பீட்ரூட்டின் வகைகள்

Spread the love

சில காய்கறிகள் உலகம் முழுவதும் பரவியவை. அவற்றில் ஒன்று பீட்-ரூட். இந்தியாவில் இது உபயோகிக்கப் பட்டாலும், ‘பழங்கால’ மனிதர்கள் இதை அதிகம் விரும்புவதில்லை. ‘வெளிநாட்டு காய்கறி’ என்பது காரணமாகலாம். இல்லை கிழங்கு வகை என்பதும் காரணமாயிருக்கலாம்.

நாலு வகை பீட்ரூட்டுகள் உள்ளன. அவை

சர்க்கரை பீட் – (Betavulgaris sub. sp. Cicla syn. rapa)

சர்க்கரை சிவப்பு பீட் – சமையலில், சலாடுகளில் பயன்படும் காய்கறி (Betavulgaris)

மான்ஜல் வர்செல் – (Mangel wurzel) – கால்நடை உணவாக

இலை பீட் – (Swisschad / Betavulgaris sub. sp. Maritima)

சர்க்கரை பீட்- பெயருக்கேற்ப இது சர்க்கரை தயாரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. கரும்பு பயிரிட முடியாத குளிர் பிரதேசங்களில் சர்க்கரை பீட் பயிராகிறது. 1802-ல் மார்க்க்ராஃப் (Marggraf) என்ற ஜெர்மன் விஞ்ஞானி வெள்ளை நிற சர்க்கரை பீட்ரூடிலிருந்து 6.2% சர்க்கரையை பிரித்துக் காண்பித்தார். இப்போது முன்னேறிய முறைகளால் இந்த பீட்ரூட்டிலிருந்து 15 – 20% சர்க்கரை எடுக்கப்படுகிறது. சர்க்கரைக்காகவே, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. சர்க்கரை பீட்ரூட், நாம் சமையலில் பயன்படுத்தும் சிவப்பு பீட்ரூட்டுடன் (தாவரவியல் ரீதியாக) மிக நெருங்கிய உறவு உள்ளது – அண்ணன், தம்பி என்று சொல்லலாம். சர்க்கரை பீட் வருடமிருமுறை விளையும். வெண்ணிற, கூம்பு வடிவ சராசரி 0.90 கிலோ எடையுடன், 30.5 செ.மீ. நீளம் உள்ள வேர்களுடையது. வேர்கள் துண்டிக்கப்பட்டு நீரில் சூடாக்கப்பட்டு சர்க்கரை பிரித்தெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன. இலைகளும், சர்க்கரை எடுத்த பின் கிடைக்கும் வேர்ப் புண்ணாக்கு மாட்டுத் தீவனமாக பயனாகிறது. சுத்திகரிக்கப்படாத சர்க்கரை பாகு ‘எதனால்’ எனும் ‘எதில் ஆல்கஹால்’ தயாரிப்பில் பயனாகும்.

சிவப்பு பீட்ரூட்- இது தான் நாம் சமையலில், ‘பச்சையாகவே’ கூட பயன்படுத்தும் தோட்டக் காய்கறி. ஒரு மாதிரியான இனிப்பு – துவர்ப்பு சுவை உடையது. மத்திய தரைக்கடல் நாடுகளில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி உபயோகத்தில் இருந்ததாக சரித்திர சான்றுகள் கூறுகின்றன. எகிப்திய பெண்கள் இதன் சிவப்பு நிறத்திலிருந்து தயாரிக்கபட்ட சிவப்பு சாயத்தை ‘லிப்ஸ்டிக்காக’ பயன்படுத்தியதாக சொல்லப் படுகிறது. இதில் சமையல் பயன்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு தான், ஒரு ஃபிரான்ஸ் சமையல்காரர் மூலம் தெரிய வந்தது. 1558 ல் ஜெர்மனியிலும், 1758 ல் இங்கிலாந்திலும் பயிரிடப்பட்டது. பீட்ரூட் கெட்டியான வேருடையது. 2 வருடம் உயிர் வாழும் முதல் வருடம் அடுக்கு அடுக்கான இலைகள் கொண்டிருக்கும். இரண்டாம் ஆண்டில் பூ, விதை உண்டாகும்.

