“ஃபெருலா ஃபொட்டிடா” என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு வகையான பசையிலிருந்து பெருங்காயம் கிடைக்கிறது. நன்கு வளர்ந்து முற்றிய தாவரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து பெறப்படும் மணம் கொண்ட பிசின் போன்ற பொருளே பெருங்காயம் ஆகும். வேரின் மையத்தில் உள்ள இலை மொட்டில் இருந்து உயர்ந்த வகை பெருங்காயம் பெறப்படுகிறது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பாலும் பெறப்படுவதால் இது (‘கந்தகாரி” பெருங்காயம் எனப்படுகிறது). இது சிறு செடிவகையைச் சார்ந்தது. மிகப் பெரிய காரட் வடிவத்திலான வேர்களைக் கொண்டது, ஆண்டு முழுவதும் வளரக்கூடிய தாவரம். பெருங்காயத்தின் இலைகள் மேற்பகுதி, கீழ்ப்பகுதி, என இரு வகையானவை. கீழ்ப்பகுதி இலைகள் ஒற்றையாக முப்பது முதல் அறுபது செ.மீ அளவில் நீள்வட்ட வடிவில் காணப்படும்.
மேற்பகுதி இலைகள் அதிகமான பிரிவுகளுடனும், தளிர் இலைகள் அடர்த்தியான இழைகளுடன் இருக்கும். பெருங்காயத்தின் பூக்கள் சிறியதாகவும், மஞ்சள் நிறத்திலும் முடிவில் பெரிய கொத்தாகவும் காணப்படும். பெருங்காயத்தின் பழங்கள் பொதுவாக எட்டு மி.மீ நீளமாகவும் நான்கு மி.மீ குறுக்களவிலும் இருக்கும். இதன் பிசின்பால் மஞ்சள் நிறத்திலிருக்கும். சற்று நெடியான மணமுடையாதாக இருக்கும். இதன் மணம் சற்றே ஏறக் குறைய வெள்ளைப் பூண்டின் வாசனையிலிருக்கும். கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் இது கிடைக்கிறது.
வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்லசுவையும், மணமும் மருத்துவக் குணங்களும் அதிகம் கொண்டது. இது கைப்பு மற்றும் கரகரப்புச் சுவை கொண்டது, வெப்பமானது, இதில் எளிதில் ஆவியாகும் எண்ணை, ரெசின் மற்றும் பிசின் முதலியவை உள்ளது. மேலும் இதில் டைசல்பைட்கள் மற்றும் பெரூலிக் அமிலம், பிட்டிடன் ஆகியவற்றுடன் கௌமரின்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்காயத்தின் மருத்துவ பயன்களுக்கு அடிப்படையாகின்றன. பெருங்காயத்திலுள்ள “ஓலியோரெஸின்” என்ற வேதிப்பொருள் உயர் தரமான மருத்துவ குணங்களைக் கொண்டது. உணவுக் குழலில் ஏற்படும் கடுமையான வலியைக் கட்டுப்படுத்தும் மற்றும் சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற்றைத் தூண்டக்கூடியது. குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சியை நீக்கும். இது அஜீரணம் மற்றும் உடல் வலிகளைக் கட்டுப்படுத்தும். இது நம் நாட்டில், காஷ்மீரில் அதிகமான அளவு விளைகிறது. பெருங்காயச் செடியின் வேர்களையோ, வேர் முண்டுகளையோ நறுக்கினால் அதிலிருந்து நீரில் கரையக்கூடிய வாசனையுள்ள பால் போன்ற திரவம் கிடைக்கும். இதுவே நாம் உபயோகிக்கும் பெருங்காயம் ஆகும். அத்தியாகிரகம், இங்கு, இரணம், கந்தி, காயம், பூதநாகம், வல்லிகம் ஆகிய மாற்றுப் பெயர்களும் பெருங்காயதிற்கு உண்டு. மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் இது கிடைக்கும். இதை நாம் சமையலில் பெரும்பாலும் நறுமணம் கூட்டவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்றே சில சிறப்பு மருத்துவப் குணங்கள் உண்டு. 1/2 கிராம் பொரித்த பெருங்காயத்தை சிறிதளவு பனைவெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி குணமாகும். இரண்டு கிராம் பெருங்காயத்தை இருபது மி.லி நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சி வடிகட்டி சிறுதுளி காதில்விட காதுவலி குணமாகும். தேள் கொட்டினால், பெருங்காயத்தை வெந்நீரில் உரைத்து கொட்டிய இடத்தில் பூச குணமாகும். குடலின் இயக்கத்தை அதிகமாக்க, இதை நீரில் உரைத்து பசையாக்கப்பட்ட பெருங்காயத்தை வயிற்றின் மீது தடவ வேண்டும். இது உணர்ச்சியைத் தூண்டும் தன்மை பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெருங்காயம், சூட்டை உண்டாக்கும். உணவை செரிக்க வைக்கிறது. உணவின் சுவையை கூட்டுகிறது. இதுவாதத்தையும், கபத்தையும் நீக்குகிறது. பித்தத்தை அதிகப்படுத்தும். இது வயிற்று உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற்புழுக்களை அகற்றியாகவும் பயன்படுகிறது.
