கேள்வி
ஆயுர்வேதம் டுடே ஆசிரியர் அவர்களுக்கு, எனது வயது 50. அலுவலக உதவியாளர் வேலை பார்த்து வருகிறேன். வெள்ளெழுத்து காரணமாக சற்று அவதிப்படுகிறேன். இதனைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் சிகிச்சைப் பெற விரும்புகிறேன். தங்கள் ஆலோசனையை எதிர் நோக்குகிறேன்.
பதில்
வெள்ளெழுத்து என்பது என்ன? எதனால் ஏற்படுகிறது? யார் யாருக்கு ஏற்படுகிறது என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்வது நல்லது. வெள்ளெழுத்து என்பது, பார்வையானது தெளிவற்று இருக்கும். கண்கள் மிகவும் சோர்வாக காணப்படும் என்பதுடன் திறமையான தொழில்களைச் செய்வதிலும் சிரமம் ஏற்படும்.
நுணுக்கமான தொழிலைச் செய்து வரும் கடிகாரம் பழுது பார்ப்பவர், ஓவியர், தட்டச்சர், பொற்கொல்லர் மேலும் அதிக நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளெழுத்து சற்று காலத்திற்கு முன்பே (சுமார் 35 வயதிற்கு மேல்) ஏற்பட்டு விடும். வெள்ளை முடி, சருமச் சுருக்கங்களானது முதுமை அடைவதை எடுத்துக் காட்டுவது போல வெள்ளெழுத்தும் (பிரஸ்பையோப்பியா) முதுமை நிலைக்கான தொடக்க நிலையை நினைவுபடுத்தும் ஒரு இயற்கையான குறைபாடு என்று கூறலாம். இயற்கையான இந்தக் குறைபாடு 40 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட காலத்தில் காணப்படுகிறது.
வயது அதிகரிக்க, அதிகரிக்க அண்மையில் இருக்கும் பொருட்களைப் பார்த்தால், குவியமின்மை இழப்பினால் சிரமம் அதிகரித்துக் கொண்டே போகும்.
வெள்ளெழுத்து அறிகுறிகள் என்ன?
பாதிக்கப்பட்டவர், மிகச் சிறிய எழுத்துக்களை மங்கலான வெளிச்சத்தில் படிக்கச் சிரமப்படுவார். தொடர்ச்சியாக படிக்க இயலாது. கண்களில் களைப்பு, சோர்வு, தலைவலி ஏற்படும். நாட்கள் செல்லச் செல்ல எழுத்துகள் மங்கலாகிக் கொண்டே செல்லும். இதனைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர் படிக்கும் புத்தகத்தை முகத்திலில் இருந்து நீட்டிக் கொண்டே சென்று இறுதியில் புத்தகத்தைப் படிப்பதற்கு கையின் நீளம் போதாது என்ற நிலைக்கு வந்து விடுவார்.
இந்த வெள்ளெழுத்தானது, 50 வயதுக்கு மேல் சிறிது மாறுபாடு அடைந்து, அருகில் உள்ள எழுத்துகளைப் படிப்பதில், எழுதுவதில் உள்ள சிரமம் நீங்கி, தூரப்பார்வை (சற்று மங்கலான) நிலை ஏற்படும். இந்த நிலையால் கண்புரை தொடக்கம் ஏற்படும் போது, முதலில் தூரப் பார்வையில் மங்கல் ஏற்பட்டு, கிட்டப்பார்வையில் தெளிவு ஏற்பட்டு, காலங்கள் செல்லச் செல்ல, தூரப்பார்வையானது, குறைவு பட்டு மங்கல் அடையும்.
ஆயுர்வேதம் தீர்க்கும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள்
பழுத்த அகத்தி இலைச் சாறினை நன்றாக பிழிந்து எடுத்து, வடிகட்டி கண்களில் இட வெள்ளெழுத்து நீங்கும்.
புங்கம் விதைகளை மேல் தோல் நீக்கிக் கொண்ட பின்பு, சிறிது சிறிதாக நறுக்கி, பிழிந்து கொள்ள வரும் பாலை கோரோசனம் கோஷ்டம், குங்குமப் பூ இவற்றினை சம அளவு எடுத்து புங்கம் பாலிட்டு அரைத்து, மாத்திரைகளாக உருட்டி, உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை நீரில் இட்டு அரைத்துக் கண்ணில் விட வெள்ளெழுத்து நீங்கும்.
