அவஸ்தை தரும் ஒற்றைத் தலைவலி

Spread the love

ஆயுர்வேதத்தில் அற்புத தீர்வு

மனிதனுக்கு எந்த நோயும் வரக்கூடாது என்றாலும் தலைவலி வந்து விட்டால் தாங்க முடியாத அவஸ்தை ஏற்படும். அதிலும் ‘மைக்ரேன்’ (Migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் அவஸ்தையே மிகவும் அவஸ்தைபடும். ஒற்றைத்  தலைவலியால் அவஸ்தை படுபவர்கள் ஏராளம். ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, வெளிச்சத்தை கண்டால் அதிகரிக்கிற தலைவலி ஒற்றைத் தலைவலி எனப்படுகிறது.

ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு இருட்டுதான் மிகவும் பிடிக்கும். கண்களில் பூச்சி பறக்கும். மனச் சோர்வு, மலச்சிக்கல், கழுத்து வலி, தேவையில்லாமல் எரிந்து விழுதல் போன்றவை இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும். சாதாரண வலி நிவாரண மாத்திரைகளுக்கு ஒற்றைத் தலைவலி கட்டுப்படாது.

மாதவிலக்குக்கு முன்பு பெண்களுக்கு அதிகமாகத் தலைவலி வருகிறது. கருத்தடை மாத்திரைகளாலும், காரம், புளி, உப்பு, எண்ணெய், உணவு சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் தலைவலி அதிகமாகிறது. மன அழுத்தம், மது அருந்துவது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்றவற்றாலும் இந்தத் தலைவலி அதிகமாகிறது. பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிகமாக வருகிறது.

ஆயுர்வேதத்தின்படி தலை கப ஸ்தானமாக இருப்பதாலும், அங்கு எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும். அங்குப் பித்தமோ, கபமோ அதிகரித்தால் நோயை உண்டாக்கும். பித்தம் அதிகரித்த நிலையே ஒற்றை தலைவலி. மைக்ரேன் தலைவலி பித்தத்தின் சார்புத் தன்மை இருப்பதால் கசப்பை ஆதாரமாகக் கொண்ட கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மஞ்சள், மரமஞ்சள், சீந்தில் கஷாயத்துடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் கொடுக்கலாம். இதற்குப் பத்யாஷடங்கம் என்று பெயர். இதனுடன் அசன மஞ்சிஷ்டாதி தைலத்தை சேர்ப்பது நல்லது.

ஒற்றை தலைவலிக்கு கை வைத்தியம் உள்ளது. இஞ்சிச் சாறு, பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும். இதை காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். அகத்தி இலைச் சாறு எடுத்து நெற்றியில் தடவிவரலாம். சுக்குத் தூள், சீந்தில் கொடி, தேன், சர்க்கரை ஆகியவற்றை வகைக்குக் கொஞ்சம் எடுத்துத் துணியில் முடித்து மூக்கில் முகர்ந்து வரலாம்.

நொச்சி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாறை, இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி குறையும்.  பத்து கிராம்பையும், ஒரு கடுக்காயின் தோலையும் பொடித்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஓரளவு சூட்டில் குடிக்கலாம். ஜாதிக்காயை கல்லில் உரைத்து அதை எடுத்து இரு பக்க நெற்றிப் பொட்டிலும் கனமாகப் பற்றுப் போடலாம். மருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் கனமாகப் பற்று போட்டால் தலைவலி நின்றுவிடும்.

ஒற்றை தலைவலி உள்ளவர்களின் அஜீரணம், மலச்சிக்கலை கண்டிப்பாக போக்கி கொள்ள வேண்டும். சமச் சீரான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். மனதை சாந்தப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நல்ல இசை கேட்பது, பூங்கா, கடற்கரைக்கு செல்வது, தியானம் செய்வது போன்றவை நல்ல பலன் தரும்.


Spread the love
error: Content is protected !!