தக்காளியை காய் என்றும் சொல்லலாம், கனி என்றும் சொல்லலாம். சுவை மிகுந்த சத்துக்கள் இருப்பதால் இரண்டு வகைகளிலும் சொல்லப்படும் தகுதிப் பெற்றது தக்காளி.
தக்காளி முதன் முதலாக மெக்சிகோ, பெரு, பொலிவியா மற்றும் ஈகுவேடார் முதலிய தென்அமெரிக்க தேசங்களில் தோன்றியிருக்கலாம். 1554 ல் தக்காளி இத்தாலிய தேசத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து இதர ஐரோப்பிய தேசங்களுக்கு பரவி, உலகெங்கும் பரவியது.
முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது “தங்க ஆப்பிள்” என்றும் “காதல் ஆப்பிள்” என்றும் “பெருவியன் ஆப்பிள்” என்றும் அழைக்கப்பட்டது. இதன் அதிசயம் என்னவென்றால் ஐரோப்பாவின் தக்காளி முதலில் அழகு செடியாகப் பயிரிடப்பட்டது – உண்பதற்காக அல்ல. தக்காளிப்பழம் விஷம் என்று கருதப்பட்டது! பதினாறம் நூற்றாண்டின் முடிவில் தான் தக்காளி உண்ணும் பொருளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப்பொழுது மிகப் பிரபலமான பழம் / காய்கறியாக இருப்பது தக்காளி. எளிமையான பழம், எல்லா இடங்களிலும் கிடைக்கும். இதனால் ஏழையின் ஆப்பிள் எனப்படுகின்றது. ஏராளமான உணவுப்பொருள்கள் தக்காளியிலிருந்து செய்யப்படுகின்றது. மிகப் பிரபலமான உணவு “தக்காளி சூப்” தக்காளி சலாடுகளில், கெட்சப்களில், சாஸ்களில் மற்றும் ஊறுகாய்களில் முக்கியமாக உபயோகப்படுத்தப்படுகின்றது. தக்காளி ஜுஸ் ஏழைகளின் ஆப்பிள் ஜுஸ்!
தென்னிந்திய சமையலில் தக்காளி ரசத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் அல்லது அருந்தாதவர்கள் யார்? சாம்பாரிலும் தக்காளி பயன்படுத்தப்படுகின்றது. குழந்தைகள் பச்சையாக எடுத்து உண்கின்றனர்.
தக்காளி பயிரிடுவதில் பல விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மண், சூழ்நிலை, வெப்பநிலை இவற்றுக்கேற்றபடி பல ரகங்கள் பயிரிடப்படுகின்றன. தக்காளிச் செடி பலவீனமான தண்டுயுடையது. இயற்கையாக அது பரவும் புதர் செடி. இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும். தக்காளிச் செடியை நசுக்கினால் ஒரு குறிப்பிட்ட வாசம் வரும். தக்காளி பழத்திலிருக்கும் கோதில் விதைகள் இருக்கும். அதிக தண்ணீர், சம சீதோஷ்ண நிலை சிறிது அமிலம் அதிகமான மண் – இவை தக்காளி பயிரிட தேவையானவை.
மருத்துவ பயன்கள்
தக்காளியின் முக்கியமான மருத்துவ உபயோகம், ஆண்களின் சுக்கிலவலகத்தை பாதுகாப்பது. சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பது என்னவென்றால் தக்காளியை அதிக உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் வருவதில்லை என்பது தான். தக்காளியில் லிக்கோபின் என்ற வேதிப்பொருள் இருக்கின்றது. இந்த காரோடோன் தாவர உணவுகளுக்கு மஞ்சள், ஆரஞ்ச் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கொடுப்பது. பெட்டிச் செய்தியை பார்க்கவும்.
சிறுநீரில் சர்க்கரை தேங்குவதை தக்காளி தடுக்கிறது. காரணம் தக்காளியில் குறைந்த கலோரிகள் இருந்தாலும் கார்போஹைட்ரேட்டை விட அதிக தாதுப்பொருட்கள் இருக்கின்றன. யூரிக் அமிலத்தை தக்காளி குறைக்கின்றது. சிறுநீரை சுத்தம் செய்கின்றது. சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. ரத்தத்தையும் சுத்தீகரிக்கின்றது.