மிளகு ஒரு கிராம், நெல்லி வற்றல் தோல் 2 கிராம், மேல் தோல் நீக்கிய புங்கம் விதை 3 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, கையாந்தகரைச் சாறு விட்டு அரைத்துப் பதத்தில் மாத்திரையை நீர்விட்டு அரைத்துக் கண்ணில் விட பகலில் சிறு நட்சத்திரங்களும் தெரியும் படி தெளிவடையும் என்பதை அகத்தியர் நயன விதி 323 ஆம் பாடலில் தெளிவு படுத்தியுள்ளார்.
மேலும் அவர் தும்பை இலை, சுக்கும் மிளகு ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, சேர்த்து அரைத்து நிழலில் இட்டு மாத்திரை வடிவில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மாத்திரையை தண்ணீர் விட்டு அரைத்து மூன்று வேளை கண்ணில் விட மாலைக் கண் குணமாகும் என்று கூறியுள்ளார்.
கேள்வி
ஆசிரியர் அவர்களுக்கு, ஆயுர்வேதம் டுடே மாத இதழை கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து படித்து வருகிறேன். எனது இரண்டாவது மகன் 7வது வகுப்புப் படிக்கிறான். கடந்த இரண்டு மாதங்களாக சரியாகச் சாப்பிடுவதில்லை. உடல் எடையும் குறைந்து விட்டது. பள்ளி விட்டு வரும் பொழுதே மிகக் களைப்பாக வருகிறான். உணவிலும் அவ்வளவு நாட்டமில்லை. அவனுக்கு நன்கு பசி எடுப்பதற்கும், உடல் எடை அதிகரிக்கவும் ஆயுர்வேத மருத்துவத்தில் பரிகாரம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில்
சிறு வயது குழந்தைகள் முதல் பள்ளி கூடம் செல்லும் குழந்தைகள் வரை பொதுவாக பசி இல்லை, பசிக்கவே மாட்டேங்கிறது என்று கூறவோ, கவலைப்படுவதோ இல்லை. நாம் சாப்பிடும் பொழுது, உடன் அவர்களும் சாப்பிடும் பொழுது தான் அவர்களை குறைவாக அல்லது அதிகமாக சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.
காலை நேரத்தில் அவசர அவசரமாக சாப்பிடும் குழந்தைகள், நாம் செய்து கொடுக்கும் மதிய உணவும் ஓரளவே வயிற்றில் நிரம்பும். பள்ளி நேரங்களில் அங்கு விற்கப்படும் ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவுகளை பர்கர், பிட்சா என்று நொறுக்குத் தீனிகளாக சாப்பிட வயிற்றில் பசி உணர்வு மந்தமாகி விடும்.
ஆயுர்வேத மருத்துவமானது குழந்தைகள் தங்கள் 16 வயது வரை கப தோஷத்தின் பிடியில் இருப்பார்கள் என்று கூறுகிறது. உடலில் கபம் அதிகமாகி, நாம் கபத்தில் விளைவுகளை கட்டுப்படுத்த தவறினால், செரிமானக் கோளாறும் இருமல், மூச்சுக் குழல், நுரையீரல் தொற்றுகள், தோல் வியாதி, இளைப்பு, சைனஸ், பசியின்மை என்று பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
ஆகவே, குழந்தைப் பருவத்தில் நாம் கபத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. எளிதில் ஜீரணமாகாத அல்லது ஜீரணமாக இயலாத உணவுகள், எண்ணெய் விட்டு வறுத்த, பொரித்த, சமைத்த உணவுகள், நெய், எண்ணெய் பலகாரங்கள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதால், நமது உடலில் கபம் அதிகரிக்கிறது.
