குளிங்க மேடம் குளிங்க..

Spread the love

ஆதிமனிதன் இயற்கையாக தினசரி குளிப்பது, நாட்கள் செல்ல செல்ல சமயம் சார்ந்த சடங்காகவும் மாறியது. கோவிலுக்குச் செல்லும் முன்பு, பூஜை செய்வதற்கு முன்பு என்பதுடன் உணவு உட்கொள்ளும் முன்பு குளிப்பது என்பது வழக்கமாகி விட்டது. நாகரிகம் வளர்ந்து இன்றைய காலகட்டத்தில் வெறும் தண்ணீரில் முங்கி குளிப்பது என்பதும் முடிந்து, தோலை நன்றாக தேய்த்து குளிக்க சாதாரண வாசனை மற்றும் மருந்துக் கலவை சார்ந்த சோப்புகளையும், எண்ணெய்களையும் உபயோகித்து குளிக்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே கூறியது போல தோலின் அடியிலுள்ள மயிர்கால்களைச் சுற்றியுள்ள கொழுப்புச் சுரப்பிகள், மயிர் கால் துவாரங்களின் வழியாக மேலே வருகிறது. இந்த சுரப்பினால் தான் தோல் வறண்டு போகாமல் மழுமழுப்பாக உள்ளது. அதிக கொழுப்பு சுரந்தால் தோலின் மேலே படிந்து விடுகிறது. மேலும் தோலின் இறந்த செல்களும், வியர்வையாக தேவையில்லாத உடல் அசுத்தங்களும் சேர்ந்து விடுகிறது. அழுக்கு வெளிப்புற துரும்பு, தூசி, புழுதியினால் தோலின் மேல் பாகத்தில் படிகின்றது. மேற்கூறிய காரணத்தினால் மேல் தோலின் சருமத்தினை சுத்தப்படுத்துவது அவசியமாகிறது. சருமம் கெட்டால் சகலமும் கெடும். உடம்பில் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணமாகி விடும். எனவே தோலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தினசரி குளியல் அவசியமாகிறது. வெயில் காலத்தில் தினசரி இருமுறை குளித்தால் உடலில் துர்நாற்றம் அவ்வளவாக இருக்காது. ரோமங்கள் படர்ந்துள்ள சருமப் பகுதிகளில் துர்நாற்றம் அதிகம் காணப்படும்.

குளிப்பதற்கு ஏற்ற நீர் வெந்நீரா ? குளிர் நீரா?:

பொதுவாகவெதுவெதுப்பான, இதமான நீர், சிறு குழந்தைமுதல் தொண்டு கிழம் வரை அனைவருக்கும் ஏற்ற ஒன்று. கோடை காலத்தில் குளிர்ந்த நீரில்குளிப்பதால் சுறுசுறுப்பு கிடைக்கும். தூக்கம் வராது தவிக்கும் மக்களுக்கு வெந்நீர்குளியல் பலன் தரும். தலைக்கு மிதமான, குறைவான சூடுடைய நீர் அல்லது தண்ணீரும், கழுத்துக்குக்கீழ் சுடு நீரையும் விட்டுக் குளித்துக் கொள்ளலாம். இதற்கு வசதியாக தனித்தனி வாளிஅல்லது பாத்திரத்தினைப் பயன்படுத்தலாம். வெந்நீரால் கழுத்துக்குக் கீழ் குளிப்பதுபலத்தைத் தரும். வெந்நீரைத் தலைக்கு ஊற்றிக் குளிப்பது கண்களுக்கும், தலைமுடிக்கும்இதமல்ல என்று ஆயுர் வேத ஆசான் வாஹபட்டர் கூறுகிறார்.

 மிகவும்குளிராகவும், மிகவும்சூடாகவும் உள்ள தண்ணீர் கூடாது. கோடை காலம், காற்றுக் காலம், மழைக் காலம், குளிர் காலம் என்று அந்தந்த காலத்திற்கு ஏற்ப, உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய சரியான அளவு சூடு அல்லது குளிர் உள்ள நீரில் குளிப்பது அவசியம்.குளிர் காலத்தில் இதமாக இருக்கும் என்று அதிக சூடான நீரில் குளிப்பது தவறு.தலையில்நீர்க்கோவை, உடல் வலி, குளிரினைத் தாங்கஇயலாதவர்கள் ஓரளவு சூடுள்ள வெந்நீரில் குளிப்பதுதான் சிறந்தது.

