‘மெய்’ அழகை பேணுவோம் ‘பொய்’ அழகை புறக்கணிப்போம்

Spread the love

அழகாய் இருக்க ஆசைப்படாதவர்களே கிடையாது. இதில் ஆண், பெண் வித்தியாசமில்லை. பெண்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதற்கு காரணம் சமூகம்தான். பெண் என்றால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதில்லை. அழகாக இருக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறது. விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டாலும், ‘அழகிகள் கைது’ என்றுதான் செய்தி வெளியிடுவார்கள். அந்தப் படத்தை பார்த்தாலே தெரியும்.. (தற்போது படங்கள் வெளியிடப்படுவதில்லை.) அவர்கள் அழகிகளா, இல்லை வாழ்க்கையை தொலைத்த அகதிகளா என்று. உடல் சுத்தமும், ஆரோக்கியமும்தான் பெண்ணுக்கு அழகு. செயற்கை பூச்சுகளும், பியூட்டி பார்லர்களும் அநாவசிய செலவு.

பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற திணிப்பு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு இனிப்பாக மாறி விட்டது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவர்கள் ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் செயற்கை க்ரீம்கள், செயற்கை பூச்சுகள் என்று தயாரித்து தள்ளுகிறார்கள். 3 நாளில் முக அழகு.. ஒரு வாரத்தில் உடலழகு என்று கோடிக் கணக்கில் விளம்பரம் செய்கிறார்கள். அந்த மொத்த செலவையும் சேர்த்து நம் தலையில் கட்டி விடுகிறார்கள். நாமும் நம்முடைய பணத்தை காலி செய்து அவர்கள் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறோம்.

செயற்கை அழகு சாதனப் பொருட்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது அவற்றில் கலந்திருக்கும் ரசாயனப் பொருள்கள், பலவித சரும நோய்களை உருவாகக்கூடியவை. நாம் காசு கொடுத்து சரும நோய்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறோம். முடித் தொல்லையில் ஆரம்பித்து, முகம், சருமம், பாதம் வரை ஏற்படும் பல பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் ஒரே மருந்து நாம் உட்கொள்ளும் உணவுதான். மருந்தே உணவு. உணவே மருந்து. இந்த ரகசியம் பலருக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் விளம்பர மாயவலையில் சிக்கி ஆரோக்கிய சீர்கேடு எனும் படுகுழியில் விழுகின்றனர்.

ஆண், பெண், சிறுவர் முதல் பெரியவர் வரை இன்றைக்கு அச்சுறுத்தும் வார்த்தை மன அழுத்தம். முடி உதிர்தல், சரும நோய்கள் எனப் பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தம்தான் காரணம் என்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவ முறைப்படி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்கள்தான் உடலின் சமநிலையைத் தீர்மானிக்கின்றன. உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பவை இவைதான். கூந்தல் வளத்தை நிர்ணயிப்பது வாதம் மற்றும் பித்த தோஷங்களின் அளவுதான். சருமத்தின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது பித்தத் தோஷம்.

மனஅழுத்தம் ஏற்படும்போது வாதமும் பித்தமும் வேகமாக அதிகரிக்கும். இந்த நிலையில்தான் கூந்தல் உதிர்தல், தலையில் பொடுகு, முகத்தில் கருவளையம், ஆங்காங்கே கறுப்புத் திட்டுகள், சரும வறட்சி போன்ற சிக்கல்கள் ஏற்படும். பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகைகள், தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்,-கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் சாதாரணமாக இந்தச் சிக்கல்களை சரி செய்யலாம்.

செம்பருத்தி இலை, புங்க மரத்தின் காய், சீயக்காய் ஆகியவற்றை தலையில் தேய்த்து குளிப்பதுதான் நல்லது. கண்ட கண்ட ஷாம்பை தலையில் தேய்த்து குளிப்பது கேடு. இதை உணர வேண்டும். நம் ஆரோக்கியம் நம் கையில்தான் இருக்கிறது. நிறைய பேர் இதை தவறாக புரிந்து கொண்டு ஆரோக்கியம் கடையில்.. செயற்கை பொருளில் இருக்கிறது என்று ‘கை’க்காசை தண்டத்துக்கு செலவு செய்து உடலை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Spread the love