கண் பார்வையை தக்காளி தூய்மையாக்குகின்றது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அபிவிருத்தி செய்கின்றது. இருமலையும், ஜலதோஷத்தையும் தவிர்க்கின்றது. உடல் வலிமையையும், பலத்தையும் அதிகரிக்கின்றது. எனவே தான் அதன் மற்றொரு பெயர் காதல் ஆப்பிள்!
இதர பயன்கள்
தக்காளி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகின்றது. தக்காளி கோது உரமாகவும், புண்ணாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
தக்காளியும் ஆன்டி ஆக்ஸிடெண்டும்
தக்காளியின் அருமை பெருமைகள் நாம் அறிந்ததே. காதல் ஆப்பிள் எனப்படும் தக்காளி உலகிலேயே அதிகமாக விரும்பப்படும் காய்கனிகளில் ஒன்று. அமெரிக்காவில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மற்ற காய்கறிகளை விட வயிறு மற்றும் சுக்கிலவகம் புற்றுநோய்களை எதிர்க்கும் ‘லைகோபின்‘ என்னும் சக்தி தக்காளியில் அபரிமிதமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. தக்காளியை சாப்பிட, சாப்பிட ரத்தத்தில் லைகோபின் அளவு அதிகரித்து, சுக்கிலவகம் புற்றுநோய் அபாயம் குறைந்தது லைகோபின் என்பது ஒரு ‘கரோட்டினாய்ட்‘ கேரட்டுக்கு நிறம் மற்றும் சத்தைத் தரும் பீடா – கரோடீன் போல் லிகோபின் தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் ஃப்ரீரேடிகல்ஸ் என்பது உடலுக்கு கொடுமையான நோய்களை தரும் பொருட்களாகும். இந்த ஃப்ரீரேடிகல்களை அழிப்பதில் சூப்பர் பொருள் லிகோபின். அதாவது, லிகோபின் ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்ட் இது பீடா – கரோட்டினை விட 10 மடங்கு அதிகமாக புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
மற்ற காய்கனிகளை விட தக்காளியில் தான் இந்த லைகோபின் அதிகம் இருக்கிறது. இதனால் புற்றுநோயை எதிர்ப்பதில் தக்காளி முதலிடம் சுக்கிலவகம் வயிறு, குடல், நுரையீரல் இவைகளில் வரும் புற்று நோய்களுக்கு தக்காளி, தக்காளியால் செய்யப்படும் சாஸ் போன்றவைகள் சிறந்த மருந்து, இந்த உண்மை 6 வருடமாக ஹார்வார்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘ஆன்டி ஆக்ஸிடன்ட்‘ என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்கிறோம். இவை என்ன?
நம் உடலில் ஃப்ரிரேடிகல்ஸ் என்ற பொருட்கள் உற்பத்தியாகின்றன. இவை சமயம் வரும்போது நம் உடலின் உயிரணுக்களை தாக்கி தீங்கு விளைவிக்கின்றன. வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் இவற்றை தடுக்க உதவும். இவை ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்‘ எனப்படும்.
உணவு நலம் ஜுலை 2010
காதல், ஆப்பிள், தக்காளி, சத்து, தங்க ஆப்பிள், தக்காளிப்பழம், சமையல், தக்காளி ரசம், மருத்துவ பயன்கள், மருத்துவ உபயோகம், ஆண்களின், சுக்கிலவலகம், ஆய்வுகள், ப்ராஸ்டேட், புற்றுநோய், லிக்கோபின், காரோடோன், சிறுநீர், சர்க்கரை, கார்போஹைட்ரேட், தாதுப்பொருட்கள், யூரிக் அமிலம், சிறுநீரகம், கண்பார்வை, லைகோபின், கரோட்டினாய்ட், பீடாகரோடீன், ஃப்ரீரேடிகல்ஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட், மருந்து,