சுவையான சுரைக்காய்

Spread the love

காய்கறிகளில் எளிமையான காய்கறி சுரைக்காய் – நகர வாசிகள் அதிகமாக சுரைக்காயை பயன்படுத்துவதில்லை. சுரைக்காயின் குடுவை போன்ற அமைப்பினால் அது பாத்திரம் போல், தண்ணீர், திரவங்கள், தேன் இவற்றை வைக்க பயன்படுகிறது. சுரைக்காயின் உள்பாகத்தை சுரண்டி எடுத்து விட்டு காய வைத்து பாத்திரமாக பயன்படும். அதில் வைத்த பொருட்கள், குறிப்பாக தேன், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இந்த காய்ந்த சுரைக்காய் கிராமங்களில் நீச்சல் கற்றுக் கொள்ள பயனாகிறது. சுரைக்காய் குடுவையை இடுப்பில் கட்டிக் கொண்டால், தண்ணீரில் மிதக்கும், ஆனால் முழுக விடாது! ‘பாட்டில்’ போல் தோன்றுவதால் சுரைக்காயை ஆங்கிலத்தில் Bottle Gourd என்கின்றனர்.

தாவர இயல் விவரங்கள்

தாவிரவியல் பெயர் – Lagenaria vulgaris / La   genaria Siceraria

குடும்பம் –            Cucurbitaceae

சமஸ்கிருதம் –        காட்டுத் தும்பி

இந்தி –          லௌகி

ஆங்கிலம் –           Bottle Gourd, Calabash                 Cucumber

தாவரத்தின்  விவரங்கள்

சுரைக்காய் கொடி இனத்தை சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா. பழங்காலத்து பயிரான சுரைக்காய், இதன் உலர்ந்த வெளி ஒட்டுக்காகவே மேற்கத்திய நாடுகிளல் கூட பயிரிடப்படுகிறது. இந்தியா முழுவதும் பயிராகிறது. விரைவாக வளர்ந்து, பலன் தரும். ஒரு எக்டருக்கு 2 கிலோ விதைகளிட்டால், 16 லிருந்து 18 டன் மகசூல் கிடைக்கும். செடி நட்ட 70 வது நாளிலிருந்து 130 நாட்களில் அறுவடை செய்யலாம்.

சுரைக்காயில் உள்ளவை (100 கிராம் அளவு)

                ஈரச்சத்து –           96.1 கி

                புரதம்           –    0.2 கி

                கொழுப்பு –           0.1 கி

                மினரல்கள்

                (தாதுப்பொருட்கள்) –   0.5 கி

                நார்ச்சத்து –      6.6 கி

                கார்போஹைடிரேட் – 2.5 கி

                கால்சியம் –           20 மி.கி.

                பாஸ்பரம் –           0 மி.கி.

                அயச்சத்து –           0.4 மி.கி.

                தியாமின் –           0.03 மி.கி.

                ரிபோஃப்ளேவின் –     0.01 மி.கி.

                நியாசின் –       0.2 மி.கி

சிறிதளவு ‘பீடாகரோடினும்‘ உள்ளது. தவிர

சுரைக்காயில் ‘சபோனின்’

(Saponin) என்ற எண்ணை உள்ளது.

சுரைக்காயின் பயன்கள்

ஆயுர்வேதத்தின் படி, சுரைக்காய் பித்த தோஷத்தை சமனப்படுத்தும். பித்த தோஷத்தின் உட்பிரிவான ரஞ்சக பித்தம், கல்லீரல் மற்றும் இரத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். இந்த பித்தத்தை தணித்து, உடல் சருமத்தை கண்காணிக்கும் ப்ரஜக தோஷத்தை, சுரைக்காய் சாந்தப்படுத்துகிறது.

சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் பயன் தருபவை. இலை மலமிளக்கி, காயும் விதையும் உடலை உரமாக்கும். சிறுநீரை பெருக்கும். குளிர்ச்சியுண்டர்க்கும். பித்தத்தை தணிக்கும்.

இலையை பிழிந்து சாறு எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து கொடுக்க காமாலை குணமாகும். கொடியை குடி நீரிலிட்டு வீக்கம், பெரு வயிறு, நீர்க்கட்டு இவற்றுக்கு கொடுப்பது வழக்கம்.

சுரைக்காயின் சதையை, வெப்பத்தால் உண்டாகும் தலை வலிக்கு, நெற்றியில் வைத்து கட்டலாம். விதையை உரசி, தலையில் தடவலாம். தலை வலி குறையும்.

தேள் கடிக்கு சுரைக்காய் விதையை அரைத்து கட்டலாம். சுரைக்காயின் சாற்றை நல்லெண்ணையுடன் கலந்து தலைக்கு தேய்க்க நல்ல தூக்கம் வரும்.

சுரைக்காயின் கதுப்பை, கை, கால், பாதம் இவற்றில் ஏற்படும் எரிச்சலுக்கு, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ எரிச்சல் நீங்கும்.

மற்ற காய்கறி போலவே சுரைக்காயும் சுவையான சமையலுக்கு உதவும். சாம்பார், குழம்பு, கூட்டு, பச்சடி இவற்றில் சேர்க்கலாம். பூசணிக்காய் அல்வா போல, சுரைக்காய் அல்வாவும் செய்யலாம்.

காயின் சாற்றுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து பருக, சிறுநீரக கோளாறு தீரும்.


Spread the love