குழந்தைகளின் செரிமான இயக்கத்தில் அவர்கள் உண்ணும் உணவானது, சரியாக செரிமானம் ஆகாமல் அல்லது செரிமானமாக அதிக நேரம் எடுக்கும் பட்சத்தில் தான் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு இல்லாமல் சோர்ந்து காணப்படுவார்கள், இதனுடன் குடலில் பூச்சிகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாகும். இதன் காரணமாக பசியின்மை, பலகீனம் ஏற்படும். குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்று கவலைப்படும் பெற்றோர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
இருப்பினும் குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், அவர்களின் உடல் எடை குறைந்து கொண்டே வந்தாலும், குழந்தையின் பசி உணர்வை நாம் அதிகரிக்கச் செய்ய வேண்டும். செரிமானம் நன்றாக செயல்பட்டால் தான் பசி உணர்வும் அதிகம் தோன்றும். செரிமானத்தை மேம்படுத்த நறுமணப் பொருட்கள் மிகவும் உதவுகின்றன. ஆயுர்வேத மருத்துவத்தில், செரிமானத்திற்கு வலிமை தரும் வகையில் சரியாக கணக்கிடப்பட்ட அளவு விகிதங்களில் பலவித (எட்டு வகையான) பொருட்களின் உதவியுடன் அஷ்ட சூரணத்தினை தயாரித்துள்ளனர். அஷ்ட சூரணத்தில் இஞ்சி, கரு மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், பெருங்காயம், போன்ற பொருட்கள் தேவையான விகித அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் தங்களின் சாப்பாட்டிற்கு முன்போ, அல்லது பின்னரோ அரை தேக்கரண்டி அஷ்ட சூரணத்தை எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து தினசரி மூன்று வேளை உட்கொண்டு வர வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் செரிமான சக்தி அதிகரிப்பதுடன், அவர்களின் வயிற்றில் (குடலில்) நீண்ட நாட்களாக துன்புறுத்தி வரும் புழு, பூச்சிகளும் வெளியேறி விடும்.
பசி உணர்வை, அதிகரிக்க மற்றுமொரு ஒரு மருந்து முஷ்தரிஷ்டம் உள்ளது. முஷ்தரிஷ்டம் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, சாப்பாட்டுக்கு பின்பு, தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை உட்கொள்ள வேண்டும். முஷ்தரிஷ்டம் அதிகமான கபத்தினையும் குடலில் உள்ள பூச்சிகளையும் வெளியேற்றுவதில் சக்தி வாய்ந்தது ஆகும். இந்த அரிஷ்டத்தினை தொடர்ந்து ஒரு சில மாதங்கள் உட்கொண்டு வர உங்கள் குழந்தையின் பசி உணர்வு அதிகரிக்கும்.
குழந்தையின் பசியுணர்வுக்கும் அவர்கள் சாப்பிடும் உணவு வகைகளுக்கும் தொடர்பு உண்டு என்பதை முன்பே கூறியிருப்பினும், எந்த வகையான உணவு வகைகளை அவர்கள் உட்கொண்டால், அவர்களுக்கு பசி உணர்வு அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.
அவர்கள் சாப்பிடும் உணவு எளிய வகையாகவும், சற்றே வெதுவெதுப்பாகவும் இருத்தல் வேண்டும். மாதுளம் பழம், மாம்பழம், அன்னாசிப் பழம் போன்ற பழங்கள் மிகவும் பயன்தரக் கூடியது. பொதுவாக பசியின்மை உள்ள குழந்தைகளுகு உணவு எடுத்துக் கொள்ளும் வேளை தினசரி மூன்றாக இருந்தால், குறிப்பிட்ட மணி கணக்கு அளவினை வைத்து 5, 6 வேளைகளாக மாற்றிக் கொண்டு உணவு உட்கொள்ளச் செய்ய வேண்டும். ஆனால், சாப்பாட்டு அளவு மூன்று வேலைக்குரியதை 5, 6 வேலைகளுக்கு பிரித்துக் கொள்ள வேண்டுமே தவிர உணவின் அளவை அதிகரிக்கக் கூடாது.
வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து தினசரி ஒன்றிரண்டு வேலை அவர்களை குடிக்கச் செய்ய வேண்டும். இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தை எனில் அவிக்கப்பட்ட வாழைப்பழத்தினை மசித்து, நெய், சர்க்கரை கலந்து ஏலக்காய்த் தூள் சேர்த்துத் தரலாம்.
விரல் இடுக்கு அளவு சீரகம் மற்றும் கொத்தமல்லி சேர்த்த தண்ணீரை கொதிக்க வைத்து குடி நீராக குடித்து வரச் செய்யுங்கள். குழந்தைகள் சுறுசுறுப்பின்றி, ஆரோக்கியமின்றிக் காணப்பட்டால், லக்ஷாதி தைலம் அல்லது பொருத்தமான தைல எண்ணெயை தேர்ந்தெடுத்து வெதுவெதுப்பாக்கி, குழந்தையின் உடலில் தடவி மெதுவாக கை விரல்கள் கொண்டு நடுத்தர அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யலாம். இதன் மூலம் உடலில் செரிமானம் ஆகாமல், விஷமாக மாறியிருக்கும் பொருட்கள் வெளியேறவும், செரிமான முயற்சி தடையின்றி நடைபெறவும் உதவும்.
