மோரின் மகிமை

Spread the love

வெயில் காலம் வந்து விட்டாலே போதும், மோர் குடிக்கும் பழக்கம் நம்மிடையே அதிகரித்து விடுகிறது. கோவில் பண்டிகை காலங்களில் தெருவெங்கும் ‘நீர் மோர்’ ஸ்டில்களை காணலாம். அன்னதானம் போல், மோர் ‘தானமும்’ புண்ணிய செயலாக கருதப்படுகிறது. காரணம், மோரின் சிறந்த மருத்துவ குணங்கள்.

மோர், பழங்காலத்திலிருந்தே நமக்கு தெரிந்த எளிமையான பானம். எதற்கெடுத்தாலும் காஃபி, டீ என்று அலைகிற இந்த காலத்தில் கூட மோருக்கென்று தனி முக்கியத்துவம் இருக்கிறது. மோரின் மகாத்மியம் ஆயுர்வேத ஆசான்களான ஆத்திரேயர், அக்னி வேசர் காலத்திலிருந்தே தெரிந்திருந்தது. லாக்டோ பாசிலஸ் என்னும் பாக்டீரியா, பாலை தயிராக மாற்றும் ரசாயன செயல்பாட்டை செய்கிறது. இந்த பாக்டீரியாவுடன் ஈஸ்டும் சேர்ந்து, பாலை தயிராக மாற்ற உதவுகிறது. பாலில் உள்ள லாக்டோஸ் என்ற சர்க்கரை லாக்டிக் அமிலாமாக மாற்றப்படுகிறது. இதனால் பாலில் உள்ள முக்கிய புரதமான காசின், படிந்து தயிராகிறது. இந்த ரசாயன மாறுதலால் ஏற்படும் லாக்டிக் அமிலம்தான் சீஸ், தயிர் போன்றவற்றின் சுவைக்கு காரணம்.

இந்த நட்பு பாக்டீரியாக்கள் வைட்டமின்களையும், தாதுப்பொருட்களையும் உடல் எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. எனவே இவை உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. சில சமயங்களில் நாம் உட்கொள்ளும் ஆன்டி பயாடிக்  மருந்துகள் கெட்ட பாக்டீரியாவுடன் சேர்த்து இந்த நல்ல பாக்டீரியாக்களையும் கொன்றுவிடுகின்றன. இந்த மாதிரி சமயங்களில் மோர் குடித்தால், இழந்த நட்பு பாக்டீரியாக்களை மீட்க உதவுகிறது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் / தயிர் இவற்றிலிருந்து மோர் தயாரிக்கப்படுவதால், அதில் கொழுப்பு குறைவு. மோரில் பொட்டாசியம், விட்டமின் பி12 மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது. ஆடை அகற்றிய பாலை விட மோரில் லாக்டிக் அமிலம் அதிகம். பாலை விட மோர் சுலபமாக ஜீரணமாகும். ஒரு கப் முழுமையான பாலில் 157 கலோரிகளும், 8.9 கிராம் கொழுப்பும் இருக்கின்றன. அதே அளவு மோரில் 99 கலோரிகளும், 2.2 கிராம் கொழுப்பும் தான் இருக்கிறது.

மோரின் உபயோகங்கள்

மோர் இலகுவான, குளிர்ச்சியான புத்துணர்ச்சி ஊட்டும் பானம். தாகத்தை அடக்கும். மோருடன் இஞ்சி, ஜீரகம், பெருங்காயம், சர்க்கரை, உப்பு, கருமிளகு போன்ற பலவற்றை சேர்க்கலாம். இதனால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

மூல நோய்க்கு முக்கியமான வீட்டு மருந்து மோர் தான். தினமும் கருமிளகு பொடியும் உப்பும் சேர்த்த மோரை, 100 மி.லி. அளவில் இரண்டு மூன்று மாதங்கள் குடித்து வந்தால் மூல வியாதி குணமாகும். ஆயுர்வேதம் மருத்துவமானது, மூல வியாதி உள்ளவர்களை தினமும் மோர் குடிக்குமாறு வலியுறுத்துகிறது.

சிலருக்கு ஆசன வாயில் நமைச்சலும் அரிப்பும் ஏற்படும். இதற்கும் மோர் அருமருந்து ஆகும். சில நாட்கள் மோரும், எலுமிச்சம் பழச்சாறும், காரமில்லா உணவும் உண்டு வந்தால் இந்த எரிச்சலும் அரிப்பும் அடங்கும்.

பேதி, சோகை மற்றும் உடல் எடை குறைவு பாதிப்புகளை போக்க, மோருடன் அத்திமர இலைகள், சுக்கு சேர்த்துக் குடித்து வர வேண்டும்.

குழந்தைகளுக்கு உணவுக்கு 1 மணி நேரம் முன்பு மோருடன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க பேதி, வாந்தி இவை ஏற்படாது.

சர்க்கரை சேர்ந்த மோரை குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுவியாதிகள் குறையும்.

மஞ்சள் காமாலை நோயின் போது குழைந்த சாதத்துடன் மோர் கலந்து சாப்பிட நல்ல குணம் தெரியும். குழந்தைகளின் வயிற்றுப் பூச்சிகளை நீக்க மோருடன் வாயுவிளங்கம் மூலிகை பொடி கலந்து கொடுக்கலாம்.  


Spread the love
error: Content is protected !!