இது சிவனுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது!

Spread the love

தாவரப் பெயர்   : Aegle marmelos (ஏகெல் மர்மலோஸ்)

குடும்பப் பெயர்  : Rutaceae (ருட்டாஸியே)

வில்வம் சிவனுக்கு மட்டுமில்ல ஆரோக்கியத்துக்கும் ரொம்ப நல்லது

வில்வத்தின் வேறு பெயர்கள்: தமிழில், கூவிளம், சிவத்துருமம், நின்மலி, மாலுரம் என்னும் பெயரால் இது குறிப்பிடப்படுகிறது. இது வடமொழியில் பில்வா என்றும், தெலுங்கு மொழியில் பில்வமு என்றும், மலையாள மொழியில் கூவளம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

வில்வத்தின் வகைகள்:

வில்வத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக மூவிதழ் கொண்ட வில்வ தளமே பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன.

மருத்துவத்தில் இதன் சிறப்பு :

‘வில்வத்தின் வேருக்கு வீறுகுன்ம வாயுகபம்

சொல்லவொணா பித்தந் தொடர்சோபை வல்லகப

தாகசுரம் நீரேற்றஞ் சந்நியோடு மெலய்வலியும்

வேகமொடு நீங்குமே’

வில்வத்தின் வேரை மருந்தாக உட்கொள்ள குன்மம் என்ற குடற்புண்கள், வாயுக்கோளாறுகள், சீதள நோய்கள், பித்தத்தால் உண்டான நோய்கள், தொடர்ந்து தொல்லை தருகிற ரத்தசோகை, சீதளத்தால் உண்டான நா வறட்சி, மிகுந்த தாகம், காய்ச்சல், தலையில் நீரேற்றம், உடல் முழுதும் வலியுற்ற நிலை இவை அத்தனையும் வேகமாய் விலகிப் போகும் என்பது மேற்சொல்லப்பட்ட பாடலின் பொருளாகும்.

வில்வத்தின் அமைப்பு  :

வில்வத்தில் பல வகைகள் உண்டு. அவற்றுள் காட்டு வில்வம் மற்றும் தோட்ட வில்வம் எனும் இவை இரண்டும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இது கிளைகளோடு உயர்ந்து வளரக்கூடிய மரம் ஆகும். இதன் அடிமரம் பருத்து, பட்டை பிளவுபட்டு சற்று வெண்மை நிறம் கொண்டிருக்கும். இதன் அடிமரத்தில் முட்கள் இருக்காது, ஆனால் இதன் இளங்கிளைகளில் சிறு சிறு கூர்மையான முட்கள் இருக்கும். ஒவ்வொரு காம்பிலும் மூவிலைகள் இருக்கும்.  இதன் இலைகள் அகலமாகவும், கூர்மையாகவும் இருக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. கசக்கி முகர்ந்தால் கற்பூரத்தைப் போல சுகமான மணத்தைத் அளிக்கக்கூடியவை.

பூக்கள் மற்றும் கனிகள் :

இதன் இலை, பிஞ்சு, காய், பழம், வேர் ஆகியவை துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவைகளும், குளிர்ச்சியான தன்மையும் கொண்டவை. இவை நோய்களை நீக்கி உடலைத் தேற்றும்; இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; வியர்வையைப் பெருக்கும்; மலத்தை இளக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; காமம் பெருக்கும். இதன் பூக்கள் வெண்மை நிறம் உடையவை, மணம் மிக்கவை. வில்வத்தின் காய்கள் பசுமையாகவும், நன்கு முற்றிப் பழுத்த நிலையில் மஞ்சள் நிறத்தையும் பெற்றிருக்கும். பூக்களைக் கொண்டு தயாரிக்கப் படும் நீர் காக்காய் வலிப்புக்கு மருந்தாகிறது.

வில்வ இலைகளின் மருத்துவ பயன்கள் :

உளவியல் நோய்களில் முதலாவதாக கருதப்படும் மனஅழுத்தம் நீங்குவதற்கு இது ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்னர் கூறியதுபோல் ஊறவைத்தோ, கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும்.

இதன் இலையை சாறு எடுத்து உடல் முழுவதும் பூசிக் குளிப்பதால் உடலின் துர்நாற்றம் விலகி நறுமணம் உண்டாகும். ஆரம்ப கால தோல் நோய்கள் விலகும்.

இதன் இலையை தளிராக எடுத்து சிறிது விளக்கெண்ணையிட்டு வதக்கி, ஒரு துணியில் முடித்து கண்களில் ஒற்றிட கண் நோய்கள் விலகும்.

