எல்லோரும் அழகாகலாம்!

Spread the love

இயற்கை எல்லோரையும் ஒன்று போல் நடத்துவதில்லை. சிலரிடம் மட்டும் பரிவோடு நடந்து கொள்ளும் அது பலரிடம் கருணையின்றி நடந்து கொள்கிறது. மனிதர்களிடையே மட்டுமன்றி எல்லாவித உயிரினங்களிடமும் இது போன்ற ஏற்றத் தாழ்வினை இயற்கை உருவாக்குகிறது. குறிப்பாக அழகு, முக வடிவு என்று நாம் பேசுகின்ற போது நம்மில் சிலரிடம் மட்டும் இயற்கை மிகுந்த கனிவுடன் நடந்து கொண்டிருப்பதை நடைமுறை வாழ்வில் நாம் காண முடியும்.

அழகு என்ற சொல்லை ஆராயப் புகு முன்னர் முக அழகு ஒன்று மட்டுமே அழகு என்று கருதப்படுவதில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். உயரம், எடை, தோற்றப் பொலிவு, பாவனை என்பன போன்ற பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு சொல்லே அழகு என்பதாகும்.

பெண்களைப் பொறுத்தவரை குரூபி என்று கூறத் தக்கவர்கள் எவரும் இவ்வுலகில் இல்லை. அழகானவர்கள், சாதாரணமானவர்கள் என்று இரு வகையினரே உண்டு.

சிலருடைய அழகு வெளிப்படையாகத் தெரிகின்ற போது தாங்கள் அழகானவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். ஆனால் பலரது அழகு மறைந்து கிடக்கின்ற போது அவர்கள் தங்களின் அழகு பற்றிய சிந்தனையே இன்றித் தங்களது அழகை மேம்படுத்தவும் மறந்து இருந்து விடுகிறார்கள். முயன்றால் தன்னால் அழகாகத் தோற்றம் தர இயலும் என்ற அடிப்படை உண்மையை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அழகற்ற, பொலிவற்ற உங்கள் தோற்றத்தை, இயல்பான தோற்றமென்று ஒரு போதும் ஒப்புக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ செய்யாதீர்கள். அழகு என்பது குறிப்பிட்ட எந்த ஒருவரது குடும்பச் சொத்தும் அல்ல. இப்போது இருப்பதை விட மேலும் சிறிதளவாவது மேம்படுத்த முடியாத பொருள் என்று உலகில் எதுவும் இல்லை. எனவே ஒப்பனையின் மூலம் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த உறுதி கொள்ளுங்கள்.

உங்கள் உருவம், தோற்றம் பற்றி உங்களது ஆழ்மனதில் என்ன உணர்வுகளைக் கொண்டிருக்கிறீர்கள்? பழக்கமில்லாத, புதிய ஒருவர் உங்களைப் பரிசோதிப்பது போல் உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள்.

உங்கள் முகம், உங்கள் உடல், உங்கள் தோற்றம், உங்கள் உணர்வுகள், உங்கள் பழக்கமுறை ஆகியவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பாருங்கள். குறைகளையும், நிறைகளையும் மனதில் பதித்துக் கொள்ளுங்கள். இயலாவிட்டால் ஒரு கையேட்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் தமது உடலைப் பற்றியோ, தோற்றத்தைப் பற்றியோ அக்கரையின்றி இருந்தால் கால ஓட்டத்தில் வருடங்கள் ஓடி மறையும் போது கொஞ்ச நஞ்சமிருந்த தங்கள் முகப் பொலிவையும் தோற்றத்தையும் இழக்க நேரிடும்.

யௌவனம் காத்தல் செய்

   ரூபம் செம்மை செய்.”

என்ற பாரதியின் புதிய ஆத்தி சூடியை நினைவில் கொண்டு செயல்பட்டால் எல்லோராலும் எழில் மிக்கவர்களாகத் தோன்ற முடியும்.

உடல் தோற்றத்தில் கருத்தின்மையும் ஒப்பனை முறைகளில் ஆர்வமின்மையும் பல அழகிய இளம் பெண்களைக் கூட அழகற்றவர்களாகத் தோற்றம் தரச் செய்து விடுகிறது. அந்தக் கூட்டத்தில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவும் வகையில் எங்களுக்கு முக்கியம் என்று தோன்றுபவற்றை உங்களுக்கு வழங்கியுள்ளோம். படித்து, நடைமுறைப்படுத்தி பயன் பெற வாழ்த்துக்கள்!                                                  

தங்கள் நலன் கருதி,

                                                                                ஆயுர்வேதம் டாக்டர். எஸ்.செந்தில் குமார்.


Spread the love