வாழைப்பழம்

Spread the love

உலகிலேயே அதிகளவு பயன்படும் பழம் வாழைப்பழம் தான். எங்கேயும் எப்போதும் கிடைக்கும் எளிமையான வாழைப்பழம் ஒரு பரிபூரண உணவு. வாழைப்பழம், வாழைத்தார் (குலை), குலை தள்ளிய வாழை மரம், வாழை இலை இவை இல்லாத கல்யாணமோ, மற்ற மங்கல நிகழ்ச்சிகளோ கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக வாழைப்பழம் உண்ணலாம். எந்த வித கிருமிகளும் தாக்காத படி சுகாதாரமாக தோலினால் மூடப்பட்டு, கழுவத் தேவையில்லாமல் உடனடியாக உட்கொள்ளும்படியான பழம் வாழைப்பழம். மற்ற பழங்களை விட அதிகமாக, வாழைப்பழம் உலகெங்கும் 132 தேசங்களில் பயிரிடப்படுகிறது. உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்ற பழங்களில் முதன்மையான பழம் வாழைப்பழம். முதலில் மலேசியாவில் தோன்றி அங்கிருந்து இந்தியா வந்தடைந்ததாக தெரிகிறது. புத்தமத ‘பாலி’ மொழி குறிப்புகளில் (கி.மு. 6 ம் நூற்றாண்டு) வாழைப்பழம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கி.மு, 327 ஆண்டுகளில் இந்தியா மீது படையெடுத்து வந்த மகா அலெக்ஸாண்டர் இந்தியாவின் வாழைமரங்களையும், வாழைப்பழத்தின் சுவையையும் கண்டு வியந்து, தன்னுடன் சில வாழைப்பழங்களையும், கன்றுகளையும் கீரிஸ் நாட்டிற்கு கொண்டு சென்றார். அவர் தான் வாழையை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்ததாக புகழப்படுகிறார். யாங்ஃபூ என்னும் சீன சரித்திரையாளர், 200 கி.பி. வருடங்களில், தென் சீனாவில் மட்டும் வாழைமரம் விளைந்ததாக கூறுகிறார்.

சீனர்களால் அற்புதமான, அபூர்வமான பழமாக வாழைப்பழம் கருதப்பட்டாலும், 20 ம் நூற்றாண்டில் தான் முழுமையாக சீனாவில் பரவியது. இப்படி அப்படியாக தென்ஆப்ரிக்க தீவான ‘மடகாஸ்கரை’ வாழைப்பழம் சென்றடைந்தது.

இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்த அரேபியர்கள் தான், இந்தப் பழத்தை இந்தியாவிலிருந்து எகிப்து, ஆப்பிரிக்காவிலும் அறிமுகப்படுத்தினார்கள். கி.பி. 650 ஆண்டுகளில் அரேபியர்கள் ஆப்ரிக்காவின் மத்திய தென்பகுதிகளில், தீவிரமான அடிமைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

யானைத் தந்தம், வாழைப்பழம் இவற்றை பண்டமாற்று பொருட்களாக பயன்படுத்திய அரேபிய ‘அடிமைத்தொழில்’ வியாபாரிகளின் பல மேற்குதிசை பயணங்களின் காரணமாக வாழை சிறிய மேற்கு ஆப்ரிக்க பிரதேசமான கினியா சென்றடைந்தது. கி.பி. 1402 ல் போர்ச்சுகீசிய மாலுமிகள் தங்கள் ஆப்ரிக்க பயணங்களின் போது வாழைப்பழங்களை பார்த்து, அவற்றை கனாரி தீவுக்கு கொண்டு சென்று பயிரிட்டார்கள். கி.பி. 1516 ம் வருடங்களில் தோமாஸ் டி பெர்லாங்கோ என்ற போர்ச்சுகீசிய பாதிரி கானாரி தீவுகளிலிருந்து வாழை மரத்தை, மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான சாண்டோ டொமிங்கோக்கு கொண்டு சென்றார். இங்கிருந்து மத்திய அமெரிக்கா தேசங்களுக்கு வாழை பரவியது.

