மணக்கும் பெருங்காயம்

Spread the love

ஒருவர் சாப்பிடும் போது அவர் வாயில் சரியாக கரையாத பெருங்காயம் சிக்கி அவரால் அந்த நெடியை தாங்க முடியாமல் தவிக்கும் போது மனைவி சொல்லும் சமாதானம் ‘பொய் சொல்பவர்களுக்குத்தான் வாயில் பெருங்காயம் சிக்கும்‘. அதிக நெடி கொண்ட பெருங்காயம் சோம்பு வகையை சேர்ந்த ஒரு செடியிலிருந்து எடுக்கப்படுகிறது.

பெருங்காயம் நமது சமையலில் தேவைப்படும் முக்கியமான வாசனைப் பொருள். பாரசீகத்திலும் பெருங்காயம் சமையலுக்கு உபயோகப்பட்டு வந்ததாக தெரிகிறது. நேரடியாக முகர்ந்தால் சிறிது அருவெறுப்பை கொடுக்கும் பெருங்காயம், சிறிய அளவில் பொடி செய்து உபயோகித்தால் சமையல் கமகமவென்று மணக்கும்.

பெருங்காயத்துடன் கோதுமை அரிசி மாவுகள் மஞ்சள் தூள் இவற்றுடன் கடுவேளம் பிசினுடன் சேர்க்கப்பட்டு தயாரிக்கும் கலவை தான் நாம் தினசரி உபயோகிக்கும் கூட்டுப்பெருங்காயம் பிசினான பெருங்காயம். மிக அதிக நெடியுடையது. இதை எண்ணெய்யில் சீக்கிரமாக வறுத்துத்தான் சமையலில் உபயோகிக்க வேண்டும்.

அப்போது தான் எண்ணெய்யில் கலந்து மிருதுவாக உணவில் நன்றாக கலக்கும். தவிர எண்ணெய்யின் உஷ்ணத்தால் பெருங்காயத்தின் நெடி மாறி, சுவையும், வாசனையும் நன்றாக இருக்கும் பெருங்காய பொடியை நேரடியாக உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கலாம்.

எண்ணெய்யில் வறுக்க தேவையில்லை பிசின் போன்ற கூட்டுப் பெருங்காயம் எவ்வளவு நாளானாலும் வாசனை குறையாது. பொடி பெருங்காயத்தில் வாசனை நாள்போகப் போக குறையும்.

இந்தியாவில் காஷ்மீரிலும், பஞ்சாபிலும் பெருங்காயம் விளைகிறது. இது போதாமல் ஆப்கானிஸ்தான் ஈரானிலிருந்தும் பெருங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. பெருங்காயம் இருவகை பால் வெள்ளை நிறமுள்ள பெருங்காயம், சிவப்பு பெருங்காயம். கந்தக பெருங்காயத்தில் இருப்பது தான் அதனுடைய நெடி, கசப்பு சுவை இவற்றுக்கு காரணம். வெள்ளை பெருங்காயம் தண்ணீரில் கரையும். சிவப்பு பெருங்காயம் எண்ணெய்யில் கரையும் சுத்தமான பெருங்காயத்தை அப்படியே உபயோகிக்க முடியாது.

அதன் நெடி தாங்க முடியாது. மாவுப் பொருட்கள், பிசின் இவற்றுடன் சேர்த்து தயாரிக்கப்படும் கூட்டுப்பெருங்காயம் சிறு கட்டிகளாக செய்து விற்கப்படுகிறது. இதைத் தவிர பொடியாக அல்லது மாத்திரையாக செய்யப்பட்ட பெருங்காயமும் கிடைக்கிறது.

சமையலைத் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் பெருங்காயம் பயன்படுகிறது. பெருங்காயம் கபத்தையும், வாதத்தையும், பித்தத்தை அதிகரிக்கிறது.

இந்திய யுனானி மருத்துவத்தில் பெருங்காயம் ஒரு உஷ்ண ஆதிக்கமுள்ள உயர்ந்த மருந்தாக கருதப்படுகிறது. வாய்வுத் தொல்லைக்கும் அஜீரணத்திற்கும் பெருங்காயம் கலந்த மோரை குடிப்பது அனைவரும் அறிந்த வீட்டு வைத்தியம். வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள், கிருமிகளையும் அழிக்க வல்லது பெருங்காயம்.

நரம்புத்தளர்ச்சி, ஹிஸ்டீரியா (மனநோய்) இருமல், கக்குவான், ஆஸ்துமா, இதர மூச்சுக்குழாய் தொல்லைகள் இவைகளுக்கும் பெருங்காயம் அருமருந்து. ஆயுர்வேத மருந்தாக மட்டுமின்றி பெருங்காயம் சீன, மேற்கத்திய வைத்திய மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இம்மருத்துவ முறைகளில் பெருங்காயத்தை அப்படியே உபயோகிக்கக் கூடாது. வறுத்த பின் தான் உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. சீன மருத்துவர்கள் பெருங்காயம் குடல், மூச்சுக் குழாய், நரம்புகள் இவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதாக நம்புகின்றன.

தேவையானவை

பெருங்காயம் -30 கிராம்

சுக்கு – 20 கிராம்

திப்பிலி -20 கிராம்

மிளகு – 20 கிராம்

சீரகம் – 20 கிராம்

கருஞ்சீரகம் – 20 கிராம்

ஓமம் – 30 கிராம்

இந்துப்பு -30 கிராம்

செய்முறை

கூட்டுப்பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சட்டியிலிட்டு வறுக்கவும். இந்துப்பையும் வறுத்துக் கொள்ளவும். இவ்விரண்டையும் தனியாக பொடி செய்து கொள்ளவும். மற்ற பொருட்களை தனித்தனியே பொடி செய்து கொள்ளவும். மற்ற பொருட்களை தனித்தனியே பொடி செய்து கொள்ளவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஜாடியில் பத்திரப்படுத்தி வைக்கவும். இந்தப் பொடியை சாதத்துடன் நெய்யும் கலந்து சாப்பிட, பசியின்மை, வயிறு உப்புசம், ஏப்பம், வயிற்று வலி இவை குணமாகும். இப்பொடியை மோரிலும் கலந்து சாப்பிடலாம். சிறு குழந்தைகளுக்கும் 2 சிட்டிகை தேனில் கலந்து கொடுக்கலாம்.

நரம்புத்தளர்ச்சிக்கான ஆயுர்வேத மருந்துகளில் பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், மாட்டு வைத்தியத்திற்கும் பெருங்காயம் தேவை. ஆனால், நீண்ட காலம் பெருங்காயத்தை உபயோகிப்பது தவறு. நீண்ட கால உபயோகம் தொண்டையை தாக்கும். வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பித்த உடம்பு வாகு உள்ளவர்கள் பெருங்காயத்தை குறைவாகத்தான் உபயோகிக்க வேண்டும். வாதமும், கபமும் அதிகம் உள்ளவர்களுக்கு இது நல்லது. எப்படியிருந்தாலும் தொடர்ந்து பெருங்காயத்தை உண்ணாமல் விட்டு விட்டு உபயோகிக்கவும் பச்சையாக உண்ணாமல், எண்ணெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

 


Spread the love