பிரியாணிக்கு உகந்தது பாஸ்மதியா? சீரக சம்பாவா?

Spread the love

பிரியாணிக்கு உகந்தது

பாஸ்மதியா? சீரக சம்பாவா? 

பாஸ்மதி மற்றும் சீரக சம்பா ஆகிய இரண்டு வகை அரிசியும் பிரியாணி சமைக்க உகந்ததாகும். தென்னிந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பிரியாணி மற்றும் புலாவ் உணவுகளை சமைப்பதற்கு பாஸ்மதி அரிசி அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. பாஸ்மதி அரிசி மற்றும் சீரக சம்பா என எந்த அரிசியில் பிரியாணி சமைக்கும் போதும் மேலோட்டமாக ஒரு முறை மட்டுமே கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் அரிசியின் நறுமணம் தக்க வைக்கப்படுகிறது. இதனை சமைக்கும் முறை பற்றி பார்க்கலாம்.

ஆரோக்கியமான பிரியாணி

எவ்வகை பிரியாணியாக இருப்பினும் சேர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் மாமிச அளவினை அதிகரித்து குறைந்த காரம் சேர்த்து சமைத்து உண்பது மிகச்சிறந்ததாகும். உதாரணமாக ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் காய்கறிகள் சேர்த்து சமைக்கலாம். இவ்வாறு சமைத்து உண்பதால் நமது உடலிற்கு தேவையான சத்துக்கள் சம அளவில் கிடைக்கிறது.

சீரக சம்பா அரிசி

சீரக சம்பா அரிசி தமிழரின் பாரம்பரிய வகையாகும். சுவை மற்றும் தனித்துவம் வாய்ந்த இவ்வகை அரிசி விலையுயர்ந்த இரகமாகும். இவ்வகை நெல் சற்று கடினமாகவும், சமைக்கும் போது மென்மையாகவும் இருக்கும். மேலும் 100 கிராம் சீரக சம்பா அரிசியில் 170 கிராம் ஆற்றல், 3 கிராம் புரோட்டீன், 38 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 2.3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. 

சீரக சம்பா அரிசியை தினமும் உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து முகம் பொலிவு பெறும். மேலும் இது கொழுப்பினை குறைத்து இதயம் சீராக செயல்பட உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு அருமருந்தாகும்.

சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்

சீரக சம்பா அரிசி       –      2 கப்

சிக்கன்                 –     1/2 கிலோ

பச்சை மிளகாய்         –     2

பெரிய வெங்காயம்     –     1

தக்காளி                 –     1

மிளகாய் தூள்          –     1 டீஸ்பூன்

மஞ்சள் தூள்            –     1/2  டீஸ்பூன்

தனியா தூள்             –     1 டீஸ்பூன்

நெய்                   –     1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது   –     2 டீஸ்பூன்

கிராம்பு, ஏலக்காய்       –    2

பட்டை, பிரியாணி இலை –   1

எண்ணெய், கொத்தமல்லி இலை மற்றும் உப்பு தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிக்கனை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்த கலவை, கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவை, உப்பு, தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் குக்கரில் சிறிது நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும். பின் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரிசியை சேர்த்து கலக்கி விடவும். பின் உப்பு மற்றும் காரம் சரிபார்த்து குக்கரை விசில் போட்டு மூடி பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். இதனை தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம். சுவையான சீரக சம்பா சிக்கன் பிரியாணி தயார்.

குறிப்பு

சீரக சம்பா அரிசியை சமைக்கும் முன் 15 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். மேலும் 1 கப் அரிசிக்கு, 2 கப் தண்ணீர் என்ற அளவில் ஊற்றவும்.

பாஸ்மதி அரிசி

பாஸ்மதி அரிசி மிகுந்த சுவை மற்றும் மணமுடையதாகும். இது நீளமாக காணப்படும். இவ்வகை அரிசியிலும் பல இரகங்கள் உண்டு. பாஸ்மதி அரிசியில் செயற்கை வண்ணங்கள் மற்றும் பாதுகாப்பு சேர்மானங்கள் போன்றவை சேர்க்கப்படுவதில்லை.

இவை சமைக்கும் போது ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதில்லை. எளிதில் செரிமானமாகும் தன்மையுடையது. இவற்றில் பிரவுன் நிற அரிசியில் அதிகளவு நார்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. பாஸ்மதி அரிசியில் சமைக்கும் பிரியாணி மிகுந்த சுவை மற்றும் மணமுடம் இருக்கும்.

சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி         –      2 கப்

சிக்கன் (பெரிய துண்டு) –      1/2 கிலோ

பச்சை மிளகாய்         –      3

பெரிய வெங்காயம்     –      2

தக்காளி                 –      2

மிளகாய் தூள்          –      1/2 டீஸ்பூன்

சிக்கன் மசாலா         –      1/2 டீஸ்பூன்

நெய்                  –      1 டீஸ்பூன்

தயிர்                   –      1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது    –      3 டீஸ்பூன்

புதினா இலை                        –    1 கைப்பிடி

கொத்தமல்லி இலை          –     1 கைப்பிடி

எண்ணெய்                         –      2 டீஸ்பூன்

கிராம்பு, பட்டை       –     5

ஏலக்காய்                                     –     2

பிரியாணி இலை                  –     2

உப்பு தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிக்கனை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். பின் பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். இவை காய்ந்ததும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

பின் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இவை வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கிய பின் புதினா, கொத்தமல்லி இலை, தயிர் சேர்த்து நன்கு கிளறி சிக்கனை சேர்க்கவும்.

பின் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், சிக்கன் மசாலா சேர்த்து 15 நிமிடங்கள் சிம்மில் வைத்து நன்கு வதக்கவும். 1 கப் அரிசிக்கு, 2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த அரியை சேர்க்கவும். இதனை சிம்மில் வைத்து வேக விடவும். 10 நிமிடம் கழித்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

சுவையான சிக்கன் பிரியாணி தயார்.

பாஸ்மதி அரிசி சாதம்

சமைக்கும் முறை

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி   –     1 கப்

தண்ணீர்           –     2 கப்

நல்லெண்ணெய்  –     1 டீஸ்பூன்

தேவையான அளவு உப்பு

செய்முறை

அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்க்கவும். பின் அரிசியை சேர்த்து கொதித்தவுடன் சிம்மில் வைத்து பாத்திரத்தை மூடவும். 7-9 நிமிடங்களில் அரிசி நன்கு வெந்து காணப்படும். பின் சிறிது நேரம் கழித்து சாதத்தை பரிமாறலாம். சுவையான பாஸ்மதி அரிசி சாதம் தயார். 

குறிப்பு

இதில் உப்பு சேர்க்காமலும் சாதம் சமைக்கலாம். நல்லெண்ணெய் சேர்ப்பதால் சாதம் ஒட்டுவதில்லை. அடிக்கடி கிளறி விட்டு அரிசி குலைந்து விடாமல் தண்ணீர் முழுவதும் வற்றியதும் இறக்கவும்.

பாஸ்மதி மற்றும் சீரக சம்பா ஆகிய இரண்டு வகை அரிசியிலும் உடலிற்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இவற்றில் எது விருப்பமோ அவ்வகை அரிசியில் பிரியாணி சமைத்து உண்ணலாம்.


Spread the love
error: Content is protected !!