வெயில் காலத்தில்வெந்நீரில் குளிப்பதால் பித்தம் அதிகமாகும். வெந்நீரை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, நமது உடல்தாங்கும் சூட்டுக்கு ஏற்றவாறு ஆற வைத்து குளிக்கலாம். ஆனால் சூடான நீரினை, குளிர் நீரில்விட்டு விளாவுவதைத் தவிர்க்க வேண்டும்.

 தினசரி இரண்டுவேளைக் குளிப்பவர்கள் இரவு வேளையில் மட்டும் விரும்பினால் வெந்நீரில் குளிக்கலாம்.இதன் மூலம் சுறுசுறுப்பும்,இரவு சரியானதூக்கத்தினையும் அளிக்கும். சைனஸ், ஜலதோஷம், காது வலி, தலை வலி, கண் வலியினால் அவதிப்படும் பொழுது தலைக்கு குளிக்கவேண்டாம். தினசரி குளிக்கும் போது சிறிது எண்ணெயை உச்சந் தலையில் சேர்த்துக் கொண்டபின்பு குளிப்பது நல்லது.

குளிப்பதில் எவ்வளவு விசயங்கள் இருக்கு தெரியுமா?

 (1) குளிக்கும் போதுநமது வயிறு காலியாக இருக்க வேண்டும். உணவுக்கு முன்பு குளிக்க வேண்டும். இதற்கு என்னகாரணம்? உணவு உண்டவுடன்குளிப்பதால் தோலின் தட்ப வெப்ப நிலையில் மாறுபாடு அடைந்து, இதன் காரணமாகஜீரணம் பாதிக்கப்படும்.

(2) குளிப்பதற்குமுன் உடுத்தியிருந்த உடையினை குளித்த பின்பு மீண்டும் உடுத்த வேண்டாம்.

(3) உடலை அளவுக்குமீறி தேய்த்து குளிப்பது கூடாது. அதிக நேரம் குளிப்பதும் கூடாது.

(4) ஜலதோஷம், நீர்க் கோவை, நெஞ்சில் சளிகட்டியிருக்கும் சமயம், பேதி, கண், காது நோய்இருக்கும் போதும் குளிப்பதைத் தவிர்க்கவும். தேவையெனில், கழுத்துக்குக்கீழே ஸ்பான்ஜ் அல்லது சிறு துணிகள் மூலம் நீரில் முக்கி ஒத்தடம் கொடுத்து குளியல்எடுத்துக் கொள்ளலாம்.

(5) குளித்த பின்புஈர ஆடைகளுடன் அதிக நேரம் இருக்கக் கூடாது.ஈரமான தலையில் எண்ணெய் தடவுவது, சீப்பால் தலைவாருவது தவிர்க்கவும். மீறினால் முடிச்சுகள் உடைந்து விடும்.

 (6) குளித்தபின் உடல், தலை பகுதிகளைஈரம் போக துவாலையினால் நன்கு துடைத்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான நீரானது சூடானநீரை விட குளிப்பதற்கு நல்லது.

எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற நாட்கள்:

ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக் கிழமையும் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கலாம். சனி பகவான் தமோ குணத்தின் அதிபதி என்பதால் அசதி, சோம்பேறித் தனம் ஏற்படும். எண்ணெய்க் குளியல் முடிந்த பின்பு மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து,அசதியும் உறக்கமும் ஏற்படும்.விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வதில்லை என்பதால் எண்ணெய்க் குளியலுக்கும் ஓய்வைப் பெறுவதற்கும், சனிக்கிழமை ஆண்கள் எண்ணெய் நீராடுவதற்குரிய நாளாக சாஸ்திரம் கூறுகிறது. பெண்களுக்கு சுக்கிரன் உதவி தேவை என்பதால் செவ்வாய், வெள்ளி பெண்களுக்கு உகந்த நாட்கள் ஆகும்.

எண்ணெய்க் குளியலுக்கு கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ்கள்:

  (1) நல்லெண்ணெய்ஒன்றை தான் பயன்படுத்திக் குளிக்க வேண்டும்.