இதன் இலை குடற்புண், மஞ்சள் காமாலை, வெள்ளைப்போக்கு, புண்கள், காது மந்தம், கண்நோய்கள்  ஆகியவற்றை நீக்கும் தன்மை உடையது. இது எலும்புறுக்கி எனப்படும் ஜிuதீமீக்ஷீநீறீஷீsவீs மற்றும் கர்ப்பப்பையைச் சார்ந்த நோய்களை குணப்படுத்தக் கூடியது. உலர்ந்த வில்வ இலையின் சூரணம் நாள்பட்ட கழிச்சலை நீக்கும்.

வில்வ இலை சூரணம் ஒரு தேக்கரண்டி எடுத்து தேனுடன் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் பசியின்மை போக்கி, பசி தூண்டப் பெறும்.

இதன் இலைகளை அரைத்து விழுதாக்கி ஐந்து கிராம் அளவிற்கு எடுத்து அதனோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து காலை, மாலை என இருவேளைகளிலும் சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய் குணமாகும்.

உலர்ந்த வில்வ இலைகளை வஸ்திரகாயம் செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சி வடித்து காலை, மாலை இரண்டு வேளைகள் அருந்தி வந்தால் உயர் ரத்த அழுத்தமானது தணியும்.

தினமும் காலையில் ஐந்தாறு வில்வ இலைகளை பச்சையாக மென்று சுவைத்து விழுங்குவதால் சர்க்கரை நோய்  மட்டுப்படும். வில்வ இலைச் சாறு கல்லீரலின் செயல்களை தூண்டிவிட்டு பித்தத்தை தெளிவுறச் செய்யும்.

நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy), மூக்கில் நீர்வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட வைகளுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடி செய்து அதில் அரை தேக்கரண்டி அளவுக்கு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், படிப்படியாக நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்புகளும் குறையும்.

ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீரிலிட்டு மறுநாள் காலையில் இலைகளை நீக்கி, அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்க. படிப்படியாக ஒவ்வாமையைக் குறைந்து, அதனால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.

வில்வ இலைத்தூள் ஐம்பது கிராமுடன் பத்து கிராம் மிளகை சேர்த்து, நன்கு பொடி செய்து, அதை காலை, மாலை இரண்டு வேளையும் அரை தேக்கரண்டி அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது, ஈஸ்னோஃபீலியா (Eosinophilia) என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும்.

இளம் வில்வ இலைகளை பத்து அல்லது பதினைந்து கிராம் எடுத்து அதனுடன் பத்து மிளகு சேர்த்து நன்றாக அரைத்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். இரத்தத்தில் அதிகமாக உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் திறன் வில்வ இலைக்கு உண்டு.

வில்வப் பட்டை, காய்கள் மற்றும் பழத்தின் மருத்துவ குணங்கள் :

நமது முன்னோர்கள் உடைந்த எலும்புகளை விரைவில் ஒன்று சேர்ப்பதற்கு நன்கு உலர்ந்த முற்றிய வில்வக் காய்களைப் பொடியாக்கி அதனுடன் மஞ்சள் தூளும், நெய்யும் சேர்த்து விழுதாகக் குழைத்து மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தியதாக மருத்துவக் குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது.

வில்வப்பழமானது உடலின் நுண்கிருமிகளைப் போக்கி உடலில் ஏற்படும் பல தொற்று நோய்க் கிருமிகளான பூஞ்சைக் காளான்கள் மற்றும் மற்ற நுண் நோய்க்கிருமிகளை எதிர்த்து உடலுக்கு நலம் தரவல்லது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாகவுள்ளது.

முற்றிய, பழுக்காத வில்வக் காய்களினின்று பெறப்படும் சத்துக்களானது இரத்தப்போக்கையும் (Haemorrhoids) தோலின் மேலுள்ள வெண்திட்டுகளை (Vittiligo) போக்கக்கூடிய அரு மருந்தாகும்.

வில்வக் கனியின் சாற்றினை சர்பத்தாகக் குடிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இதன் பழம் விளாம்பழத்தைப்  போன்று வலுவுடயதாய் இருக்கும். முதலில் பச்சையாகவும், முதிர்ந்த பின்னர் சாம்பல் நிறமாகவும் இருக்கும் இதன் விதைகள் மிகவும் குறைவாக இருக்கும். வில்வப்பழமானது சாப்பிட்டால் சற்று மயக்கத்தினை உண்டாக்கக்கூடியது.