அரேபிய மொழியில் கை விரலுக்கு பனானா என்று பெயர். அந்த காலத்தில் கிடைத்த வாழைப்பழங்கள் சிறியதாக கைவிரல் அளவுக்கு இருந்தால், அரேபியர்கள் பேனன் என்று வாழைப்பழத்தையும் குறிப்பிட்டனர். தற்போது அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் வாழைப்பழம் 8 – 12 அங்குலம் அளவில் பெரியவை! வாழைப்பழத்தின் மற்றொரு ஆங்கிலப் பெயரான ப்ளான்டெயின் என்பது ஸ்பெயின் மொழியில் வாழைப்பழத்தின் பெயரான ப்ளான்டோவிலிருந்து மருவியது. அமெரிக்கர்கள் முதன் முதலாக வாழைப்பழத்தை சுவைத்தது. கி.பி. 1876 ல் தான். இன்று அமெரிக்கா தான் உலகிலேயே அதிகமாக வாழைப்பழத்தை உபயோகிக்கும் நாடு. அமெரிக்காவிற்கு அடுத்தபடி ஜெர்மனி. வாழை ‘மரம்‘ என்பதே விஞ்ஞான ரீதியாக தவறு! வாழை மரமல்ல! அது ஒரு மூலிகை தாவரம். அதுவும் உலகிலேயே பெரிய மூலிகை செடி! என்கிற குடும்பத்தை சேர்ந்தது. வாழை ‘மரம்‘ போல் உயரமாக வளர்வதால் மரமாக கருதப்படுகிறது. எனவே, வாழை ‘கிழங்கு’கள் மூலமாக நடப்படுகிறது. வாழை குலை போட்ட பின் கிழங்கிலிருந்து அடுத்த கன்று வளரும். குலை தள்ளி காய்ந்ததும் தாய்மரம் சாய்ந்து விடும். வாழை 2 – 8 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் 3.5 மீட்டர் வரை நீளமாக இருக்கும். வாழைக்குலையில், ஒரு சீப்பில் 20 காய்கள் வரை இருக்கும். தாரில் (குலையில்) 3 – 20 சீப்புகள் இருக்கலாம்.

வாழையின் வகைகள்

பூவன், ரஸ்தாளி, கற்பூரவல்லி, பச்சை வாழை, மொந்தன், நேந்திரன், செவ்வாழை, மலைப்பழம், பேயன் போன்றவை. உலகத்திலேயே அதிகமாக வாழை விளைவது இந்தியாவில் தான். உலக உற்பத்தியில் 23% இந்தியாவின் பங்கு. இதில் அதிகமாக உள்நாட்டு தேவைக்கே வாழை பயனாகிறது. ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பாகம், ஈக்வேடார், கோஸ்டாரிகா, பிலிப்பைன்ஸ் மற்றும் கொலம்பியா இந்த நான்கு நாடுகளால் செய்யப்படுகிறது. இதனால் சில தென், மத்திய அமெரிக்க தேசங்கள் “பனானா குடியரசுகள்” என்று குறிப்பிடப்படுகின்றன.

உணவில் வாழை

வாழைக்காய் சாம்பாரில், கறிகள் போன்றவற்றில் உருளைக்கிழங்கு போல் உபயோகப்படுகிறது. மெல்லியதாக சீவி, எண்ணெய்யில் வறுத்தும் செய்யலாம். பிஞ்சு வாழைக்காய் பத்தியத்திற்கு உபயோகிக்கப்படுகிறது. நீளவாக்கில் சீவப்பட்டு வாழைக்காய் ‘பஜ்ஜி’ போன்ற சிற்றுண்டிகளில் பிரமாத ருசியுடன் பயன்படுத்தப்படுகிறது. பழுக்காத வாழைக்காய்கள் உலகெங்கும் சமையலில் மாவுச்சத்து தேவைக்கு பயன்படுகிறது. வாழைக்காய் வாயுவை கிளப்பி விடும் என்று பலர் நம்புவதால், அதை வறுத்து செய்வது அல்லது இஞ்சி, பூண்டு போன்றவற்றை சேர்த்து சமைப்பது நல்லது. இதனால் வாயுத்தொல்லை நேராது. வாழைக்காய் பல வித பரிமாணங்களில் இந்தியா முழுவதிலும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. வாழையின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது.

வாழைப்பூ

வாழைப்பூவை கைகளால் சிறிது தேய்த்து, பூக்களில் உள்ள காளான் எனப்படும் நடுக்காம்பை நீக்கி பருப்புடனோ இல்லை வெறும் கறியாகவோ சமைத்து சாப்பிடப்படுகிறது. வங்காளம், கேரளா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழைப்பூ சமையலில் பயன்படுத்தப்படுகிறது. பல மருத்துவ குணங்களுடையது வாழைப்பூ. வாழைப்பூவை பிரித்த பின் கடைசியில் பிஞ்சு போன்ற உள்பாகம் கிடைக்கும். இதை அப்படியே சாப்பிடலாம். சுவை மிக்கது.

வாழைத்தண்டு

இதை வாரம் ஒரு முறையாவது சமையலில் சேர்ப்பது, தென்னிந்தியாவில் வழக்கம். சிறுநீரக கோளாறுகளுக்கு நல்லது. பர்மாவின் (மியான்மார்), மோஹிங்கா என்ற உணவு வாழைத்தண்டால் செய்யப்படுகிறது.

