மூல வியாதிக்கு ஆயுர்வேதம்

Spread the love

ஆசனவாயில் இரத்த நாளங்கள் வீங்குவதற்கு மூல வியாதி என்று பெயர். இதன் காரணமாக வலி, இரத்தப் போக்கு, அரிப்பு போன்றவை நம்மைக் கஷ்டப் படுத்தும். கொத்தாக சதை தொங்குவது போன்ற உணர்வை தரும். கண்ணுக்கு தெரியாமலிருப்பதை உள் மூலமென்றும், வெளியில் கண்ணால் பார்க்கக்கூடிய, தொட்டு உணரக்கூடியதை வெளி மூலம் என்றும்  கூறிப்பிடுகிறோம். நாம் பார்க்கக் கூடிய வெளிமூலம் கடலை போன்றோ அல்லது திராட்சைப்பழம் போன்றோ இருக்கும். ஆயுர்வேதத்தில் இதை ‘அர்ஷா’ என்று சொல்கிறோம்.

அறிகுறிகள்

ஆசனவாயில் மிகுந்த வலி இருக்கும்.

அரிப்பு எடுக்கும்.

இரத்தப் போக்கை காணலாம். உள்ளாடையில் பார்க்கலாம். ஆசனவாயில் ஏதொ சதைப்பிண்டம் தொங்குவது போன்ற உணர்வு இருக்கும். இரத்தம் கட்டியிருந்தால் இது போன்ற உணர்வு இருக்கும்.

மிகவும் மோசமான மூலத்தில் சளி போன்ற திரவம் வெளி வரும்.

காரணங்கள்

நாம் சாப்பிடும் உணவில்  நார்ச்சத்து குறைந்திருந்தால் மூலம் நம்மைத் தாக்கும்.

மலச்சிக்கல் காரணமாக முக்கி, முனகி மலம் கழிப்பது வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ரத்த நாளங்கள் பாதிக்கப் படுகின்றன.

தீராத வயிற்றுப்போக்கு

கர்ப்ப காலத்தில் இரத்தக் குழாயில் அதிக இரத்தம் செல்வது. பிரசவத்தில் ஏற்படும் அழுத்தம் ஓரு காரணம்.

பிராஸ்டேட் சுரப்பியில் கோளாறு இருந்தால், சிரமத்துடன் சிறுநீர் கழிப்பது ஒரு காரணம்.

பரம்பரை வியாதியாகும்.

அதிக உடல்பருமன்.

பருத்த சிரைகளுள்ள நபர்களுக்கு மூலம் வரும்.  

மூல வியாதியின் வகைகள்      

மூலம் இருக்குமிடத்தை பொருத்து வகைகள் பிரிக்கப்படும்.

1. ஆசனவாயில் உள்ளில், வெளியில் இருப்பது முதல் டிகிரி மூலம்.

2. இரண்டாவது டிகிரி மூலம் மலம் கழிக்கும் போது வெளி வரும். பின்பு உள்ளே சென்று விடும்.

3. மூன்றாவது டிகிரி வெளி வந்த சதை உள்ளே போகாமல் இருக்கும். விரல் கொண்டு உள்ளே தள்ள வேண்டும்.

4. நான்காவது டிகிரி மூலம் நிரந்தரமாக வெளியில் தொங்கும்.

வியாதியைக் கண்டறிதல்

வெளிமூலம் பார்த்தவுடன் தெரியும்.

மருத்துவர் கையில் உறை போட்டுக் கொண்டு ஆசனவாயினுள் கையை உள்ளே விட்டு சோதனை செய்ய வேண்டும். செய்தாலும் மூலத்தை உணர முடியாது. கையால் உணர முடியாமலிருக்கும். சிலருக்கு ஆசனவாயின் சுவர்ப்புறம் கிழிந்திருக்கும். இதனால் பயமில்லை. ப்ரோடோஸ்கோபி என்ற கருவி மூலமாக(டெலஸ்கோப் மாதிரியிருக்கும்) மருத்துவர் உள் மூலத்தை ஆராய முடியும்.

சிக்மாய்டோஸ்கோபி என்ற கருவியை ஆசனவாயில் செலுத்தி உள்ளேயிருக்கும் ஊறுப்புகளை ஆராய முடியும்.

பேரியம் எனிமா எனப்படும் எக்ஸ்கதிர்கள் மூலமாக அடிவயிற்றைப் பார்க்கலாம்.

ஏற்படக் கூடிய சிக்கல்கள்

வலி இருந்தால் மூலத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதென்று தெரிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட  இடம் நன்கு வீங்கி, வந்து சேர்ந்த இரத்தம் உடலுக்குத் திரும்ப முடியாமல் வலியை உண்டு பண்ணும். இது இரத்தம் உறைவதற்கு கொண்டு செல்லும்.

இரத்தம் உறைதல்

பாதிக்கப் பட்ட இடத்திலுள்ள இரத்த நாளங்கள் வீங்கி இரத்தம் உறைந்து விடும். இது பார்ப்பதற்கு கருப்பாக அல்லது நீலம் கலந்து சிவந்து காணப்படும்.

திசுக்கள் மடிதல்

இரத்தம் வருவது நின்று விட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில் தாங்க முடியாத வலி தோன்றும். இது மிகவும் அபாயகரமானது. மிகவும் அபூர்வமான மூலமாகும். சிக்கல்களைத் தோற்றுவிக்கும். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

பரவுதல்

இது மிகவும் அபூர்வமானது. ஆனால் அபாயகரமானது. சீழ்பிடித்த கட்டி ஆசனவாய், மலக்குடல் அடியில் தோன்றி வீங்கி அதிக வலியைக் கொடுக்கும். இப் புண் ஈரல் வரை பரவ வாய்ப்புகள் உண்டு. இதற்கு காரணம் என்ன–? ஆசன வாயின் பக்கத்திலுள்ள ரத்தம் வெளிப்பட்டு ஈரல் வரை சென்று விடும்.