வில்வப் பழத்தை சர்பத்தாகவோ அல்லது அதன் சதைப்பற்றோடு மிளகையும், உப்பையும் சேர்த்து அடிக்கடி உண்பதால் மலச்சிக்கல் தீர்கிறது. இதனால் குடலில் உள்ள நச்சுக்கள் (Toxins) வெளித்தள்ளப் படுகின்றன.

இதிலிருந்து கிடைக்கும் எண்ணை ஆஸ்துமா என்னும் சுவாசக் கோளாறுகளையும் நுரையீரல் நோய்களையும், சைனஸ் பிரச்னைகளையும் நீக்கும் தன்மை உடையது.

வில்வத்தில் உள்ள சத்துக்கள் :

இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின் H, வைட்டமின் C, ரிபோஃப்லொவின், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது

இதில் உள்ள Marmelosin எனும் வேதிப்பொருள் இதய பலவீனம் மற்றும் படபடப்பையும் போக்குகிறது.

இதில் உள்ள டேனின் என்னும் மருத்துவப் பொருள் வயிற்றுப் போக்கு, ஊழிப்பெருநோய் எனப்படும் வாந்திபேதி (காலரா) ஆகிய நோய்களைப் போக்குகிறது.

இதில் தசை வளர்ச்சிக்கு உதவுக்கூடிய Begtin என்ற சத்துக்களும் சர்க்கரை Tannin (டானின்) அமிலமும் அதிகமாக இப் பழத்தில் நிறம்பியுள்ளன.

புரோட்டின், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, உலோகச்சத்து, மாவுச்சத்து, கலோரி உஷ்ணம் போன்றவை ஆப்பிள் மற்றும் மாதுளையில் இருக்கும் அளவை விட அதிகமாக வில்வப் பழத்தில் உள்ளது.

இது பழச் சதையை பத்து கிராமுக்கு இருநூறு மி.லி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை கலந்து, சிரப் பதத்துக்கு காய்ச்சி, சிறிது தேன் கலந்து. காலை, இரவு என ஒரு தேக்கரண்டி, பருகலாம்..

வைட்டமின் ‘C’ சத்து குறைபாட்டால் ஏற்படுகிற ரத்தசோகை, சோர்வு, அசதி, குருதி வெளிப்பாடு, கை மற்றும் கால்களில் தோன்றும் வலி, உடலின் சில ஏற்படும் வீக்கம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் மற்றும் அதனால் ஏற்படும் பற்களின் ஆட்டம் ஆகியவற்றை சரி செய்து வீக்கத்தை நீக்கச் செய்யும் ஆற்றல் உடையது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிகாத வண்ணம் வைத்துக் கொள்ளவும், சிறுநீரகக் கோளாறுகளை நீக்கவும் சிறந்த மருந்தாகிறது.

இதன் சாறு இதயம் மற்றும் மூளைக்குத் தேவையான சத்துக்களைத் தந்து அவற்றை பலப்படுத்தக் கூடியது.

இது மருந்தாகும் விதம் :

இரவு உணவுக்குப் பின் தினமும் நன்கு பழுத்த வில்வப் பழத்தை, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் ஆரம்பகால புற்றுநோய் மற்றும் காசநோய் ஆகியன குணமாகும்.

வில்வப் பழச் சதையை உலர்த்தி பொடி செய்து வைத்து ஐந்து கிராம் எடுத்து தேன் அல்லது வெந்நீர் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிட்டு வர குடலில் தங்கியிருக்கும் புழுக்கள் வெளியேறும்.

வில்வப் பழச் சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து பசும் பாலில் சேர்த்துக் காய்ச்சி, இனிப்பு சேர்த்து தினமும் இருவேளை பருகிவர இரத்தசோகை குணமாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதன் சூரணத்தைத் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து இரு வேளை சாப்பிட்டு வந்தால் கர்ப்ப கால வாந்தி மற்றும் குமட்டல் குணமாகும். பேறு கால இரத்தசோகையும் குணமாகும்.

நெல்லிக்காயளவு இதன் சதையுடன் கற்கண்டு சேர்த்து அன்றாடம் இரவு படுக்கைக்குப் போகுமுன்னர் சாப்பிட மனம் ஒருமைப்பாடும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

இதன் சதைப்பகுதியை உலர்த்தி பொடிசெய்து பத்து கிராம் சூரணத்தோடு ஐம்பது கிராம் பசு நெய்யும், அரை தேக்கரண்டி மஞ்சள் தூளும் சேர்த்து ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து சில நாட்களுக்கு ஓரிரு முறை பருகிவர அடிபட்டதால் ஏற்பட்ட எலும்புமுறிவுகள் விலகி எலும்புகள் இணைந்து பலம் பெறும்.

