அழகைக் கூட்டும் அற்புத உணவுகள்

Spread the love

அழகு மட்டும் இருந்தால் போதாது, கூடவே ஆரோக்கியமும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம். ஆகவே தான், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் பெருந்தொகை செலவிடவும், தயாராகவும் இருக்கின்றனர். நாம் உண்ணும் உணவிலேயே அவற்றைப் பெற்று விட முடியும். இதோ சில டிப்ஸ். முகப்பரு, எண்ணெய்ப் பிசுபிசுப்பான சருமம், மரு போன்ற பிரச்சினைகள் இருந்தால் என்ன செய்யலாம்.

அழகு டிப்ஸ்

வாணலியை சூடு செய்து (அடுப்பை அணைத்துவிட்டு) அதில் வெள்ளரி விதைகளைப் போட்டு வறுத்து அதை பொடி செய்து கொள்ள வேண்டும். அதில் சம அளவு எலுமிச்சைச் சாறு, புதினா சாறு சேர்த்து குழைக்க வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி உலரும் வரை வைத்திருந்து கழுவி விட வேண்டும்.

உணவு டிப்ஸ்

வெள்ளரி, காப்சிகம், கேரட், தக்காளி, நூல்கோல் (தலா 1), வால்நட், பாதாம் பருப்பு, 12 மணி நேரம் ஊற வைத்த வேர்க்கடலை, எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு, புதினா, கொத்தமல்லித் தழை, பொடித்த மிளகு கால் டீஸ்பூன், கொஞ்சம் உப்பு சேர்த்து மொத்தமாக கலக்கி மாதம் 2 முறை மதிய உணவுக்கு 2 மணி நேரம் முன்பு சாப்பிட்டால் போதும். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பதுடன் தோலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பளபளப்பாக இருக்கும்.

பேஸ்பேக் (Face Pack)

அழகு

கொண்டைக் கடலையை வெயிலில் காய வைத்து மெஷினில் அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் ஆரஞ்சு சாறு கலந்து முகம், கழுத்தில் பூசி உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவினால், தோலின் ஆழம் வரை சென்று “இறந்த செல்களை” நீக்கி புதுப்பொலிவை தோலுக்குத் தரும்.

உணவு.

பேரீச்சம் பழம், தக்காளி, சம அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து மிளகு, இஞ்சி சாறு, கல் உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த ஜுஸை வாரம் ஒருமுறை குடித்தால் செல்கள் புத்துணர்வு பெறும்.

புரதம், இரும்புச் சத்துக் குறைபாடுடையவர்கள், பாசிப் பருப்பை சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் அல்லது கருப்பட்டியை சம அளவு எடுத்து பாகு காய்ச்ச வேண்டும்.

பாகு, பாசிப் பருப்பு இரண்டையும் கலந்து சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து உருண்டை செய்து வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும்.

வெயிலில் அதிகம் சுற்றிவிட்டு அல்லது தொடர்ந்து நிறைய வேலை காரணமாக அயர்ச்சியாக இருந்தால் அந்தச் சமயத்தில் எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். உடனடியாக புத்துணர்வு கிடைக்கும்.

நவரத்தின சுண்டல்

பாசிப் பயறு, தட்டைப் பயறு என்று 9 வகை பயறுகளை சம அளவில் எடுத்து குக்கரில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் 6 எலுமிச்சை பழங்களை ஜுஸ் எடுத்து ஒரு பச்சை மிளகாயுடன் மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்க்க வேண்டும். இதோடு பச்சை தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை, பனங்கற்கண்டு சிறிது சேர்த்து கலக்க வேண்டும்.

பழச்சாறு

லேசாக வேக வைத்த ஒரு கேரட்டை மிக்ஸியில் அரைத்து ஜுஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை சாறு, புதினா சாறு, இஞ்சி சாறு, தேன் கலந்து குடிக்க வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து ஒரு டம்ளர் இருக்க வேண்டும்.
இதை முறையாக பின்பற்றினால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து ஆரோக்கியத்துடன் இருக்கலாம், அழகாகவும் ஜொலிக்கலாம்.

ஆயுர்வேதம்.காம்

Spread the love