ஆங்கிலப் பெயர் – பெங்கால் டே ஃப்ளவர்
இந்தியில் – கஞ்சாரா
அறிவியல் பெயர் – காம்கலினா பெங்காலினெசிஸ்
தாவரக் குடும்பம் – காம்மலினியசி
வாழை இலை போல இலை வட்டமாக இருப்பதால் கானா வாழை என்கிறார்கள். கன்றுக் குட்டிப் புல் என்றும் கிராமங்களில் இதனை கூறுவார்கள். மாடுகள் விரும்பிச் சாப்பிடும் பசுந்தீவனத் தாவரம் இது. பசுக்கள் பால் அதிகம் சுரக்க உதவுகிறது.
ஆசியக் கண்டம் இதன் தாயகம் எனினும் ஆப்ரிக்கா, அமெரிக்க கண்டங்களிலும் வளருகிறது. இந்தியா தவிர நேபாளம், சீனா, தைவான், ஜமைக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. புல் இன வகையாக ஈரமான இடங்களில், கடற்கரை, சமவெளிப் பகுதிகளில் வளரும் சிறு வகைச் செடியாகும். விவசாய நிலங்களில் களைச் செடியாகவும் வளருகிறது. சற்றே ஈட்டி வடிவில் வளரும் இதன் இலைகள் மென்மையாகவும் நீர்ச் சத்துடனும் இருக்கும். மலர்கள் சிறியதாகவும் நீல நிறத்திலும் காணப்படும். இதன் விதை மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
ஆயுர்வேதத்தில் கானா வாழை
கானா வாழையை கீரையாகவோ, சாறு எடுத்தோ சாப்பிட ஆண்மைக் குறைவு, விந்து முந்துதல் ஆகியவை நீங்கும். கானா வாழைச் சாறுடன் ஜாதிக்காயைச் சேர்த்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து தினசரி 3 கிராம் அளவு உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைவு நீங்கும். கானா வாழையின் சாறு எடுத்து, அதில் கசகசாவை ஊற வைத்து மை போல அரைத்து 2 கிராம் எடுத்து தேனில் குழைத்து உட்கொண்டு வர செக்ஸ் உணர்வு அதிகரிக்கும். தாம்பத்யம் திருப்தி தரும்.
உலர்ந்த கானா வாழை சுமார் 100 கிராம் அளவு எடுத்து அதனுடன் முருங்கை பிசின், கொட்டைப் பாக்கு, தென்னம்பாளை ஒவ்வொன்றும் தலா 100 கிராம் அளவு எடுத்து பொடி செய்து தனி டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இப்பொடியை தினசரி காலை, மாலை என இருவேளை, ஒரு கிராம் அளவு எடுத்து உட்கொண்டு வர ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்சனை தீரும்.
மூலம் குணம் பெற கானா வாழை உதவுகிறது
கானா வாழையுடன் துத்தி இலை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். சிறுநீர் எரிச்சல் குணமாக, கானா வாழையை கீரையாக சமைத்து சாப்பிட்டு வந்தாலே போதும்.
குளிர் சுரம் போக்கும்.
கானா வாழைக் கீரையுடன் சிறிது மிளகு (8-10 எண்ணிக்கை) சேர்த்து மை போல அரைத்துச் சாப்பிட குளிர் சுரம் நீங்கும். கானா வாழை இலை மட்டும் அல்லது அதன் சமூலத்துடன் (இலை, தண்டு, வேர் அனைத்தும் சேர்ந்தது சமூலம் என்பர்) மிளகு, சீரகம் தலா லு ஸ்பூன் சேர்த்துக் காய்ச்சி 150 மி.லி. நீரில் குடிநீராக அருந்தி வர சுரம் நீங்கும். தினசரி ஒரு வேளை அருந்த வேண்டும்.
கானா வாழை இலையும், மாவிலையும் சம அளவு எடுத்து நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து (சுமார் அரை மணி நேரம்) கழித்து கழுவி வர முகம் பிரகாசமாக இருக்கும்.
கானா வாழை சமூலத்துடன் சம அளவு அருகன் புல் எடுத்து நீர் விட்டு மை போல அரைத்து கொட்டைப் பாக்கு அளவு எடுத்து தினசரி காலை, மாலை பாலில் கலந்து அருந்தி வர இரத்த பேதி நீங்கும். கானா வாழை சமூலத்துடன் அறுகன் புல், அசோகுப் பட்டை சம அளவு எடுத்து மை போல அரைத்துக் காலை, மதியம், மாலை என தினசரி மூன்று வேளை நெல்லிக் காய் அளவு உட்கொண்டு வர பெரும்பாடு குணம் ஆகும்.
இவ்விலையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து மை போல அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து தினசரி காலை, மதியம், மாலை என மூன்று வேளை தயிரில் கலந்து உட்கொண்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.
இதன் இலையைக் கசக்கி முகப் பருவில் பூச விரைவில் குணம் காணலாம். மேலும் உடல் சூடு காரணமாக வரும் வேர்க்குரு, கொப்புளம் ஏற்படுவதும் குணமாகும். இலையை அரைத்து படுக்கைப் புண், மார்பு காம்பைச் சுற்றி வரும் புண்கள் மேல் தடவி வர குணம் பெறலாம்.
தாது பலப்பட உதவும் கானா வாழை
தூதுவளைப் பூவுடன் முருங்கைப் பூ மற்றும் கானா வாழை சமூலத்தை ஒரு கோப்பை நீரிலிட்டு பாதியாகக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். காய்ச்சிய மூலிகை நீருடன் பால் மற்றும் கற்கண்டு கலந்து 48 நாட்கள் உட்கொண்டு வர தாது கெட்டியாகும். ஆண்மை பெருகும்.
உடல்வலு மற்றும் ஆண்மை அதிகரிக்க கானா வாழை பொரியல்
வாரம் ஒரு முறை கானா வாழை மற்றும் துவரம் பருப்பு சேர்த்து பொரியலாக சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். உடல் வலுப்பெறும். விந்து முந்துதல், குறி எழுச்சியின்மை போன்றவை நீங்கும்.
செய்முறை
தேவையான அளவு துவரம் பருப்பு, சிறிது மஞ்சள் பொடி, சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து அதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
வாணலியை எடுத்து அதில் அரை தேக்கரண்டி நெய் விட்டு சூடுபடுத்திக் கொண்டு சீரகத்தைச் சேர்க்கவும். சீரகம் சற்றே பொன்னிறமாக வரும் பொழுது, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு சிவப்பு மிளகாய்த் துண்டை (மிளகாயை மீடியமாக நறுக்கிக் கொள்வது அவசியம்) சேர்க்கவும். அரை தேக்கரண்டி சாம்பார் பொடி சேர்க்கவும். துண்டு, துண்டாக நறுக்கப்பட்ட கானா வாழை இலையை சேர்த்துக் கொள்ளவும்.
அனைத்தும் நன்கு வதக்கி நீர் சேர்த்து உப்பு கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதில் வேக வைக்கப்பட்டு தனியாக நாம் வைத்திருக்கும் துவரம் பருப்பைச் சேர்த்து, விரும்பினால் சுவைக்கு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம். சற்று சூடாக பரிமாற இனி இல்லறம் மகிழ்ச்சி தான்..!