நமக்கு ஏற்படும் அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் முதலியவற்றிற்கு வில்வப் பட்டையைக் கொண்டு செய்யப்படும் வில்வாதி லேகியம் நல்லமருந்தாகும்.

குணம்

இதன் பழத்தை பாலுடன் கலந்து, சிறிது மிளகுப் பொடி சேர்த்து இரவு சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிட தாது புஷ்டி உண்டாகும். மூலநோயும் நீங்கும். இதன் வேர் இருதயத்திற்கு மிகவும் உகந்தது, பழம் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதிலும் இது சிறந்தது. கபத்தின் அடைப்பினால் மூச்சுத் திணறல் ஏற்படும் நேரங்களில் இலைச்சாறு சாப்பிட கபத்தை கரைத்து விடும், ஜலதோஷம், இருமல், ஆஸ்த்மா குணமாகும். இலைச்சாறு சிறுநீரை சுண்டச் செய்யும் கர்ப்பபையில் ஏற்படும் தடிப்பு, வெள்ளைப்டுதல் போன்றவை குணமாகும்.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குணமாக வில்வ இலைகளை அரைத்து, பசையாக்கி, கொட்டைப் பாக்கு அளவிற்குக் காலையில் தொடர்ந்து பத்து நாட்கள் வரை சாப்பிட்டு வர குணமாகும். (இந்தச் சமயத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் நன்மையளிக்கும்).

சீதபேதி குணமாக, நன்கு கனிந்த இதன் பழத்தை நீர் விட்டுப் பிசைந்து, அந்த நீரை வடிகட்டி, அதனுடன் சம அளவு சர்க்கரை கலந்து, தேன் சேர்த்து பதமாகக் காய்ச்சி, முப்பது மி.லி. அளவிற்கு சாப்பிட குணம் காணலாம்.

மஞ்சள் காமாலை குணமாக, ஒரு தேக்கரண்டி இதன் இலைத்தூளுடன், கரிச்சாலைச் சாறு சேர்த்து, குழப்பி காலையில் மட்டும் ஐந்து நாட்களுக்குச் சாப்பிட வேண்டும். (இக் காலத்தில் புளி, காரம் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்).

சிறிது வில்வ இலைத்தூளை, அரைத் தேக்கரண்டி வெண்ணெயுடன் கலந்து உணவுக்குப் பின்னர் சாப்பிட்டுவர வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கல் குணமாகும்.

கோடி புண்ணியம் தரும் வில்வ இலை அர்ச்சனை :

பல சிவன் கோயில்களில் வில்வம் ஸ்தல விருட்சமாக வளர்க்கப் படுகிறது. வில்வ இலை, சிவ வழிபாட்டின்போது உபயோகிக்கப்படும் மிக முக்கியமான அர்ச்சனைப் பொருளாகும். முப்பெரும் தெய்வங்களுள் ஒருவரான சிவபெருமானுக்கு இது மிகவும் உகந்தது.

சிவனுக்கு விருப்பமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் அவரது நண்பரான குபேரனின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். வில்வ இலைகள் சிவனாகவும் முட்கள் சக்தியாகவும், காய்கள் குபேரனது நிதிகளாகவும் சொல்லப்படுகின்றன. அகண்ட வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டமும், பணம் காசுகளும் வீட்டில் குவியும்.

ஒரு முறை “மஹா வில்வப் பிரத‏ஷனம் வந்தால் கைலாய மலையை தரிசித்த பலன் கிடைக்கும் என்று  சொல்வார்கள். தேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் (ஐந்து மரங்களில்) (பாதிரி, மா வன்னி, மந்தாரை மற்றவை) மகாவில்வமும் ஒன்று திருமகளின் திருக்கரங்களிலிருந்து வில்வமரம் வந்ததாக வராக புராணம் சொல்கிறது.

வில்வமானது -‘சிவ மூலிகைகளின் சிகரம்’ என்றும் ‘மும்மூர்த்திகளின் உறைவிடம்’ என்றும் சிறப்பாகப் போற்றப்படுகிறது. பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய தன்மையே வில்வ மரத்தின் சிறப்பாகும். வில்வத்தின் பெருமைகளைப் பற்றி சிவபுராணத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.  வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.

ஒரு வில்வ மலரை ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் அதனுடைய சிறப்பை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். வில்வமரம் இந்த மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவமாய் பூமியில் தோன்றியதாகும். சிவனிற்குரிய விருட்சங்களில் முக்கியமானதாக கருதப்படுவது வில்வமாகும்.

