ஆயுர்வேதமும் மறதியும்

Spread the love

ஆயுர்வேதத்தின் படி முதுமையில் ஏற்படும் வாத, பித்த, கப தோஷங்களின் சீர் குலைவால் ஞாபக சக்தி குறைபாடுகள் ஏற்படுகின்றன. சத்து நிறைந்த உணவு, நல்ல ஜீரண ‘அக்னி’ மற்றும் புத்துணர்ச்சி ஊட்டும் சிகிச்சைகள் முதலியவற்றால் முதுமையின் பாதிப்புகளை, குறிப்பாக ஞாபக மறதியை, தவிர்க்கலாம். இதற்காக ஆயுர்வேதம் மூன்று அடிப்படை விஷயங்களை – உணவு, தூக்கம், ஆரோக்கிய வாழ்க்கை முறையை வலியுறுத்துகிறது.

உணவு

தூய்மையின் சாத்வீக உணவு சிறந்தது. புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகள் நல்லது. அதிக உப்பு, மசாலாக்கள் செறிந்த உணவுகள் கூடாது. இயற்கை உரங்களால் பயிரிடப்பட்ட காய்கறி, பழங்கள், தானியங்கள் சிறந்தவை.

சமச்சீர் உணவு

முழுத்தானியங்கள், பருப்புகள், காய்கறி, பழங்கள், பால், பால் சார்ந்த உணவுகள், கொட்டைகள், நெய் மற்றும் நல்ல தரமான எண்ணெய்கள், வாசனைத் திரவியங்கள், சுத்தமான தண்ணீர் – மூளையை வலுப்படுத்தும் குறிப்பாக பாதாம் பருப்பு ஞாபக சக்தியை மேம்படுத்தும். 10 – 12 பாதாம்பருப்புகளை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் எடுத்து தோலுரித்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கீரை, பச்சைக்காய்கறிகள், பால் சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவற்றிலிருந்து விட்டமின்களை பெறலாம். நியாசின் (பி 3), கோபால்மின் (பி 12) முதலியவை வைட்டமின்கள் ஞாபக சக்தியை பெருக்கும். ஆயுர்வேதம் உயர்ரக நெய், எண்ணெய்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

நவீன மருத்துவப்படி, புரதச் சத்து, மூளைக்கேற்ற நல்ல சத்துணவு. எனவே புரதம் செறிந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். முட்டை, பால், இறைச்சி, மீன், அரிசி, கோதுமை, சோளம், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, எள், சோயாபீன்ஸ், பால், தயிர், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட், பீட்ரூட், வெள்ளரி முதலியவற்றில் புரதம் அதிகம் உள்ளது. புரதம் மூளையின் ஞாபக சக்திக்கு காரணமான செல்களை இணைக்கும் இணைப்புகளான Neuro Transmitters களை வலுப்படுத்துகிறது. தினசரி ஒரு புரதச்சத்து நிறைந்த உணவும், பழமும் உண்பது நல்லது. அதே போல, தற்போதையை ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆன்டி – ஆக்சிடண்ட் உணவுகளான கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், இலவங்கப்பட்டை, கொட்டைகள் முதலியவற்றை மூளைக்கு நல்லது என பரிந்துரைக்கின்றனர்.

ஞாபக சக்தியை பெருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

ஆயுர்வேதத்தின் படி பித்ததோஷம் மூளை ஒரு விஷயத்தை கிரகிக்க உதவுகிறது. கபதோஷம் அதை ‘சேமித்து’ வைக்கிறது. இவற்றை தூண்டும் மூலிகைகள் அதிமதுரம் – கப தோஷத்தை சீராக்கும். மூளைக்கு உயிரூட்டும் டானிக். குடூசி (Tinospara Cardi) மற்றும் சங்கு புஷ்பி பித்த தோஷத்தை போக்கும்.தவிர பிரம்மி (Bacopa Monnieri) ஞாபக சக்தியை தூண்டுவதில் சிறந்த மூலிகையாகும். இதில் உள்ள பொருட்கள் மூளையில் புரதம் செறிக்க உதவும்.

வல்லாரை (Centella Asiatica) யும் மூளைக்கு ரத்தம் பாய உதவும். குறிப்பாக ஞாபக சக்தியையும் பொதுவாக மூளையின் சக்தியையும் மேம்படுத்தும் மற்றொரு மூலிகை அஸ்வகந்தா. இது ஒரு சிறந்த மூலிகை டானிக்.

வசம்பு – நரம்புகளை வலுப்படுத்தி ஞாபகசக்தியை பெருக்குகிறது. ‘அம்னீசியா’ எனும் ஞாபக மறதி நோய்க்கு நல்ல மருந்து. ஞாபக சக்தியையும், மூளையின் திறனையும் அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகள் சிறந்தவை. அவற்றால் குறைந்த பட்ச பக்க விளைவுகள் தான் ஏற்படலாம். பாதுகாப்பானவை.


Spread the love