இரத்த சோகை  

மூலத்தின் காரணமாக அதிக இரத்தம் வெளியேறுதல். வெகு நாட்கள் இரத்தம் இவ்வாறு சேதமடைந்தால் இரத்த சோகை ஏற்படும். ஆக்சிஜன் சேர்ந்த இரத்தத்தை தயார் செய்து அனுப்பக் கூடிய இரத்தத் திசுக்கள் போதிய அளவில் இல்லாமலிருந்தால் இவ்வாறு ஏற்படும்.

மூலமும் கர்ப்பமும்

பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு மூல நோய் தாக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். கர்ப்பபையின் அழுத்தம், சுமை காரணமாக மலக்குடலின் அடியிலுள்ள இரத்த நாளங்கள் வீங்கி மூலமாக மாறுகின்றன.

தடுப்பு முறைகள்

ஆரோக்யமான நார்ச்சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் போன்றவை மிகவும் நல்லது. தண்ணீர் நிறைய அருந்துவது நல்லது. பழச்சாறு மிகவும் ஏற்றது. காபி, டீயை தவிர்ப்பது நல்லது. நிறைய து£ரம் நடப்பது நல்லது. நீச்சல் மிகவும் நல்லது. எளிய உடற்பயிற்சி வயிற்றை நல்ல நிலையில் வைக்க உதவும். சிரமப்பட்டு மலம் கழிப்பது நல்லதல்ல. இடுப்பு விரிந்து இருப்பது நல்லது. முடிந்தால் லேசாக முன்னால் குனிந்து உட்காரவும்.

சிகிச்சை

மூன்று விதமான சிகிச்சை முறைகள் உள்ளன.

உள் மூலம், வெளி மூலத்திற்கு கீரிம் தடவலாம்.

உள் மூலம், வெளி மூலத்திற்கு ஆயின்மெண்ட் பூசலாம். வரண்ட தோலுக்கு இதமாக இருக்கும்.

சப்பாசிடரிகள் பயன்படுத்தி ஆசனவாய் உள் வரை மருந்தைச் செலுத்தலாம்.

சப்பாசிடர்கள் என்பது கூம்பு வடிவமான ஒரு மருந்துத் தயாரிப்பு. அதாவது உடலில் துவாரத்திற்குள் வைக்கப்பட்டால் மருந்து கரைந்து உடலில் கலக்கும். உருளை வடிவமாகவும் இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவை

மலம் கழித்ததும் வாசனை இல்லாத சோப்பு கொண்டு சுத்தம் செய்யவும். மென்மையான டவல் அல்லது துணி கொண்டு லேசாகத் துடைக்கவும். பருத்தி உள்ளாடையை மட்டும் அணியவும். டால்கம் பவுடரை தவிர்க்கவும்.

மருத்துவ விடுதியில் தரப்படும் சிகிச்சைகள்

ஸ்கெலிரோசென்ட் எனப்படும் மருந்தை ஊசி மூலமாக செலுத்தினால் மூலம் சுருங்கும். ஆனால் திரும்பத் திரும்ப இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்த வேண்டும்.

பேண்டிங் என்பது பாதிக்கப்பட்ட பகுதியை எலாஸ்டிக் பேண்டைப் போட்டு கட்டி விட்டால் இரத்தம் அவ்விடத்திற்கு செல்லாது. மூலம் சுருங்கி மலம் கழிக்கும் போது விழுந்து விடும்.

கிரியோசர்ஜரி மூலத்தை உறைய வைத்தல். உறைந்த மூலம் சுருங்கி கீழே விழுந்து விடும்.

இன்ப்ராரெட் ரேஸ் கொண்டு மூலத்தை நீக்கலாம்.

அறுவை சிகிச்சை மூலமாக பாதிக்கப்பட்ட சதையை அகற்றி விடுதல். இது கடைசியாகத்தான் செய்யப்பட வேண்டும். வேறுவழிகள் இல்லையென்ற நிலையில் இதை நாட வேண்டும்.

மூலிகை மருத்துவம்    

ஹரிதகி, ஜிமிகாந்த் போன்றவை பலன் தரும்.

அர்ஷோகனிபடி, அபாயிருஷ்டா போன்ற ஆயுர்வேத மருந்துகள் குணம் தரும்.

இரத்தம் கசியாத மூலத்தை குணப்படுத்துதல்

1. எள்ளை வறுத்து பருத்தித் துணியில் கட்டி மூலத்தில் ஒத்தடம் கொடுக்கவும். சூடு பொறுக்குமளவு இருக்க வேண்டும்.

2. கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீரை சுட வைத்து அதை ஒரு சின்ன தொட்டியில் ஊற்றி மூலம் படும்படி உட்காரவும் இதமாயிருக்கும்.

3. மலமிளக்கி மாத்திரைகளை சாப்பிட்டால் மலம் இளகிப் போகும்.

நாராயண சூரணம், மதுயஷ்டி சூரணம், திரிபாலா பவுடர் 5 முதல் 10 கிராம் எடுத்து மிதமான சூட்டில் சாப்பிடவும். 50 மிலி கிராம் பாலில் 5 மில்லி கிராம் விளக்கெண்ணெய் சேர்த்து இரவில் குடிக்க நல்ல குணம் தெரியும்.


Spread the love