகை வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும். இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாதபுண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள் ஆகியவை தீரும்.


Spread the love