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவம் மற்றும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக புராணங்கள கூறுகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள், தாங்கள்  அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் (திருக்கருகாவூர்) என்ற திருத்தலத்தில் வில்வமரங்களாக நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் மாறி தவம் இயற்றின. திருவைகாவூருக்கு வில்வராண்யம் என பெயர் பெற்றது.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை தளத்தினை சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். தளத்திற்கு நிர்மால்யம் தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். தினமும் சிவனாருக்கு இதை சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வமாலை அணிவித்து சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

வில்வ தளங்களைப் பறிப்பதற்கான சில நியதிகள் :

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வதளத்தினை பறிப்பதற்கும் சில நியதிகள் உள்ளன.

வில்வ மரத்தினை வணங்கி நான் சிவ பூசைக்கு வில்வ தளங்கள் பறிக்க போகிறேன். தயவு செய்து அனுமதியுங்கள் என வேண்டி, வணங்கி கொள்ள வேண்டும்.

வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் பறிக்கக் கூடாது. மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.

ஒரு ழுறை வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த, ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

ஒரு வில்வ மரத்தை வீட்டில் போஷித்து வளர்த்தால் கிடைக்கும் பலன்கள்:

அஸ்வமேத யாகம் செய்த பலனும்.

ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணிய பலனும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும்.

பதினெட்டு சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்

பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் இருக்க, இந்த இலைக்கு மட்டும் ஏன் இவ்வளவு மதிப்பு?

இது சிவனுக்கு அர்ப்பணிக்கப்படுவதாலா, ஏன் இது புனிதமானது?

வில்வத்தின் அதிர்வுகள்

வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிக்கும் போது, நீங்கள் அதை அவரிடம் விட்டு செல்வதில்லை. அர்ப்பணம் செய்தபின், உங்களுடன் எடுத்து செல்கிறீர்கள். ஏனென்றால் வில்வத்திற்கு அதிர்வுகளைத் தக்க வைத்துக்கொள்ள கூடிய சக்தி பெருமளவில் உள்ளது. நீங்கள் வில்வத்தை லிங்கத்தின் மேல் வைத்து எடுத்தால், லிங்கத்தின் சக்தி அதிர்வுகள் நீண்டநேரம் அதில் இருக்கும். அதனை உங்களிடமே தக்க வைத்துக் கொள்ளலாம். நீங்கள் இதை செய்து பார்க்கலாம்: ஒரு வில்வ இலையை அர்ப்பணம் செய்து, உங்கள் சட்டைப் பையில் உங்களுக்கு மிக அருகில் அதை வைத்துக்கொண்டு நடந்து பாருங்கள். உங்களுக்கு, அது உடலளவிலும், மனதளவிலும், ஆரோக்கியத்திலும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அந்த வில்வத்தினுடைய அதிர்வுகள் நாம் சிவன் என்று கருதுவதுடன் இருக்கும் அதிர்வுகளுடன், பெருமளவிற்கு நெருக்கமாக இருக்கிறது.

சிவபெருமானுக்குப் பிடித்த இந்த மங்களகரமான வில்வத்தின் இலை, காய், பழம், வேர் போன்றவை மருத்துவத்தில் அருமருந்தாகப் பயன்படுகின்றன. வில்வத்தில் அபாரமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன.  சித்த மருத்துவத்தில், பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கியமான மூலிகை இது. இதன் இலை, மரப்பட்டை, பழம், வேர் என்று அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டவை. “சரக்கொன்றை மரத்திலும் வில்வத்திலும் சிவபெருமான் இருக்கிறார்” என்று வடமொழி சுலோகம் கூறுகின்றது.

நமது முன்னோர்கள் இறை வழிபாட்டில் நமது ஆரோக்கியத்துக்கான மருத்துவத்தையும், மறைபொருளாக, மறைத்து வைத்துள்ளார்கள். இறைவனின் அனுக்கிரகமும், இறைவனால் அளிக்கப்பட்ட இயற்கையின் ஆதரவும் நமக்குக் கிடைக்கும்பொழுது ஆரோக்கியமும், ஆனந்தமும் நம்மிடம் என்றும் நிலைபெறும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. அந்த வழியில் வில்வத்தையும் சிவபெருமானின் வழிபாட்டில் இணைத்து வைத்து  இவ்வுலக உயிர்கள் உய்ய வழி செய்துள்ளனர்.


Spread the love