பாரம்பரிய மருத்துவத்தை போற்றுவோம் !

Spread the love

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுவோம்

கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, தமிழ்க்குடி என்பார்கள். அதே தொன்மை, பழமை நம் இந்திய மருத்துவத்துக்கு உண்டு. உலகிலேயே மருத்துவ சிகிச்சை முறை தோன்றியது இந்தியாவில்தான். உலகின் முதல் மருத்துவ நூல் எழுதப்பட்டதும் இந்தியாவில்தான். இந்திய மருத்துவ முறைகளில் நோய் நாடி, நோய் முதல் நாடி சிகிச்சை அளிப்பதுதான் இன்று வரை வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆயுர்வேத வரலாறே தெய்வீக வரலாறு. சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களுக்கு இனம் புரியாத நோய்கள் வந்தபோது, இமயமலையில் வாழ்ந்த ரிஷிகளுக்கு கவலை ஏற்பட்டது. மக்களை காப்பாற்ற யாராவது தேவலோகம் போய் மருத்துவ முறைகளை கற்று வர வேண்டும் என முடிவெடுத்து பரத்வாஜ முனிவரை தேர்ந்தெடுத்து அனுப்பினர். கடவுளிடம் இருந்து மனிதர்கள் கற்று வந்ததுதான் ஆயுர்வேதம். மகாவிஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி பகவான்தான் ஆயுர்வேதத்தை அருளிய கடவுள். நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தில் ஒரு உட்பிரிவாக உள்ளது ஆயுர்வேதம்.

ஆயுர்வேதம் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று சொல்லப்படுகிறது. அப்போதே மருத்துவம், அறுவை சிகிச்சை என 2 பிரிவுகள் உருவாகி விட்டன. சரகர்தான் ஆயுர்வேத மருத்துவ முறைக்கு ஆசான். இவர் தொகுத்த சரக சம்ஹிதைதான் ஆயுர்வேத வைத்திய முறைக்கு வழிகாட்டி. ஆயுர்வேத அறுவை சிகிச்சைக்கு தந்தை என சுஸ்ருதர் அழைக்கப்படுகிறார்.

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், தாவரங்கள் என எல்லாவற்றுக்கும் சிகிச்சை முறைகளை அப்போதே தனித்தனியாக வரையறுத்து இருப்பது ஆயுர்வேதத்துக்கே உரித்தான சிறப்பு. ஆயுர்வேதம் என்பது மக்கள் மருத்துவம். பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என்ற பெயரில் இந்தியாவில் காலம் காலமாக சொல்லப்படும் மருத்துவக் குறிப்புகள் எல்லாம் ஆயுர்வேதத்தின் ஒரு அங்கம் எனலாம்.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்கிறோம். இது அனைவருக்கும் தெரியும். இந்த பஞ்ச பூதங்கள்தான் மனிதர்களின் உடலில் தோஷங்களை ஏற்படுத்துகின்றன. அவை வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்கள். இவை மூன்றும் ஒவ்வொருவரின் உடலிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. பெரும்பாலான நோய்கள் வருவதற்கு காரணம் இவற்றின் இயல்பான சமச்சீர் நிலை (பாலன்ஸ்) தவறுவதுதான் என்பது ஆயுர்வேத தத்துவம் ஆகும்.

ஆயுர்வேத மருந்து தரப்படுவது அந்த இயல்பு நிலையை திரும்பவும் கொண்டு வருவதற்காகத்தான். தோஷங்கள் இயல்பு நிலை அடைந்ததும் நோய் தானாக குணமாகி விடும். இந்த தோஷங்களில் எது மற்றதைவிட அதிகமாக இருந்து ஒருவரது உடலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை வைத்து மனிதர்களை 7 விதமாக பிரித்துள்ளது ஆயுர்வேதம். வாதம், பித்தம், கபம் ஆகியவை மூன்று வகை. அதோடு வாதபித்தம், பித்தகபம், வாதகபம் என இரட்டை தோஷங்களின் ஆதிக்கம் கொண்ட மூன்று வகை. மூன்று தோஷங்களுமே அதிகமாக இருந்து ஆதிக்கம் செலுத்துவது அரிதான ஏழாவது வகை. இந்த தோஷங்களின் ஒருவரின் பிரகிருதி என்பார்கள். மனிதர்களின் இயல்புகள் எல்லாம் இந்த பிரகிருதியைப் பொறுத்துதான் அமையும்.