தினசரி உடற்பயிற்சி செய்யவும், பள்ளியில் விளையாட்டுக்களில் மனது கொள்ளவும் ஊக்கம் தர வேண்டும். குழந்தைகளுக்குப் பள்ளியில், வீட்டில் மன அழுத்தம், மன நிலை சரியின்றி காணப்பட்டாலும் பசி உணர்வு குறைந்து விடும் என்பதால் காலை முதல் படுக்கைக்குச் செல்லும் வரை குழந்தைகளின் மன நிலையை அறிந்து கொள்ளுவதும் பெற்றோர்களின் கடமையாகும்.
கேள்வி
ஆயுர்வேதம் டுடே ஆசிரியர் அவர்களுக்கு, மிக நீண்ட நாட்களாக உங்கள் மாத இதழைப் படித்து வருகிறேன். எனது சகோதரி இரண்டாவது குழந்தை சென்ற மாதம் பிரசவித்துள்ளாள். ஆனால் போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை என்பதால் புட்டிப்பால் கொடுக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்க தாய்ப்பால் அவசியம் என்பதால் ஆயுர்வேதத்தில் ஏதேனும் மருந்துகள் மற்றும் என்ன வகை உணவுகள் சாப்பிட வேண்டும் என்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதில்
தாய்ப்பால் குறைவாக சுரப்பதற்கு தாயின் ஊட்டச்சத்துக் குறைபாடு, சரியான உணவு மேற்கொள்ளாமல் இருத்தல், தேவையில்லாத மன அழுத்தம், டென்சன், குழந்தையிடம் அன்பு காட்டாதது போன்றவைகள் காரணமாகும்.
குழந்தை பிறந்தவுடன் ஒரு சில தாய்மார்களுக்கு வயிற்றில் உப்புசம் ஏற்படும். சௌபாக்ஸ் சுண்டி என்ற லேகியம் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது. அந்த லேகியத்தில் 10 கிராம் அளவு வரை எடுத்து நன்கு நக்கிச் சாப்பிட சுமார் ஒரு மணி நேரம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். காலை மற்றும் இரவு உணவு உண்டதும், ‘ஜீரகா ரிஷ்டம்’ ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்ளவும். இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் சிசேரியன் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கும் முதுகிலுள்ள தண்டுவடத்தில் வலி ஏற்படும்.
மயக்க மருந்து கொடுப்பதால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் தன்வந்திர கஷாயமாகும். தன்வந்திர கஷாயம் பத்து மி.லி. அளவுடன் வென்னீர் பத்து மி.லி. வாயு குளிகை சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். சாப்பாட்டில் மிளகு, சீரகம், தேங்காய் தயாரித்தக் கூட்டு, மைசூர் ரசம் போன்றவை சேர்த்துக் கொள்வது அவசியம். புழுங்கலரிசி சமையல் முக்கியம். மோர் நன்கு கடைந்திருக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு இடம் தரக் கூடாது. கடுமையான வேலைகளைச் செய்யக் கூடாது வீட்டில் சமைக்கப்பட்ட சுத்தமான உணவுகளைச் சாப்பிடுதல் அவசியம். கீழே தரப்பட்டுள்ள மூலிகைகளில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து கஷாயம் அல்லது சூரணம் தயாரித்து உட்கொண்டு வரலாம்.
மூலிகைகள்
வெண்கடுகு, சீரகம், திராட்சைப் பழம், பேய்ப்புடன், சீந்தில் கொடி, கோரைக் கிழங்கு, வட்டத்திருப்பு, அதிமதுரம், சுக்கு, மருள்வேர், தேவதாரு, கசப்பு, வெப்பாலை அரிசி, வேப்பம்பட்டை, நிலவேம்பு, ரோகிணி, நன்னாரி வேர் ஆகியவை. உணவில் வெங்காயம், பூண்டு, மைசூர் பருப்பு, பாசிப்பயிறு, கோதுமை,சம்பா நெல், பசும்பால், நெய் போன்றவை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்னாரி, நாணல், தர்ப்பைப்புல், சம்பா நெல், கரும்பு, குறுவை நெல் போன்றவற்றின் வேர்களை தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து தண்ணீர், பாலுடன் சேர்த்து கசாயம் காய்ச்சி சிறிது வெல்லம் சேர்த்துக் கொண்டு அருந்தி வர வேண்டும்.