உபயோகங்கள்:
இது உடலிளுள்ள தேவையற்ற வாயுக்களிய அகற்றி உணவுப் பொருள்களைச் ஜீரணம் செய்கிறது. வாத நோய்களுக்கு மருந்தாக இது அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. இது நீரேற்றம் மற்றும் உடலில் ஏற்படும் சவ்வுகளின் வீக்கத்தையும், கட்டுப்படுத்துகிறது. சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலும், வயிற்றில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கும், உடல் மற்றும் குடலிலுள்ள கிருமிகளை வெளியேற்றவும் பயன்படுகிறது.
நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் மூர்ச்சை மற்றும் வலிப்பு சம்பந்தமான நரம்புக் கோளாறுகளுக்கும் மிகவும் பயனாகிறது. பெண்களின் பிரசவத்திற்குப் பிறகு நஞ்சுக் கொடியை வெளியேறவும் கொடுக்கப்படுகிறது. இதை எண்ணெயில் கரைத்து காயங்களுக்கு மேலே பூசுவதற்கும், காதுவலியைக் குறைக்கவும் பயன்படுகிறது. இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றாக போட குழந்தைகளுக்கு வரும் கக்குவான் குணமாகும். பிரசவத்திற்குப் பின், உடலில் உள்ள அழுக்கை வெளியேற்ற இதை பொரித்து, வெள்ளைப்பூண்டுடன், பனைவெல்லம் கலந்து கொடுக்கலாம். ஒரு கோப்பை மோரில் சிறிது பெருங்காயத்தை சேர்த்து பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் லாக்டோ பாசில்லஸ் என்ற நுண்ணுயிரியும் நம் உடலுக்கு கிடைக்கும்.
உயர்தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். கறுப்பாக இருந்தால் வாங்க வேண்டாம். சுத்தமான பெருங்காயம் கற்பூரத்தைப் போல் எரியும். பெருங்காயத்தின் மணம் எளிதில் காற்றுடன் கரைந்து போய்விடும் ஆகையால், அதை காற்றுப் புகாதபடி பாதுகாத்தால் இதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். மாதவிடாய் சீராக வராமலிருப்பவர்களுக்கும், அதிகரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் தொல்லைகளையும் இது சரிசெய்யும். மாதவிடாய் சீரற்று வருபவர்களும் சினைப்பையில் நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். மாதவிடாய் சீரற்று தவிக்கும் பெண்கள், வாலேந்திரபோளத்துடன், பெருங்காயம் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, மிளகு அளவிற்க்கு சாப்பிட்டால் மாதவிடாய் மற்றும் சூதகக்கட்டும் சரியாகும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலையுடன் இந்துப்பு ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அத்துடன் சிறிது பெருங்காயத்தையும் சேர்த்துப் பொடியாக்கி சாதத்தில் போட்டுப்பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட, அஜீரணம், குடல்புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலிய வாயு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாகும்.
மார்பின்மையப் பகுதியிலும், அதற்கு நேரான பின் பகுதியிலும் (முதுகிலும்) வாயுத் தொந்தரவால் வலி இதயவலியோ என்று பயமுறுத்துமளவிற்கு இருக்கும். அந்தச் சமயத்தில் பெருங்காயம் ஒரு பங்கும், சாதாரண உப்பு இரண்டு பங்கும், திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக்கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டி காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஒருவாரத்திற்கு சாப்பிட்டு வர வாயுப் பிரச்சனைகள் நீங்கும். ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான பிரச்சனை அல்லது நெஞ்சுவலியா (Unstable Angina) என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும். இர்ரிடபுள் பௌல்சிண்ட்ரோம் என்ற (சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல்), அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன்தரக்கூடியது.
குழந்தைகளுக்கு வரும் மாந்தக் கழிச்சலை சரி செய்ய ஓம நீரில், சிறு அளவு பெருங்காய பொடி கலந்து கொடுப்பது சிறந்தது புற்று நோயாளிகளுக்கும் பெருங்காயத்தின் தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்றுநோய் ஆகிய செல்களின் வளர்ச்சியை கிட்டதட்ட ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலாகக் கட்டுப்படுவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது. ஆஸ்துமா தொந்தரவால் மூச்சு விட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத்திணறல் உடனே தீரும்.
பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் சுவாசமண்டலம் வழியாக மார்பு சளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது. மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது. உயர்ரத்த அழுத்தத்தினை குறைத்துரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது. சுத்தமான பெருங்காயமா அல்லது கலப்படம் செய்யப்பட்டதா என்று அறிந்து கொள்ள பெருங்காயத்தை தண்ணீரில் போட்டால் அது கரையாமல் கோந்து போல இருக்கும் அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே கிடைக்கும் இது கலப்படம் செய்யப்பட்டது என்று தெரிந்துகொள்ளலாம். கலப்படமில்லா தசுத்தமான பெருங்காயம் தண்ணீரில் போட்டவுடனேயே கரைந்து தண்ணீர், பால் நிறமாக மாறும். மேலும், சுத்தமான பெருங்காயத்தில் தீக்குச்சியை பற்ற வைத்தால் கற்பூரம் போல பற்றி முழுவதுமாக எரிந்துவிடும்.
எச்சரிக்கை: பெருங்காயத்தை அதிக அளவில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண், கழிச்சல், வயிற்று உப்புசம், சிறுநீர் எரிச்சல் புளியேப்பம் போன்றவற்றை உண்டாகும். உள் மருந்தாக பெருங்காயத்தை உபயோகித்தால் பொரித்து உபயோகிப்பதே மிகவும் சிறந்தது.