வாழை இலை

இலைகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடன், பெரிதாக, தண்ணீரில் நனைக்க முடியாத படி இருக்கும். கல்யாணம் மற்றும் எல்லா வித நிகழ்ச்சிகளுக்கும் வாழை இலை தான் தட்டாக பயன்படுகிறது. ஹோட்டல்களில் கூட உணவு, சிற்றுண்டி இவைகளை வட்டமாக கத்தரிக்கப்பட்ட வாழை இலை தட்டின் மீது வைத்து, இலைகளின் மேல் பரிமாறப்படுகிறது. வாழை இலை மேல் சாப்பிடுவது சுகாதாரமானது. பலகாரங்கள், உணவு இவற்றை பேக் செய்யவும் இலை பயன்படும். வாழை இலைக்காகவே சில விவசாயிகள் வாழையை பயிரிடுகிறார்கள்.

வாழையின் மருத்துவ பயன்கள்

வாழைப்பழமே ஒரு பரிபூரண பழம் என்பதால், வாழைப்பழம் சமையலில் அதிகம் உபயோகிப்பதில்லை. ‘மில்க்ஷேக்‘, பாயசங்கள், பஞ்சாமிர்தம் இவைகளில் வாழைப்பழம் பயன்படுகிறது.

சமைத்த வாழைக்காய் ரத்த விருத்தியை உண்டு பண்ணும். பசியை தூண்டும்.

இது பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு நல்லது. இதைக் கொண்டு செய்யப்படும் வடை உடலுக்கு நல்லது. தாதுவிருத்தி பெருகும். நீரிழிவு நோய்க்கு நல்லது. பத்திய உணவுக்கு ஏற்றது.

தீக்காயங்களுக்கு பட்டையின் சாறு நல்ல மருந்து. வாழைப்பட்டையால் சுற்றி வைக்கப்பட்ட மூலிகைகள் ஃப்ரிட்ஜில் வைத்தது போல் பசுமையாக இருக்கும்.சிறுநீரக கற்களை அகற்ற நல்ல மருந்து. சிறுநீர் தடை போன்ற சிறுநீரக கோளாறுகளுக்கு நல்லது. குடல் கோளாறுகளை நீக்கும்.

அடிக்கிழங்கு

வாழைத்தண்டின் குணங்களே அடிக்கிழங்குக்கும் உண்டு. இதிலிருந்து எடுக்கப்படும் சாறு, ஒரிஸ்ஸா மாநிலத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக உபயோகிக்கின்றன.

வாழைப்பழம்

எளிதில் ஜீரணமாவதால், நோயாளிகளுக்கும் நல்லது. பித்தத்தை போக்கும்.

மலத்தை இளக்கும். குடல் புண்ணை ஆற்றும் வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. மலச்சிக்கலை போக்கும். காரணம் வாழைப்பழத்தில் உள்ள பெக்டின். மூலநோய் உள்ளவர்கள் தினசரி சாப்பிட வேண்டும்.

உடனடி சக்தியை கொடுக்கும். அதிக உழைப்பு டென்னிஸ் போட்டிகளில் ஆடும் பிரபல வீரர்களான ஸ்டெஃபிகிராப், போரிஸ் பெக்கர், பீட் சாம்ராஸ் போன்றவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கம். உற்சாகத்தை தூண்டும் பழம் வாழைப்பழம். உடலை பலப்படுத்தும்.

மூளைக்கு நல்லது. ‘செரட்டோனின்’ இருப்பதால் மூளைத்திசுக்களின் செயல்பாட்டுக்கு உதவும். மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் வாழைப்பழத்திற்கு உண்டு.

வாழைப்பழத்திலுள்ள மெக்னீசியம் இதயத்திற்கு நல்லது. இரும்புச்சத்து ரத்த சோகைக்கு நல்லது. பாலில் தேனுடன் வாழைப்பழம் சேர்த்து உண்டால் எடை கூடும்.

செவ்வாழைப்பழம் உயிரணுக்களை பெருக்கும். மாலைக்கண் நோய் சரியாகும்.

ரஸ்தாளி வயிற்றுப்போக்கை நிறுத்தும்.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் மூட்டு நோய்கள், எலும்பு நோய்கள் குறையும்.

காச நோய்க்கு நல்லது.

தினசரி மாலையில் ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தூக்கம் இயல்பாக வரும்.

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு நல்லது.

எச்சரிக்கை

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைப்பழம் நல்லதல்ல. காரணம் அதில் உள்ள பொட்டாசியம், நீரிழிவுநோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்கவும். ஆஸ்துமா நோயாளிகளும் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.

வாழையின் இதர பயன்கள்

வாழைப்பட்டையிலிருந்து நார் எடுத்து துணி நெய்வதுண்டு, வாழை நார், நூல் போல, பூத்தொடுக்க உதவும்.

வாழைப்பழத்தை சாறாக மாற்ற முடியாது. பழக்கூழாகத்தான் மாற்ற முடியும். “ஜாம்“ செய்யலாம்.

வாழைப்பழத்தை குளிர் சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது.


Spread the love