பிறந்த குழந்தை பராமரிப்பு

Spread the love

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே

தாயின் கருப்பையில் இருக்கும்வரை குழந்தைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இருட்டில் இருந்தாலும் பாதுகாப்புடன், தாயின் கதகதப்பை அனுபவித்தபடி ஆனந்தமாக இருக்கும். கருப்பையில் இருந்து வெளியில் வரும்போது புது உலகத்தை அது சந்திக்கிறது. வெளிச்சம், காற்று, சத்தம் என எல்லாமே அதற்கு புது அனுபவம்தான். தொப்புள் கொடியையும் துண்டித்து விடுவார்கள். கருப்பையில் பாதுகாப்பாக இருந்த குழந்தை, வெளியல் வந்ததும் அந்நியமான புறச்சூழலால் மிரள்கிறது. மிரண்டு அழுகிறது. இந்த மிரட்சியைப் போக்கத்தான் குழந்தை பிறந்ததும் தாயின் நெருக்கமான அரவணைப்பில் அதை வைக்கிறார்கள். தாயின் உடம்பு சூட்டில் மீண்டும் கருப்பை வாசத்தை அது அனுபவிக்கிறது.

பிறந்த குழந்தையை கிடத்தும் துணி புதிதாக வாங்கியதாக இருக்க கூடாது. துவைத்து உலர்த்திய மென்மையான துணியாக இருக்க வேண்டும். அந்த துணியில் மடிப்புகளோ, முடிச்சுகளோ இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். குழந்தையின் படுக்கை விரிப்புகள் மெத்தென்று இருப்பது மிகவும் நல்லது.

குழந்தைகளை தூளியில் போட்டு ஆட்டும் பழக்கம் காலம் காலமாக உள்ளது. வசதி படைத்தவர்கள் தொட்டிலில் போட்டு ஆட்டுகிறார்கள். அழுகின்ற குழந்தையை தூளியில் போட்டு ஆட்டினால், அழுகை அடங்கி விடும். தூளியின் ஆட்டம், கருப்பையில் இருந்தபோது அம்மா நடமாடிய பொழுதுகளில் கிடைத்தது போன்ற இதமான அதிர்வுகளை குழைந்தைக்கு கொடுக்கும். தூளியில் போட்டு ஆட்டிக் கொண்டே தாய் பாடும் தாலாட்டு குழந்தைக்கு ஆனந்த சுகத்தை கொடுக்கும். தூளியில் அடிக்கடி போட்டு பழக்குவதால் குழந்தையின் உடலும் நல்ல வடிவம் பெறும். தூளியிலே புரண்டு படுத்து குழந்தை தலையை தூக்கிப் பார்த்தால் மேகக் கூட்டத்தில் இருந்து பவுர்ணமி நிலவு எட்டிப் பார்ப்பது போல தோன்றும்.

இடுப்பு எலும்பு வழியாக பகீரதப் பிரயத்தனம் செய்து வெளியில் வந்த குழந்தைக்கு உடம்பு வலி அதிகமாக இருக்கும். எனவே குழந்தைக்கு மிருதுவான மசாஜ் அவசியம் தேவை. எனவே குழந்தைக்கு உடம்பில் பலா தைலம் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். குழந்தையாக இருக்கும்போது ரெகுலராக மசாஜ் செய்து விடப்படும் குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிட ஆரோக்கியமாகவும், வேகமாகவும் வளர்ச்சி பெறும். எண்ணெய் மசாஜ் செய்வது குழந்தையின் தோலுக்கும் நரம்புகளுக்கும் நல்ல ஊட்டம் தருகிறது. மேலும் தோல் நல்ல நிறம் பெறவும், மிருதுவாக இருக்கவும் உதவுகிறது. எண்ணெய் மசாஜ் செய்து குளிப்பாட்டினால் குழந்தை சுகமாக தூங்கும். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது மிகவும் நல்லது.

மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில்தான் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும். அந்த தண்ணீரில் சந்தனம், நன்னாரி ஆகியவற்றை சிறிதளவு சேர்த்தும் குளிப்பாட்டலாம். குழந்தையின் உச்சந்தலைப்பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். இந்த இடத்தில் குழந்தைக்கு அடி எதுவும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூளி கட்டும்போது இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூளியை ஆட்டும்போது சுவரிலோ அல்லது ஷெல்பிலோ தலை இடிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் தூளி கட்ட வேண்டும்.

குழந்தை பிறந்த 40 நாளுக்கு வெளியில் எங்கும் தூக்கி செல்லக்கூடாது. அதிக வெளிச்சம், அதிக சத்தம், காற்று மாசு போன்றவற்றால் குழந்தை பாதிக்கப்படக்கூடும். குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலை குடிக்க ஆரம்பித்த பிறகுதான் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது என்பதால் இந்தக் கால கட்டத்தில் மிகவும் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது தாய்ப்பாலை நிறுத்தவே கூடாது. குழந்தை குடிக்கும்வரை பாலூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக பால் சுரப்பதற்கு ஏற்றாற்போல், தாயும் சத்தான ஆகாரங்களை சாப்பிட வேண்டும். குழந்தையில் குடிக்கும் தாய்ப்பால்தான், ஆயுசு வரைக்கும் அதன் நோய் எதிர்ப்பு சக்திக்கு அச்சாரம். எனவே எந்தக் காரணத்துக்காவும் தாய்ப்பாலை நிறுத்தவே கூடாது.

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் குழந்தைப் பருவத்தில் கபத்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கின்றது. அதனால்தான், குழந்தைகள் இனிப்பை விரும்புகின்றன. தூக்கமும் அதிகமாக இருக்கும். நோய்கள், காயங்களில இருந்து சீக்கிரமாக குணம் அடையும். கபத்தின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும், குழந்தையின் செயல்களில் இருந்து அதன் தனிப்பட்ட பிரகிருதியின் அடையாளத்தை உணர முடியும்.

பித்த பிரகிருதி உள்ள குழந்தைகள் பசி எடுத்தால் பயங்கரமாக அழும். பால் கொடுக்கும் வரை அழுகையை நிறுத்தாது. தூக்கத்தில் ஆர்வம் காட்டாது. வாதத்தின் ஆதிக்கம் உள்ள குழந்தைகள் தொட்டால் சுருங்கியாக இருக்கும். தூக்கத்தில் இருந்து அடிக்கடி திடுக்கிட்டு எழும். சரியாக தூங்காது. காரணமில்லாமல் அழும். கபத்தின் ஆதிக்கம் உள்ள குழந்தைகள் குண்டாக இருக்கும். சாப்பிடுவது, தூங்குவது, மலஜலம் கழிப்பது எல்லாம் சீராக நடக்கும்.

ஒவ்வொரு குழந்தையின் பிரகிருதி பற்றி அறிந்து கொண்டால் அதற்கு ஏற்றாற்போல் குழந்தையை நன்கு பராமரிக்கலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love