மா, பலா, வாழை என்று அழைக்கப்படும் முக்கனிகள் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் பயன்படுகிறது. அதிலும், மாங்காய், பலாக்காய், வாழைக்காய் சமையலிலும், பழங்கள் நேரிடையாக உண்ணத்தக்கதாகவும் அமைகிறது. வாழைப்பழங்களில் மனிதனின் வளர்ச்சிக்கு, நோய் எதிர்ப்புச் சக்திக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன. வருடத்தின் அனைத்து மாதங்களிலும் கிடைக்க்கூடிய பழவகைகளில் வாழைப்பழமும் ஒன்று. ஏழைகளின் பழம் என்று அழைக்கப்படும் வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் சிறந்த பலன்களை தருகிறது.
ரஸ்தாளி வாழைப்பழம்
சுவை மிகுந்தது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது. இதயத்திற்கு பலம் தரும்.
பூவன் வாழைப்பழம்
எல்லா இடங்களிலும் பொதுவாக கிடைக்கக் கூடியது. செரிமான சக்தியை ஏற்படுத்தும். தினசரி உணவுக்குப் பின்னர் பூவன் வாழைப்பழம் ஒன்றிரண்டு உண்டு வர மலச்சிக்கல் ஏற்படாது.
நேந்திரம் வாழைப்பழம்
கேரளாவில் அதிகம் விளையக்கூடியது. கேரள மக்களால் விரும்பி உண்ணப்படும் பழம். நேந்திரம் காய் சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது. காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு நேந்திரம் பழமும் ஒரு முட்டையும் உணவாக சாப்பிட்டு வர காச நோய் குணம் பெறுவதுடன் உடல் பருமன் பெறும்.
சிறு குழந்தைகளுக்கு(ஆறு மாதத்திற்கு மேல் உள்ள) நன்றாக பழுத்த நேந்திர பழத்தை சிறிது உப்பிட்டு வேக வைத்து, நன்றாக பிசைந்து தரலாம். இது ஊட்டச்சத்துகள் நிறைந்தது. செரிமானம் பெற சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த ஒன்றாகும்
மொந்தன் வாழைப்பழம்
உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தருவதுடன் மஞ்சள் காமாலை குணம் பெற மொந்தன் வாழைப்பழம் உண்டு வரலாம்.
பச்சை வாழைப்பழம்
உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் உடல் உஷ்ணத்தை குறைக்கும். வாத நோயாளிகள் அதிகம் உண்ணக் கூடாது. கோடைகாலங்களில் சாப்பிடுவதற்கு ஏற்றது.
செவ்வாழைப்பழம்
உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பருமன் அடைவார்கள். வைட்டமின் சத்துகள் அதிகம் இருக்கின்றது. இதனால் கண்ணுக்கு பலம் தரும். சரும நோய்களை குணப்படுத்தும். நரம்பு தளர்ச்சி குணமாகும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கேரளாவிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அதிக அளவு பயிரிடப்படுகிறது.