பொதுவாக ஆப்பிள் பழம் ஜீஸ், சாலட், கேக், புட்டிங், பைஸ் என பல வகையான உணவில் பயன்படுத்தப்படுகிறது. இதை அனைவரும் அதிகமாக விரும்பி உட்கொள்கின்றனர். ஆனால் ஆப்பிள் பழத்தை அப்படியே சாப்பிடுவதோடு மட்டுமின்றி, டீயாகவும் பருகலாம். இது சுவையாக இருப்பதோடு, நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாகும்.
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் உண்டு வந்தால் நமது வாழ்நாட்கள் நீடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆப்பிள் சீடர் வினிகர் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது என்று கேள்விபட்டிருந்தாலும், ஆப்பிள் டீ பற்றி அநேகர் அறிந்திருக்கமாட்டார்கள். இந்த ஆப்பிள் டீ எப்படி தயாரிப்பது மற்றும் அதன் பயன்கள் என்னென்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
ஆப்பிள் டீ
செய்முறை:
ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை, கருப்பு தேயிலையுடன் சேர்த்து தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். இந்த டீயுடன் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொதிக்கவிடவும். இது நன்கு கொதித்ததும், வடிக்கட்டி எடுக்கவும். சுவையான ஆப்பிள் டீ தயார்.
ஆப்பிள் டீயில் நாம் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஆப்பிளில் இயற்கையாகவே இனிப்பு சுவை அடங்கியுள்ளது. அதற்கு மேல் இனிப்பு வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆப்பிள் டீயின் பயன்கள்:
ஆப்பிள் டீயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள நார்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் ஆப்பிள் டீ உதவுகிறது.
ஆப்பிள் டீ நாம் உண்ணும் உணவை விரைவில் செரிக்கச்செய்கிறது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பாலிபீனால், லீபோப்ரோட்டீன் அளவை குறைக்க உதவுவதுடன், நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் குறைக்கிறது. இது மலச்சிக்கலுக்கும் நல்ல தீர்வை தருகிறது.
ஜோ.கி