100 கிராம் பீட்ரூட்டில் உள்ளவை

ஈரம் – 87.7 கி, புரதம் – 1.7 கி, கொழுப்பு – 0.1 கி, தாதுப்பொருட்கள் – 0.8 கி, நார்ச்சத்து – 0.9 கி, கார்போஹைட்ரேட் – 8.8 கி, கால்சியம் – 18.3 மி.கி, பாஸ்பரஸ் – 55 மி.கி, அயச்சத்து – 1.19 மி.கி, தியாமின் – 0.04 மி.கி, ரிபோபிளேவின் – 0.09 மி.கி, நியாசின் – 0.4 மி.கி, விட்டமின் சி – 10 மி.கி, கோலின் – 242 மி.கி, தவிர மெக்னீசியம், சோடியம், செம்பு, ஸிங்க் போன்ற மூலப்பொருள்களும் பீட்ரூட்டில் சிறிதளவு உள்ளன.

பயன்கள்

இதன் வண்ணமே ரத்த நிறம் தான். இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் சோகை வியாதி நீங்கும். ரத்தத்திலிருந்து உண்டாகும் சிவப்பு அணுக்கள் அதிகமாகும்.

தினம் 1/2 கப் பீட்ரூட் ஜுஸ் + 1/2 கப் கேரட் ஜுஸ், காலையில் எடுத்துக் கொண்டால், பிணியின்றி பல நாள் நீடித்து வாழலாம். உடலின் நோய் தடுக்கும் சக்தி பலமாகும். நுரையீரல் வலுவாகும்.

மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வாந்தி, பேதி போன்ற உணவு மண்டல கோளாறுகளுக்கு பீட்ரூட் பலன் தரும். பீட்ரூட் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் சாறு சேர்த்தால் வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பீட்ரூட், கேரட்டைப் போல் கண்பார்வைக்கு நல்லது.

பீட்ரூட் கஷாயம் தோல் நோய்களை போக்கும். தீப்புண்களின் மேல் பீட்ரூட் சாற்றை தடவலாம். தீப்புண்கள் ஆறும்.

தேன் கலந்த பீட்ரூட் சாறு அல்சருக்கு நல்லது.

பீட்ரூட் சாறு மலமிளக்கி. காரணம் அதில் உள்ள செல்லுலோஸ்.

மற்ற காய்கறிகளைப் போலவே ருசியாகவும், சுவையாகவும் பீட்ரூட்டை சமைக்கலாம். தேங்காய் சேர்ந்த கறியாக, குழம்பில் இல்லை பச்சையாகவே உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பீட்ரூட்டை சமைக்கு முன் நன்கு கழுவ வேண்டும். கிழங்கானதால் மண் வாசனை இருக்கும். தோலை நீக்கி சமைக்க வேண்டும். புதிதான பீட்ரூட் கெட்டியாக இருக்கும். துணி துவைக்கும் போது சாயம் போவது போல், பீட்ரூட்டிலும் சாயம் வெளுக்கும். மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கையில், அவையும் சிவப்பாகும். எனவே பீட்ரூட்டை தனியே வேக வைத்து கடைசியில் சேர்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்களுக்கு பீட்ரூட்டை தவிர்க்கவும்.

சிவப்பு பீட்ரூட்டிலிருந்தும் சர்க்கரை எடுக்கலாம். ஏனென்றால் சர்க்கரை பீட்ரூட்டும், சிவப்பு பீட்ரூட்டும் நெருங்கிய உறவினர்.

வீட்டிலேயே தயாரிக்கும் பீட்ரூட் ஒயின் பிரபலமானது. ரஷ்யாவின் பிரசித்தமான Borshch என்ற சூப்பின் முக்கிய பொருள் பீட்ரூட்.

