பருவகால ஒப்பனைகள்

Spread the love

கால நிலைக்கு ஏற்ப ஒப்பனை அவசியம்:

சருமமானது கால நிலைக்கு ஏற்ப பாதிப்புகள் அடைவது நமது நாட்டில் சற்று அதிகம் தான். கோடைக் காலம் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். குளிர் காலத்தில் குளிரின் தாக்கம் இரத்தத்தையே உறையச் செய்யுமளவுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இரண்டும் கெட்டானாக காற்றுக் காலமும், மழைக் காலமும் அமைந்திருக்கும். முன்பு நாம் கூறியது போல சருமமானது அதிக வெயில், அதிக குளிரிலும் பாதிப்படையச் செய்கிறது. எனவே எல்லா கால நிலைகளிலும் சருமத்தை அழகுடன் வைத்துக் கொள்வது அவசியமானது. இதனை நாம் அனுபவ அறிவின் மூலமும் உடல் நல அறிவின் மூலமும் தெரிந்து கொள்ளக் கூடிய விசயமாகும். இதனைக் கருத்தில் கொண்டு அதற்கான சில குறிப்புகளை கீழே காணலாம்.

மழைக் கால ஒப்பனை:

மேலை நாடுகள் போல நம் நாட்டில் நீண்ட மழைக்காலம்  இல்லை. எனினும் பருவக் காற்று வீசுகின்ற காலத்தில் மழை என்பது பெரும்பாலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்தப் பருவத்தில் பருத்தி உடைகள் அணிவது உசிதமல்ல. நைலக்ஸ், டெரிகாட்டன், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகளினால் நெய்யப்பட்ட துணிகள் அணிவது நல்லது.

இந்தப் பருவத்தில் நாம் வெளியில் செல்லும் பொழுது, நாம் பவுண்டேஷன் மற்றும் முக கிரிம்  (Face  Cream) இடுவதைத் தவிர்த்து விடலாம். மழை நீர் படும் போது கரைந்து போகவும், அரைகுறை நிறங்கள் கோடுகளாகத் தெரியவும் வாய்ப்புண்டு. ஐ புரோ பென்சில், லிப்ஸ்டிக், ரூஜ், பவுடர் போன்றவற்றுடன் நிறுத்திக் கொள்ளலாம். லிப்ஸ்டிக்கை அழுத்தமாக போட்டு சிறிது லிப் க்ளாஸ் இடுங்கள். ரூஜை அளவோடு மெலிதாகத் தடவுங்கள். அதை சரும நிறத்தோடு இணையும் படி சீராக இழைத்து விடவும். புருவத்திற்கு ஐ புரோ பென்சில் தீட்டும் போது கத்தையாக மொத்தமாய் ஒரு கோடு இழுக்காதீர்கள். மெல்ல மெல்ல சிறு சிறு தீற்றல்களாக இடவும்.

வாரம் ஒருமுறை கீழ்க்காணும் பேஷியல் (Facial) இட்டு 45 நிமிடங்கள் பொறுத்திருந்து பின்னர் கழுவுங்கள்.

முட்டை வெள்ளைக் கரு &- 1, தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு ஒவ்வொன்றிலும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு இம்மூன்றையும் ஒன்றாக்கி நன்றாக கலக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் 45 நிமிடங்கள் இருக்கச் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

உங்கள் முகம் இயல்பாகவே சற்று வறண்டு இருக்கக் கூடியது என்றால், அது அந்த பருவத்தில் சற்று வெளிப்படையாகவே தெரியக் கூடும். ஒரு முட்டை மஞ்சளுடன் இரண்டு தேக்கரண்டி அளவு பாலாடையைச் சேர்த்து நன்கு கலக்கி முகம்,கழுத்து ஆகியவற்றில் தடவி வைத்திருந்து 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

கோடை கால ஒப்பனை:

இந்தியாவில் கோடை காலம் கடுமையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். கோடையின் கடுமை காரணமாக வேர்க்குரு, வேனல் கட்டிகள், தோல் சுருக்கங்கள் தோன்றுவதும், சருமம் கருத்துப் போவதும் இங்கு இயல்பாக நேரக் கூடியவை. இவற்றைத் தவிர்க்க வேண்டுமெனில் ஒரு சில விஷயங்களைப் பின்பற்றுதல் அவசியம். கோடையின் தாக்கத்தினைக் குளிர்விக்க, இரவு நேர சருமப் பராமரிப்பினைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். முக்கியமாக, நீங்கள் 25 வயதிற்கு மேற்பட்டவர் எனில் தினமும் படுக்கைக்குச் செல்லும் முன்பு தினமும் தவறாது மாய்ஸ்சலைசிங் கிரிம் தடவி வர வேண்டும்.

உங்களுக்குத் தேவையான மாய்ஸ்சரைசிங் கிரீம் இதோ..

பாதாம் பருப்புகள் &- 4

பாலாடை -& 2 மேஜைக் கரண்டி, மற்றும்

ரோஸ் எசென்ஸ் &- 3 சொட்டு

செய்முறை:

சிறிதளவு பாலில் பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் ஊற வைத்துக் காலையில் தோலை உரித்து விட்டு விழுதாக அரைக்கவும். இதைப் பாலாடையுடன் கலந்து மிக்ஸ் செய்யவும். ரோஸ் எசென்ஸ் சேர்த்து ஒரு பாட்டிலில் எடுத்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியர்வையும் அதிகமாகத் தோன்றக் கூடும். ஓரளவு பிசுபிசுப்பு உடைய சருமம் உள்ளவர்கள் கூடுதலாக தங்கள் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். தினசரி மூன்று, நான்கு முறை முகம் கழுவிக் கொள்ள வேண்டும். மென்மையான சோப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதலில் வெதுவெதுப்பான நீராலும், தொடர்ந்த குளிர்ச்சியான நீராலும் கழுவ வேண்டும். குளிர்ந்த நீர் சருமத் துவாரங்களைச் குறுக்கி, அழுக்கும், தூசியும் உட்புகுவதை தடை செய்கிறது. குளிர்ந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அந்நீரை முகத்தில் அடித்து தடவிப் பின்னர் கழுவி விடவும். இது ஒரு நல்ல அஸ்ட்ரின்ஜன்ட். வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு ஆவி பிடிப்பது நல்லது.

சிலருக்கு உள்ளங்கை, உள்ளங்கால், மார்பகங்கள், நெற்றி போன்ற இடங்களில் அதிக வியர்வை தோன்றலாம். இது மட்டுமல்லாமல் மனதிற்கு ஒவ்வாத வாடையும் உண்டாகலாம். இவர்கள் காலை, மாலை இரண்டு வேளையும் குளிப்பதுடன் குளித்த பிறகு நைசில், ஷவர் டூ ஷவர் போன்ற ஏதாவது ஒரு பவுடரை தேவையான இடங்களில் தூவி பூச வேண்டும். தலை முடியை வாரத்திற்கு இரு முறை கழுவுவது அவசியம். ஐஸ் கட்டிகளை துணியில் முடிந்து  கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் கண்களின் களைப்பு நீங்கும்.

குளிர் கால ஒப்பனை:

கோடை காலம் வெயில் பிரச்சனை என்றால் குளிர் காலத்தின் குளிரும் சருமப் பராமரிப்புக்கு ஒரு சவால் விடுகின்றது. குளிர் கால மாதங்களில் சருமத்தின் கீழ்ப்பரப்பில் உள்ள சுரப்பிகள் தங்கள் செயலாற்றலைக் குறைத்துக் கொள்கின்றன. இதனால் இவற்றின் சுரப்பும், சரும நைப்பும் குறைகிறது. இவற்றுடன் குளிர் கால சரும வறட்சியும் சேரும் போது, சருமத்தில் சுருக்கம், வெடிப்பு, சிலும்பல் வெள்ளைச் சிராய் (Scaling) போன்றவைகள் ஏற்படுகின்றன. இவைகளைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? குளிர் காலத்தில் சோப்பைப் பயன்படுத்தாமல் இருப்பது தான் சிறந்தது. சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை சோப் நீக்கி விடுகிறது. சோப்பிற்குப் பதிலாக பாலாடையுடன் சிறிது மஞ்சளும், சிறு துளி எலுமிச்சைச் சாறும் சேர்த்து முகத்தில் தடவி முகம் கழுவலாம். ஒவ்வொரு நாள் இரவும் படுக்கைக்குச் செல்லும் முன்பு, ஒரு மேஜைக் கரண்டி அளவு பாலாடையில் சில துளிகள் கிளிசரின், ஆலிவ் ஆயில், ரோஸ் எசென்ஸ் சேர்த்துக் கலந்து முகம், கழுத்து, கைகளில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும், டிஸ்யூ பேப்பரால் மெல்லத் துடைத்து நீக்கி விட்டு முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்னர் குளிர்ந்த நீரிலும் கழுவி துவாலை ஒன்றினால், மென்மையாக ஈரத்தை ஒத்தி எடுக்கவும்

குளிக்கச் செல்வதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைக் கையில் எடுத்து உடலெங்கும் நன்கு தடவி மசாஜ் செய்து பின்னர் குளிக்கவும்.

குளிர் காலத்தில் குறிப்பாக உதடுகள் பாதிப்படைவதுண்டு. உதடு வறட்சி, உதட்டில் வெடிப்பு சாதாரணமாக ஏற்படக் கூடும். ஒரு ரோஜாப் பூவின் இதழ்களை எடுத்து நன்கு அரைத்து அதைப் பாலாடையுடன் கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை இரவில் படுக்கச் செல்லும் முன்பு உதடுகளில் தடவி வர,  இரண்டு, மூன்று நாட்களில் உதடு வறட்சியும், வெடிப்பும் நீங்கும். வாயைச் சுற்றிலும் பனி படர்ந்து, வறட்சியுடன் தோன்றுவதும், நமநமவென்று அரிப்பு ஏற்படுவதும் குளிர் காலத்தில் ஏற்படுவதுண்டு. வாயைச் சுற்றி கிளிசரைன் அல்லது வெண்ணெய் தடவுவதுடன் ‘பி’ காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளை உட்கொள்வதும் நல்ல பலனைத் தரும். கிளிசரைன், ஒடிகொலோன், எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் கைகளில் தடவி வருவதும் பின்னர் இதைக் கழுவி விடுவதுமாக செய்து வந்தால் சருமம் மிருதுவாகவும், அழகாகவும் இருக்கும்.

மேக்அப் இடும் போது, மாய்ஸ்சரைசர் கலந்த பவுண்டேஷன் இடவும். உதடுகளில் அடர்ந்த நிறமுள்ள லிப்ஸ்டிக் இடவும். குளிர் காலத்தில் வெளிர் நிற லிப்ஸ்டிக் உங்களை நோயாளி போலக் காட்டக் கூடும். லிப் கிளாஸ் இடுங்கள். சிறிது வாஸலினை உதடுகளில் தடவுங்கள். உதடுகள் அழகாகவும், மிருதுவாகவும் மிளிரும்.

