உடல் பருமன் குறைய ஆயுர்வேதம் காட்டும் வழி

Spread the love

மனிதர்களின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் மாற்றம் காரணமாக அதிக நபர்கள் பாதிக்கப்ப்டுவது அவர்களின் உடல் பருமன் என்ற பிரச்சனையால் தான். மிகப் பருமன் ஆனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது? ஆயுட்காலம் குறைகிறது. தூக்கம் அதிகம் வரும். கடின உடல் உழைப்புக்கு ஒத்து வருவதில்லை. மலம், சிறுநீர் கழிக்க நேரம் அதிகம் பிடிக்கும். குரல் கனத்துக் காணப்படும். வாய் குழற நேரிடும். மூலம் சார்ந்த பிரச்சனைகள், வயிற்றுக் கடுப்பு, செரிமானக் கோளாறுகள் ஆகிய வயிறு சார்ந்த பிரச்சனைகளும், சரும நோய்களும் ஏன் புற்று நோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

கண்களில் கோளாறும், தூரப் பார்வை குறைந்து கண்ணாடி அணிய வேண்டிய சூழல் ஏற்படும். தலை சுற்றல் ஏற்படும். உடல் பருமனைக் குறைக்க தூக்கத்தைக் குறைக்க வேண்டும். நெறி தவறிய உடல் உறவு கூடாது. உடலுக்கு அதிக உழைப்பையும், மூளைக்கு பயிற்சியையும் அதிகமாக செலுத்த வேண்டும் என்று ஆயுர்வேத ஆசான் சரகர் கூறுகிறார். அதிகாலையில் எழுந்து விட வேண்டும். எழுந்தவுடன் ஓரிரு டம்ளர் தண்ணீர் அருந்த அது மலத்தை இளக்க உதவும். மாதத்தில் ஒரு தடவை எனிமா எடுத்து கொள்ளலாம். குளிப்பதற்கு முன்பும் ஓரிரு டம்ளர் நீரில் எலுமிச்சம் பழம் பிழிந்து அருந்தலாம். வாயை நன்றாகக் கொப்பளித்து விட வேண்டும். உடற்பயிற்சி, தண்டால், ஆசனம் செய்யுங்கள். ஆசனம் என்று வரும் பொழுது, உத்தான பதாஸனம், ஹாலாஸனம், மயூராசனம், உத்தவ புஜங்காசனம் உடல் பருமனைக் குறைக்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். வெந்நீரில் குளியுங்கள். குளிர்ந்த நீர் குடிக்க, குளிக்க வேண்டாம். கண்டிப்பாக காபி, டீ கூடாது. உண்ணும் உணவுகளில் அரிசி, கோதுமை, பால், கரும்புச் சாறு குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். சோள ரொட்டி, வரகு ரொட்டி, எள் இவை உடலுக்கு நன்மை தரும். கடலை மாவு, முழுக் கடலை, உளுந்து தவிர்க்கவும். உருளைக் கிழங்கு, காலிஃபிளவர், பூசணிக் காய், வெள்ளரிக் காய், மா, திராட்சை, தர்பூசணி தவிர்க்கவும்.

கத்திரிக் காய், பாகற்காய், சேனைக் கிழங்கு, கோவைக்காய் சேர்த்துக் கொள்ளலாம். சீமைத் தக்காளி, எலுமிச்சம் பழம், ஆரஞ்சு, நெல்லிக் காய் சேர்த்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்க்க முயற்சியுங்கள். இஞ்சி, சுக்கு, மிளகாய், மஞ்சள், பெருங்காயம், ஏலக்காய் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இரவு உறங்கச் செல்லும் முன் அறையிலேயே ஒரு நடை பயிற்சி செய்யுங்கள். தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியின் காரணமாக சரியாக இயங்காத காரணத்தினால் ஒரு சிலருக்கு உடல் பருமன் ஏற்படும். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற இயலும்.


Spread the love