செரிமானத்தை தூண்டும் இலந்தைப் பழம்

Spread the love

இந்தியாவில் எளிதில் கிடைக்கக் கூடிய, காடுகளில் அதிகம் தானாகவே விளையக் கூடியது இலந்தைப் பழம். இலந்தைப் பழம் உருண்டு நீண்டு, காய்கள் பச்சையாகவும், பழங்கள் சிவப்பாகவும் காணப்படும். தோலினுள் கடினமான கொட்டையும், பழக்கூழும் உள்ளன. இலந்தைப் பழத்தின் தன்மை குளிர்ச்சியாகும். வெப்பத்தை நீக்கும். இதயத்திலும் குடலிலும் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி உடல் வலிமையையும் தரும். பசி உணர்வை, நாக்கின் சுவை உணர்வையும் அதிகரிக்கும்.

செரிமானப் பிரச்சனையைத் தீர்க்கும் இலந்தை பழம்

பசியே இல்லை என்று ஒரு சிலர் கூறுவர். சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை, வயிறு கடமுடா கடமுடா என்கிறது, வயிறு வலிக்கிறது என்று கூறுவர் ஒரு சிலர். இதற்கு இலந்தைப் பழம் மிகவும் சிறந்த மருந்தாகும். இலந்தை அடை செய்து சாப்பிட்டு வருவதால், செரிக்கும் தன்மை அதிகரிக்கும். வயிற்று வலி, வயிற்றுப் புண் நீங்கி விடும். இலந்தை அடை அழலை நீக்கும். பசியை உண்டாக்கும்.

இந்தியவிலுள்ள பழமையான பழ மரங்களில் இதுவும் ஒன்று. இராமாயணத்தில் இராமன் காடு செல்லும் போது, இலந்தைப் பழத்தைக் கொடுத்து சவரி என்னும் முதிய பெண்மணி இராமரை வரவேற்றாள் என்று கூறும் செய்தி உள்ளது. இந்தியாவிலிருந்து சீனா முதலிய கிழக்காசிய நாடுகளுக்கு இது பரவி, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கொண்டு வந்து வளர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் முக்கனிகள் என்று மா, பலா, வாழையைக் கூறுவது போல சீனாவில் ஐங்கனிகளில் ஒன்றாக இலந்தைப் பழத்தை கருதுகிறார்கள். சீனாவில் ஏறக்குறைய நானூறு வகையான இலந்தை பழங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றில் கொட்டை கிடையாது. சீன வகை இலந்தைப் பழங்கள் உண்பதற்கு அதிக சுவையானவை.

இலந்தைப் பழம் பறித்தவுடன் உண்பதற்கு மிகச் சுவையாக இருக்கும். நன்றாகப் பழுத்த பழம் ஊறுகாய் செய்யப் பயன்படுகிறது. பழுத்த பழத்தை உப்பு மிளகாயுடன் சேர்த்து இடித்து வடகமாக செய்கிறார்கள். காய வைத்த பழத்தை இடித்துப் பொடி செய்து வெல்லப் பொடி அல்லது சர்க்கரை சேர்த்துப் பருப்புப் பொடி போல உணவுடன் சேர்த்து உண்ணலாம்.

இலந்தைப் பழத்தின் தசையை உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து அடையாகத் தட்டி உலர்த்தி வைத்துக் கொள்வார்கள். இதனோடு சிறிதளவு புளியும் சேர்த்துக் கொள்வதுமுண்டு. அரிசி மற்றும் சிறு தானியங்களுடன் இப்பழத்தை வேக வைத்து உணவாக உட்கொள்கிறார்கள். இலந்தைப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, அடங்கியுள்ளன.

இலந்தைப் பழம் மட்டுமன்றி இதன் இலை மற்றும் வேரும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. இலந்தை மரத்தின் வேர், அசதி, களைப்பை நீக்கி, பசியை உண்டாக்கும். இலையானது உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, மூலம், பித்த மேகம், இரத்தம் அதிகளவு வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். பழம் பித்த, மலக்கட்டு, வாந்தி, வலி, வாதம் முதலியவற்றைப் போக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சுழற்சி சரியாக வந்தால், அவர்கள் அதிகளவு பாதிப்பு அடைவதில்லை. ஆனால், மாதவிலக்கு ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் வராமலிருந்தால் அதிக அளவு இரத்தப் போக்கு, வலி ஏற்பட்டு சிரமப்படுவார்கள். இலந்தைப் பழம் உண்டு வருவதால், மேற்கூறிய பிரச்சனை சரியாகும்.

பித்தம் அதிகரித்தலின் காரணமாக ஏற்படும் தலைவலி, கிறுகிறுப்பு, வாந்தி, மயக்கம் குணமடைய இலந்தைப் பழத்தை அதிகளவு சாப்பிட்டு வர வேண்டும். அது போல உடல் வலியினால் அவதிப்படுவோரும் இலந்தைப் பழத்தைச் சேர்த்துக் கொள்ள உடல் அசதி, வலி போக்கி விடும்.

பயிரிடுவது எப்படி?

இலந்தையைப் பயிரிடுவதற்கு எல்லாவிதமான கால நிலைகளிலும், மண் வகைகளிலும் வளர்க்க இயலும். இது சுமார் 1000 மீட்டர் குத்துயரம் வரை வளரும் இயல்புடையது. இதனை பயிரிடுவதற்கு வெப்பமும், வறட்சியும் மிகுந்த கால நிலை ஏற்றது. ஆனால், காய்க்கும் பருவத்தில் போதிய அளவு நீர் பாய்ச்சுதல் வேண்டும். விதை பெருக்கம் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.

சுமார் 10 செண்ட் நிலத்தில் நான்கு மரங்கள் நடலாம். மழைக் காலம் தொடங்கும் போது நான்கு முதல் ஐந்து கூடை தொழு உரம் மரம் ஒன்றுக்கு அளித்தல் வேண்டும். மண்ணை நன்கு கொத்திக் கொடுப்பது நல்லது. இதன் மூலம் இலந்தை மரத்தில் காய்க்கும் பழங்களின் எண்ணிக்கை மற்றும் பருமனும், சுவையும் கூடும்.

பின்னர் தரமான அறுவடையைப் பெறுவதற்காக வருடம் தோறும் கவாத்துச் செய்ய வேண்டும். செடிகள் நட்ட நான்கு ஆண்டுகள் முதல் காய் காய்க்க ஆரம்பித்து விடும். மரம் ஒன்றிற்கு ஏறக்குறைய 15 மடங்கு பழங்கள் பெற்லாம்.

இலந்தையில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் அளவுகள் (ஒவ்வொரு நூறு கிராமிலும்)

ஈரப்பதம் – 85.9 சதவீதம்

புரதம் – 0.8 சதவீதம்

கொழுப்பு – 0.1%

தாது உப்புகள் – 0.4%

சர்க்கரைப் பொருள்கள் – 12.8%

கால்சியம் – 0.03%

ஏரியம் – 0.03%

இரும்பு – 0.8%

உயிர்ச் சத்து ஏ – 70

கலோரி மதிப்பு – 55

பா. முருகன்


Spread the love