அரிய மூலிகை ஐயம்பனா

Spread the love

ஐயம்பனா ஒரு அரிதான மூலிகைச் செடி. இது முதன்முதலில் மெக்சிகோ நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. இது அங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியது. இது மருத்துவ குணமுடைய செடி. 30 முதல் 60 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இதன் தண்டு கெட்டியாகவும், வேர் விட்டுப் படரும் தன்மையும் கொண்டது. இலைகள் மென்மையாக கரும்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இலைகள் எதிர் வரிசையில் 5 முதல் 6 சென்டிமீட்டர் நீளத்தில் வாசனையுடன் கூர்மையான நுனியைக் கொண்டிருக்கும். இது முதிரும் போது 6 முதல் 7 மில்லி மீட்டர் நீளமுள்ள சுமார் 20 மலர்கள் நீல நிறத்துடன் சிறிய காம்புகளைக் கொண்டதாக ஐந்து இதழ்களுடன் பூக்கும். இதழ்கள் ஒவ்வொன்றும் 2 மில்லி மீட்டர் நீளம் கொண்டது. இந்த இலையில் 1.14 சதவீதம் ‘அபயன்’ எண்ணெய் உள்ளது. இது கட்டிங் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

பயன்படும் பாகம்: இலைகள் மட்டும்.

வேறு பெயர்கள்: Apana, Ayapana, Inpana

தாவரப் பெயர்கள்: Eupatdrium Triplinerve

பயன்கள்:

இது தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுவதில்லை. ஆனால் கேரளா மாநிலத்தில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சில பேர் இதை ரகசியமாக வைத்துக் கொண்டு மூல நோயைக் குணப்படுத்தி பொருள் ஈட்டுகிறார்கள். என் கேரளா நண்பர் மூலம் அறிந்து கொண்ட உண்மை என்னவென்றால் மூல நோய் உள்ளவர்கள் அல்லது நோய் ஆரம்ப காலமாக உள்ளவர்கள் தினமும் தொடர்ந்து அதிகாலை வெறும் வயிற்றில் இரண்டு முற்றிய ஐயம்பனா இலைகளை பத்து நாட்கள் சாப்பிட்டால் பூர்ண குணமடையும். இதன் பயன்பற்றி ‘கோஸ்டர்’ என்பவர் கூறும் போது, இதன் புளிப்பான இலையை சாப்பிடும் போது குளிர் காய்ச்சலைக் குணப்படுத்துவதுடன், வயிற்றுப் போக்கையும் குணப்படுத்துகிறது என்றார்.

தலைவலி வந்தால் இதன் இலையை ஆமணக்கு விளக்குச் சுடரில் வாட்டி, முன் நெற்றியில் வைத்தால் குணமடையும். இதன் ஆயிலை மருந்தாகவும் டானிக்காகவும் பயன்படுத்துகிறார்கள். இதை குளிர்பானமாக பயன்படுத்தும்போது குடல்புண், சீதபேதி, இரத்தக் கடுப்பு, அல்சர் போன்ற நோய்களும் குணமடைகிறது.

பவுடன் என்பவர் தனது ‘மொரீஷியசின் மருத்துவ தாவரங்கள்’ என்ற ஆங்கில புத்தகத்தின் 96வது பக்கத்தில், ‘‘மொரீஷியசின் மருத்துவ தாவரங்களில் ஐயம்பனா உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. இதை தினசரி சாப்பிட்டு பயன்படுத்துவதன் மூலம், செரிமானமின்மை மற்றும் குடல், நுரையீரல் பிற உடல் பாகங்களில் உள்ள குறைபாடுகளை போக்குகிறது’’ என கூறி உள்ளார்.

இதை அளவுடன் அருந்தினால் தாதுபுஸ்டியாகும், மேலும் இதை டானிக்காவும் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றைக் காலி செய்துவிடும். இந்த மருந்துச் செடி வரகம்பாடியில் உள்ள எனது தோட்டத்தில் பயிர்செய்து வருகிறேன்.

சத்யா


Spread the love