எலும்புகள் வலுப்பெற பச்சை அவரை

Spread the love

பச்சை அவரை என்று சொன்னதும் நமக்கு தெரியாத காயாக உள்ளதே என்று எண்ண வேண்டாம். நம் ஊரில் பீன்ஸ் அல்லது முருங்கை பீன்ஸ் என்று அழைக்கப்படும் காயே பச்சை அவரை ஆகும்.

இது ஆங்கிலத்தில் பைன் பீன், பிரெஞ்சு பீன், ஸ்டிரிங் பீன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பச்சை அவரையில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

அடர் பச்சை, இளம் பச்சை, கருஊதா, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் உள்ளன. இவை உலகெங்கும் பரவலாக பயன்படுத்தக் கூடிய பிரபலமான காய்கறிகளில் ஒன்று.

அமைப்பு

பச்சை அவரையானது கொடி வகைத் தாவரத்திலிருந்தும் பெறப்படுகின்றது.

தாவரம்

குற்றுச்செடி வகை பச்சை அவரைத்தாவரமானது 2 அடி உயரம் வரை வளரும். இது வேகமாக வளர்ந்து பயனளிக்கக் கூடியது. வியாபார ரீதியாக இவ்வகை பச்சை அவரை தாவரமே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

கொடி வகைத்தாவரமானது பந்தலிடப்பட்டு வளர்க்கப்படுகின்றது. இவை குற்றுச்செடி வகைத் தாவரத்தைப் போல வேகமாக வளருவதில்லை.

பச்சை அவரையின் விதைகள் நன்கு விளைவதற்கு முன்பே பச்சை அவரைகள் பறிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இதனுடைய அறிவியல் பெயர் ஃபாசிலோஸ் வல்காரிஸ் என்பதாகும்.

வரலாறு

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே மீசோ அமெரிக்காவில் இது பயிர் செய்யப்பட்டது. மெக்ஸிகோ, குவாத்தமாலா மற்றும் ஹோண்டுராஸ் உள்ளிட்ட இடங்களில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது.

பின் அது அமெரிக்கா முழுவதும் பரவியது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதலில் கொடி வகை பச்சை அவரையை கண்டறிந்து இதனை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

தற்போது சீனா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், துருக்கி, எகிப்து, மொராக்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் மெக்ஸிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட வடஅமெரிக்க நாடுகளிலும் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்

பச்சை அவரையில் விட்டமின் ஏ,சி,கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்) ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், சிலிக்கான் போன்ற தாதுஉப்புகள் உள்ளன.

பச்சை அவரையில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, ஆல்பா மற்றும் பீட்டா கரோடீன்கள், லுடீன் சீதாக்ஸைன் உள்ளிட்டவைகளும் காணப்படுகின்றன.

மருத்துவ பண்புகள்

இதய நலத்திற்கு பச்சை அவரையில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் உடலில் சேருவதைத் தடுக்கிறது. மேலும் இக்காயில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தை மேம்படுத்துகிறது.


Spread the love