அறுவை சிகிச்சை என்றாலே நம்மில் பலருக்கு பயம்தான். மருந்துகளால் குணப்படுத்த முடியாமல் போய் கடைசியாக கடைபிடிக்கப்படுவது அறுவை சிகிச்சை, அதுவும் இந்த சிகிச்சை தற்போதுதான் அதிக அளவில் செய்யப்படுகிறது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஆயுர்வேதத்தில் அந்த காலத்தில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்தன என்றால் நம்புவீர்களா? அதுவும் கண் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் ஸர்ஜரி , பிரசவ சம்பந்தமான அறுவை சிகிச்சைகள் அந்த காலத்தில் செய்யப்பட்டிருக்கின்றன. இயற்கை பிரசவம் சிக்கிலாகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கும் ‘சீசேரியன்’ அறுவைசிகிச்சை இந்தியாவின் பழங்காலத்திலேயே செய்யப்பட்டு வந்ததற்கு, சரித்திர ஆதாரங்கள் உள்ளன.
ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சையின் தந்தை எனப்படுபவர் சுஸ்ருதர். இவர் விசுவாமித்திர மகரிழியின் மகன் என்று சொல்லப்படுகிறார். ஆயுர்வேத கடவுளான தன்வந்திரியின் வைத்திய முறைகளை கடைபிடித்து சுஸ்ருதர் எழுதிய மாபெரும் நூல் ‘சுஸ்ருத சம்ஹிதை’ ஆகும். இதில் அறுவை சிகிச்சை பற்றியே பெரும்பாலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் ஆறு பிரிவுகளும் 186 அத்தியாயங்களையும் கொண்டது. சுஸ்ருதர் ஒவ்வொரு மருத்துவ மாணவனும் பொது வைத்தியம் அறுவை சிகிச்சை, இரண்டையும் கற்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர். அவருடைய சம்ஹிதையில் மனித தேகவாகு / உடற்கூறு இயல், உடற்பாகங்கள் அறுத்துப்பார்த்தல், மயக்க மருந்து, எலும்புமுறிவு சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை இவற்றின் சிகிச்சை போன்றவை விவரிக்கப்பட்டிருக்கின்றன. சுஸ்ருதரே, அழகுக்கான அறுவைசிகிச்சை, சீசேரியன், செயற்கை கை, கால்களை பொருத்துதல் போன்ற அறுவை சிகிச்சைகளை செய்துவந்தார். சுஸ்ருதர் அறுவை சிகிச்சைகளின் போது “சம்மோகினி வித்யா” என்ற ரகசிய மயக்கமருந்தை பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. சுஸ்ருதர் 101 கூர்மை அதிகமல்லாத மழுங்கிய உபகாரணங்களையும், 21 கூரான ஆயுதங்களையும் அறுவை சிகிச்சை ஆயுதங்களாக விவரித்திருக்கிறார். தற்போதைய நவின ஆபரேஷன் கருவிகளுக்கும், சுஸ்ருதரின் உபகாரணங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.
யோசித்துப்பாருங்கள், இவையெல்லாம் செய்த சுஸ்ருதர் வாழ்ந்த காலம் கி.மு.6 -ம் ஆண்டு! சிலர் சுஸ்ருதர் வாழ்ந்த காலம் கி.மு. 1000- 1500 ஆண்டுகள் என்கின்றனர்.
சுஸ்ருதர் மூல – பௌத்திர வியாதிக்கு விவரித்துள்ள அறுவை சிகிச்சை இப்போதும் காலத்திற்கேற்ற சிறு மாறுதல்களுடன் செய்யப்பட்டு வருகிறது. இந்த மூல – பௌத்திர சிகிச்சை ‘ஷாரசூத்ரா’ எனப்படுகிறது. நாயுருவியின் சாரம், இலைக்கள்ளியின் மரப்பால், மற்றும் மஞ்சள், இவைகளால் சர்ஜரிக்கு பயன்படுத்தும் நூல், பூசப்படுகிறது. இந்த மருந்து தடவப்பட்ட நூலால் பௌத்திரத்தின் வெளிவாயிலிருந்து குதத்தில் தையல் போடப்படும். இரண்டு, மூன்று நாட்களில் மூல – பௌத்திர முளைகளை இந்த நூல் வெட்டிவிடும். நான்கு நாட்களில் காயம் ஆறிவிடும். ஏழு நாட்களில் நூல் பிரித்தெடுக்கப்படும். பௌத்திரத்தின் பரிமாணத்தைப் பொருத்து, திரும்ப திரும்ப பௌத்திர முழுவதும் நீங்கும் வரை இந்த சிகிச்சை செய்யப்படும். இந்த எளிய சிகிச்சை முறை ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள், சில நவீன ஆஸ்பத்திரிகளிலும். தற்போது செய்யப்படுகிறது. இதை இன்னும் சிறப்பாக்க ஆராய்சிகளும் நடந்து வருகின்றன.
சுஸ்ருதர் சிறுநீர்ககற்களை சர்ஜரிமூலம் எடுக்கமுடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தவிர ப்ளாஸ்டிக் சர்ஜரியில் இந்தியா அந்த காலத்திலேயே மிகவும் முன்னேறியிருந்தது. மூக்கை சரிசெய்தால் அல்லது மாற்றுதல் சுஸ்ருத ஸம்ஹிதையில் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. அந்த காலத்திலும் ஸ்ரீதேவி போன்ற நடிகைகள் இருந்திருக்கலாம்!
செல்ஸ் என்ற, கிமு 25 – கிபி – 50 ல் வாழ்ந்த ரோமானியர் இநதிய முறை மூக்கு அறுவை சிகிச்சையைப் பற்றி முதன்முதலில் விவரித்த வெளிநாட்டவர் ஆவார். சுஸ்ருத சம்ஹிதை கி.பி. 775 ஆண்டுகளில் அரபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்திய பிளாஸ்டிக் சர்ஜரி முறைகள் அரேபியா, பாரசீகம், எகிப்து வழியே ஜரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.
இந்த அற்புதமான அறுவை சிகிச்சை முறைகள் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது நசுக்கப்பட்டன. 19 ம் நூற்றாண்டின் மத்தியில் அலோபதி மருத்துவ முறையே இந்தியாவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறையாக குடி கொண்டது. எட்டு வித மருத்துவ பிரிவுகளை குறிப்பிடும் ஆயுர்வேதத்தில் அறுவைசிகிச்சையும் (‘சல்ய சிகிச்சை’) அந்த எட்டு பிரிவுகளில் ஒன்றாகும்.
பா. மு