வாழ்நாள் உயர வாழைப்பூ

Spread the love

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானவை. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டவையாக இருக்கும்.

வாழைப் பூவை சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்துவது தான் நமது தமிழ்க் குடும்பங்களுக்கு தெரிந்த விஷயம். ஆனால் இந்த வாழைப்பூவுக்கு மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளன.

வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து எடுத்து, இடித்து சாறு பிழிந்து, அந்தச் சாற்றை இரண்டு அவுன்ஸ் எடுத்து 100 மில்லி தயிரில் கலந்து காலை, மாலை என இரு வேளைகள், மூன்று நாட்கள் கொடுக்க கட்டுப்படாத சீதபேதி முற்றிலுமாக கட்டுப்படும்.

வாழைப்பூவுடன், சம அளவு கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து தயிரில் கலந்து கொடுத்தாலும் சீதபேதி குணமாகும்.

குடல் புண் இருந்தால், அன்றாட உணவில் வாழைப்பூ கூட்டு, வாழைப்பூ வடை போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புண் ஆறிவிடும்.

வாழைப்பூவை ஆய்ந்து எடுத்து இடித்துச் சாறு எடுத்து, இரண்டு அல்லது மூன்று கிராம் அளவுக்கு கடுக்காயைத் தூள் செய்து அந்தச் சாற்றில் கலந்து காலையிலும், மாலையிலும் ஏழு நாட்கள் குடித்து வர ஆசனக் கடுப்பு மற்றும் மூலச்சூடு அகலும், தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

கடுமையான மூல நோய்க்கு, வாழைப்பூவை ஆய்ந்து தேவையான அளவு எடுத்து சம அளவு கருணைக்கிழங்கு சேர்த்து கூட்டு செய்து அன்றாட உணவில் தொடர்ந்து சாப்பிட மூலம் மற்றும் இரத்த மூலம் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது, சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வர கணையம் வலுப்பெறும். வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வர கை கால் எரிச்சல் குணமாகும்.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வர உடல் சூடு தணியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க, வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வர வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான குறுத்துப் பகுதியை எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வர, அதிக உதிரப்போக்கு கட்டுப்படும், மலட்டுத்தன்மை நீங்கும். . உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும். வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வர பெண்களின் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ ரசம் அருந்திவரஇருமல் நீங்கும். தாது விருத்திக்கு வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வர தாது விருத்தியடையும்.

மொத்தத்தில் வாழைப்பூ ஓர் ஒப்பற்ற, அதே சமயம் நிராகரிக்கப்பட்ட காய்கறி. எனவே நம் வாசகர்கள் இனி வரும் நாட்களில் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு தங்கள் வாழ்நாளை உயர்த்திக் கொள்ள வேண்டுகிறோம்!

தங்கள் நலன் கருதி,

ஆயுர்வேதம் டாக்டர். எஸ்.செந்தில் குமார்.


Spread the love