ஒருவரது வாழ்நாளில் குழந்தைப் பருவத்தில் கபத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். நடுத்தர வயதில் பித்தத்தின் ஆதிக்கம் இருக்கும். முதுமையில் வாதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்றபடி உணவு மற்றும் வாழ்க்கை பழக்கங்களை மாற்றிக் கொண்டால் நோய்களின் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஆயுர்வேதம் நமக்கு உணர்த்தும் உண்மை. கருவில் இருந்து கல்லறை போய் சேரும் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிமுறைகளை பக்க விளைவுகள் இன்றி ‘பக்கா’வாக சொல்லித் தருவது ஆயுர்வேதம்.

சித்த மருத்துவமும் சிறப்பு வாய்ந்தது. ‘போகர் ஏழாயிரம்< எனும் நூலில் கமல முனி 7,300 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், போகர் 300 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், திருமூலர் 1,000 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. இவ்வளவு காலம் வாழ முடியுமா? என்றெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம். ஆனால், காயகல்பம் எனும் முறையைக் கொண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்பதை அறியலாம். ‘போகர் ஏழாயிரம்< நூலில் இதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. சராசரி மனிதனைவிட அதிகக் காலம் வாழ்வதற்கான வழிகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன.

சூரியன் நோயைக் குணமாக்கும் என்பதை சேந்தனமும் கொழும் தன் கனல் நீருடனே கொங்கணர் செண்பகம் கொண்டு வணங்கிடுவேன்யு என்ற சூரியனார் தோத்திரப் பாடல் மூலம் அறியலாம். பழமொழிகள் மூலமும் மருத்துவத்தை நம் முன்னோர்கள் வளர்த்து வந்தனர். நல்லாதனார் என்பவர் திரிகடுகம் என்று தமது பாடல்களுக்குப் பெயர் சூட்டினார். இதுபோல் சிறுபஞ்சமூலம் என்று ஒரு பாடல் தொகுப்பும் உள்ளது. திருக்குறளிலும் எண்ணற்ற மருத்துவப் பாடல்கள் உள்ளன.

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி> என்பது போன்ற பழமொழிகள் நாலடியாரையும், திருக்குறளையும் குறிப்பது மட்டுமல்லாமல் ஆலம் குச்சியும், வேலம் குச்சியும் பல் நோய்க்குப் பயன்படுகின்றன என்பதை அவர்கள் சொல்லியுள்ளனர். உடம்பை முறித்துக் கடம்பைப் போடு என்று சொல்லி வைத்தனர். கடம்ப மரக் கட்டிலில் படுத்தால் கைகால் வலி போன்றவை வராது என்று இதற்கு அர்த்தம்.

எல்லா செடிகளிலும் மருத்துவக் குணம் உண்டு என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். மருந்தாக அல்ல உணவாக எடுத்துக் கொண்டாலே நோய் வராமல் தடுக்க முடியும். நோய் வந்து விட்டாலும் அதை போக்க முடியும் என்பதை அவர்கள் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். பாரம்பரிய மருத்துவம், பழமையான மருத்துவம் இந்த நவீன காலத்திலும் நோய் அண்டாமலும், வந்தபின்பு அதை விரட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. அலோபதி மருந்துகளைப் போல இந்த மருந்துகளில் பக்க விளைவுகள் எதுவுமில்லை என்பது கூடுதல் சிறப்பு.

பக்க விளைவுகள் இல்லா பாரம்பரிய மருத்துவத்தை போற்றுவோம்! நம் சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ வழிகாட்டுவோம்!


Spread the love