 (2) எண்ணெயைக்காய்ச்சிய பின்பு சருமத்தில் தேய்த்துக் கொள்ளவும். எண்ணெயைக் காய்ச்சும் போதுமிளகு, ஓமம், இஞ்சி, வெந்தயம்சேர்த்துக் கொண்டு காய்ச்சினால் உடலுக்கு வலிமை கிடைக்கும். சளி பிடிக்காது. உடல்சூட்டினைக் குறைக்க நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கொம்பரக்கும் சேர்த்துக்கொள்ளலாம்.

(3) எண்ணெய்க்குளியலை வெந்நீரில் தான் செய்ய வேண்டும்.

 (4) எண்ணெய்த்தேய்த்துக் குளித்த அன்று உடலுறவு தவிர்க்க வேண்டும்.

தோலில் தேய்த்த எண்ணெய் உள்ளே பரவும் வேகம்:

 தோலில் தேய்த்துவிடும் எண்ணெயின் வழவழப்பும், நெகிழ்ச்சியும் உடலின் உள்ளே பரவிட மொத்தம் 25 நொடிகளைஎடுத்துக் கொள்கிறது என்று ஆயுர்வேதத்தின் ஆசான் சுச்ருதர் கூறுகிறார். உடலில்எண்ணெய்த் தேய்த்தவுடன் மேல்தோலில் ஒன்றரை நொடிகளிலும் உள்தோலில் 2 நொடிகளில்ஊடுருவி விடும். உடலில் உள்ள தசை, எலும்பு, மஜ்ஜை போன்றவற்றில் அடுத்து வரும் நொடிகளில் சென்றடைந்துவிடும். மனிதருக்கு மனிதர் எண்ணெய் ஊடுருவும் வேகம் மாறுபடும்.

மசாஜ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்:

மசாஜ் என்பதுமூலிகை எண்ணெயை இளஞ்சூட்டில் உடலில் தடவி, மேலும் கீழுமாக, ஒரு சில இடங்களில் கீழ் மேலாகவும் உருவித் தேய்த்து விடுவதுஆகும். மசாஜ் செய்வதில் நல்ல அனுபவம் பெற்றவர் செய்தால் உடலிலுள்ள தசை வலிகள்நீங்கும் என்பதுடன் சுகமாகவும் இருக்கும். தசைகளிலிருக்கும் வாதம் காரணமாக வலிதோன்றும். சோர்வு ஏற்படும். சருமத்தில் உணர்ச்சியற்றுக் காணப்படும். தசையும், சுருக்கம்அடையும். மேற்கூறிய சிக்கல்களை குணப்படுத்த மீண்டும் புத்துணர்ச்சி பெற மசாஜ்ஒன்று தான் வழியாகும். மசாஜ் செய்வதனால் இறுகிய தசை நார்கள் தளர்வு ஏற்படும். தோல்மேல் பகுதி கொழுப்பு மற்றும் இதரக் கழிவுப் பொருட்களும் வெளியேறும். உறக்கமும்தங்கு தடையின்றி ஏற்படும். நல்ல தூக்கம் மற்றும் நோய் நொடிகளினைக் குணப்படுத்ததசைகளின் இருப்பிடம், அமைப்பு, தன்மையினை அறிந்துமசாஜ் செய்ய வேண்டும். விரல்களால் நீவி விடுதல், உருட்டித் தேய்ப்பது போன்ற மசாஜ் வகைகள் நல்லபலனைக் கொடுக்கும். தலையில் மசாஜ் செய்யும் போது வட்டமாக, நிதானமாக முடியைபாகங்களாகப் பிரித்து எண்ணெயை நீவி விடவும்.

 எண்ணெய் தலையில் 30 முதல் 60 நிமிடம் வரை ஊறவேண்டும். குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் மசாஜ் செய்வது அவசியம்.மூலிகை செறிந்த நீலிபிருங்காதி தைலம், நெல்லிக்காயினைச் சேர்த்து தயாரித்த தைலம், ஆர்னிகாவினைஉள்ளடக்கிய தைலம் போன்ற தைல எண்ணெய்கள் மசாஜ் செய்வதற்கு மிகுந்த பலன் தருவதற்குபயன்படுத்தப்படுகிறது.


Spread the love