பீட்ரூட் சூப்

தேவையான பொருட்கள்

பீட்ரூட்                      –  1/4 கிலோ

வெங்காயம்                       -1

எண்ணெய்                   – 1 டே ஸ்பூன்

நறுக்கிய எலுமிச்சம் தோல்   -1/2 டீஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு         -1 டீஸ்பூன்

புதினா இலை               –    20

கிரீம்                       – 1 டே ஸ்பூன்

தண்ணீர்                    -1/2 லிட்டர்

உப்பு, மிளகுத்தூள்            -தேவைக்கேற்ப

செய்முறை

பீட்ரூட்டின் தோலை நன்கு சீவி சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வைத்துச் சூடாக்கிய வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு 2 நிமிடம் வதக்கவும், பின்பு நறுக்கிய பீட்ரூட், தண்ணீர், நறுக்கிய எலுமிச்சம் பழத்தோல் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் எலுமிச்சம் தோலை எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்து இறக்கி வைத்து பின்பு அதில் புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

பீட்ரூட் ஜுஸ்

தேவையான பொருட்கள்

     பீட்ரூட்         –    1

     எலுமிச்சம் ஜுஸ் –    2 டீஸ்பூன்

     உப்பு            –    1 சிட்டிகை

     சீனி             – தேவையான அளவு

     மிளகுத்தூள்          – சிறிது

     புதினா இலை   –        4

செய்முறை

பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் பீட்ரூட், 1/2 கப் தண்ணீர், சீனி, உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்ததை வடிகட்டி ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி எலுமிச்சம் ஜுஸ், மிளகுத்தூள், ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கவும். கடைசியாக புதினா இலைகளைத் தூவி பருகவும்.

பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மூலநோய் முதலிய நோய்கள் குணமாகின்றன.

பீட்ரூட் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்

      பீட்ரூட்              – 1

     பால்                   – ½ லிட்டர்

     வெனிலா ஐஸ்கிரீம்   –  1 கப்

     சீனி                    – தேவையான அளவு

     வெனிலா எசன்ஸ்       – 1/2 டீஸ்பூன்

     ஜெல்லி         –         1 கப்

     தண்ணீர்        –      1 டம்ளர்

செய்முறை

பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். பீட்ரூட் தோலை சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பாலுடன், பீட்ரூட் ஜுஸ், சீனி, வெனிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் ஐஸ்கிரீம், ஜெல்லி சேர்த்து அலங்கரித்துப் பருகவும்.

பீட்ரூட் லஸ்ஸி

தேவையான பொருட்கள்

     தயிர்              –        1 கப்

     பீட்ரூட் சிறியது     –        1

     சீனி                – தேவையான அளவு

     ஜாதிக்காய்ப்பொடி         –    1 சிட்டிகை

     ஐஸ் க்யூப்ஸ்        – சிறிது

செய்முறை

பீட்ரூட்டை தோல் சீவி துருவி வேக வைத்துக் கொள்ளவும். சிறிது பீட்ரூட் துருவலை அலங்கரிக்க வைத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் தயிர், வேக வைத்த பீட்ரூட் துருவல், சீனி, ஜாதிக்காய்ப் பொடி, ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைப் போட்டு ஒரு அடி அடித்து மேலே பீட்ரூட் துருவலை தூவி பரிமாறவும்.

பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள்

     பீட்ரூட்              – 1/2 கிலோ

     சர்க்கரை             – 1/2 கிலோ

     நெய்                – 200 கிராம்

     ஏலப்பொடி           – 1 டீஸ்பூன்

செய்முறை

பீட்ரூட்டை நன்கு சீவி தோலை சீவவும்.பொடிப் பொடியாக நறுக்கி வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு வதக்கவும்.வதக்கிய பின் ஆற வைத்து மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சர்க்கரையை போட்டு அது முழுகும் வரை நீர் ஊற்றி பாகு தயாரிக்கவும்.பாகு கம்பிப் பதம் வந்ததும் அரைத்த பீட்ரூட்டையும், நெய்யையும் கொட்டி கிளறவும்.

வாணலியின் ஓரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் ஏலப்பொடியைப் போட்டு கிளறவும். அடுப்பிலிருந்து எடுத்து நெய் தடவிய தாம்பாலத்தில் போட்டு அல்வா துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


Spread the love