உங்களது முக அழகு மேலும் சிறப்பாகத் தோன்ற உங்களது வாய், பற்கள்,ஈறுகள் சிறப்பாக இருத்தல் அவசியம். நீங்கள் பேசும் போது, சிரிக்கும் போது ஏன்.. கொட்டாவி விடும் போது வெளியே தெரியக் கூடியவை பற்களும்,ஈறுகளும் தான். அழகிய இளஞ்சிவப்பு ஈறுகளில் முத்து போன்ற வெண்மையான பற்கள் அழகாக அமைவது என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பல்ல என்றாலும் முன்னேறி வரும் மருத்துவ தொழில் நுட்பங்களினால் மாசற்ற தூய பற்களைப் பெற இயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல பிரஷ்ஒன்றினால் பற்பசை கொண்டு பல் துலக்குவது பற்களுக்கு பல விதங்களில் உதவுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து பற்கள் வெண்மையாகின்றன. பல இடுக்குகளில் உள்ள காரைகள் நீங்கிப் பற்கள் தூய்மை அடைகின்றன. தினமும் காலை மற்றும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பும் பல் துலக்குங்கள். பற்சிதைவு, பற்குழி போன்றவைகள் ஏற்பட்டால் உடனே பல் மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெறுங்கள். ‘ பல்லு போனால் சொல்லு போச்சு ’ என்று கூறுவார்கள். இன்று பல் போனால் சொல் மட்டுமல்ல, முக அழகும் அதனுடன் சேர்ந்த இளமைத் தோற்றமும் போய் விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பற்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும்.

இன்னும் சில செய்முறைக் குறிப்புகள்:

1. நன்கு கழுவித் துடைக்கப்பட்ட சுத்தமான சருமத்தில் மேக்அப்பைத் தொடங்குங்கள். மேக்அப் நெடுநேரம் அழகுடன் நிலைத்திருக்க இது உதவும்.

2. இயன்ற போதெல்லாம் இயற்கை வெளிச்சத்தில் (Natural Light)  மேக்அப் இடுங்கள். இதனால் மேக்அப்பில் குற்றம் குறை இருந்தாலும் அதை திருத்தி சரிசெய்ய இயலும்.

3. ஆலிவ் மற்றும் மாநிறம் உள்ளவர்கள் ரோஸ், ப்ளம், தேன் நிறமுள்ள ஷேடுகளில் எடுப்பாகத் தோன்றுவார்கள்.

4. முக மேக்அப் நிறத்திற்கு ஏற்ப லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்துங்கள்.

5. உதடு அவுட் லைன் வரையும் போது நீங்கள் பயன்படுத்தப் போகும் லிப்ஸ்டிக்கை விட 2 ஷேடுஆழந்த நிறமுள்ள லிப் பென்சில் கொண்டு வரையுங்கள்.

6. லிப்ஸ்டிக் இடுவது நன்கு அமைய ‘ணி’ என்று உதடு விரிய உச்சரித்தபடி லிப்ஸ்டிக் தீட்டுங்கள்.

7. கண்கள் பெரிதாக தெரிய வேண்டுமானால் ஐ லைனரை கீழ் இமை முடிகளின் நடுப் பகுதியில் தொடங்கி வெளிப்புறம் நோக்கிக் கோடிட்டு வரையுங்கள்.

8. அழகாகத் தோன்ற நேவி புளு, பச்சை, வயலெட், கலர் மஸ்காராவை மேல் இமை முடி நுனியில் தடவலாம்.

9. புருவ முடி நீக்கும் போது அது முளைத்திருக்கும் திசையிலேயே எடுங்கள். இதனால் முடி பாலிக்கிள் சேதமடையாது.

10. ஹைலைட்டர் உபயோகிக்கும் போது புருவத்திற்கு கீழே இமையின் நடுவிலிருந்து வெளிப்புறம் நோக்கித் தடவிப் பிறகு சமன் செய்யவும். இது புருவ எலும்பினை எடுப்பாக காட்டுவதுடன் கண்ணை ஆழ்ந்தும் அகன்றும் காட்டக் கூடும்.

11. முகத்தில் சுருக்கங்கள், கோடுகள் இருந்தால் அவற்றின் மேல் வெளிறிய பவுண்டேஷனைத் தடவிய பிறகு முகத்திற்கு ஏற்ற ஆழ்ந்த நிறமுடைய பவுண்டேஷனை முகம் முழுவதும் தடவவும்.

12. அடிக்கடி நெயில் பாலிஷ் உதிர்ந்து போய் நகம் பொலிவின்றி இருந்தால் 3 கோட் நெயில் பாலிஷ்இடவும். இது அதிக நாட்கள் உதிராமல் இருக்கும்.


Spread the love